Skip to main content

கலைஞர் செய்த தவறும், ஜெயலலிதாவின் நாடகமும் - சுப்ரமணியன் ஸ்வாமி சிறப்பு பேட்டி

 

subramanian swamy interview about karunanidhi and jayalalitha

 

ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் சுவாமி அப்போதைய தனது அரசியல் பார்வை குறித்து நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி 21.2.1990 நக்கீரன் இதழில் வெளியானது. 

 

ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் சுப்பிரமணிய சாமி நக்கீரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி...

 

என்னை பொறுத்தவரை ராஜீவ் ஆட்சிக்கும் வி.பி.சிங்.ஆட்சிக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இருவருமே காங்கிரஸ்காரர்கள் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். தேசிய முன்னணி தேர்தல் வாக்குறுதிகளில், போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். ஆனால்,என்ன நடந்தது? நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்காக, ஆதாயம் பெறும் நோக்கத்தை வைத்துதான் ''கண்துடைப்பு'' குற்ற அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். தேர்தல் முடிந்தால் போபர்ஸ் செய்தியை மறந்து விடுவார்கள். போபர்ஸ் ஊழல் நடந்ததே அருண்நேரு (ராஜீவ் காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர்) மூலமாகத்தான்! அப்புறம் எப்படி இவர்களிடம் நடவடிக்கையை நாம் எதிர்பார்க்க முடியும்.

 

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்கள் பெற்று அதிகப்படியான மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டால், கம்யூனிஸ்ட் கட்சியினர் நிச்சயம் வி.பி.சிங்குக்கு ஆதரவுதர மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், பாரதிய ஜனதாவின் வளர்ச்சியால் கம்யூனிஸ்ட்கள் பயப்படுகின்றனர் என்பதே உண்மை. ஆகவே வி.பி.சிங் ஆட்சியின் ஆயுட்காலமே இன்னும் ஆறு மாதம் மட்டுமே!

 

வி.பி.சிங் பாதுகாப்பு வளையம் இல்லாமல் பஞ்சாப் சென்றதை அவருடைய கட்சியினரும், பத்திரிகைகளும் சரித்திர சாதனை என்று சொல்லுகின்றன. அவரை இப்போது போகச் சொல்லுங்கள் பார்ப்போம்!

 

பஞ்சாப் பிரச்சனையால்தான் இந்திராகாந்தி கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான பஞ்சாபியர் கொல்லப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி பதவி ஏற்றதால் அவருக்கு பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டது. வி.பி.சிங். நிலையில் யாராக இருந்தாலும் பஞ்சாபிற்குள் செல்ல பாதுகாப்பு தேவை இல்லை. அடுத்து பஞ்சாப் படுகொலையின் காரணகர்த்தா அமைச்சர் அருண்நேரு தான். தன் அமைச்சரை மீறி பஞ்சாப் பிரச்னையில் தலையிட வி.பி.சிங். விரும்பவும் மாட்டார். விரும்பவும் முடியாது. இட ஒதுக்கீடு பிரச்சனையில் ஷெட்யூல்டு  இனத்தினர் விரும்பும் வரை அவர்களுக்கான ஒதுக்கீட்டை மாற்றக் கூடாது. அன்று முஸ்லீம்களுக்காக ஜின்னா பாகிஸ்தானை பிரித்து கேட்டது போல் அம்பேத்கர் கேட்டிருந்தால் இந்தியாவின் நிலை என்ன? அந்த ஒரு நன்றிக்கடனுக்காகவாவது அவர்கள் விரும்பும் வரை இட ஒதுக்கீடு இருந்தே ஆக வேண்டும். 

 

இந்தியாவை எதிர்நோக்கியுள்ள காஷ்மீர் பிரச்சனையில், தீவிரவாதிகளின் பிடியில் உள்ள, அவர்களால் பகிரங்கப்படுத்தப்பட்ட ''ஆஸாத் காஷ்மீரை''கைப்பற்றுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்.

 

நான் அகில இந்திய அரசியலை நோக்குவதற்கு சமமாகவே தமிழ்நாடு அரசியலையும் கவனித்து வருகிறேன். ஆளும்கட்சியான திமுகவும், அதன் தலைவரான முதலமைச்சர் கருணாநிதியும் இன்னும் திருந்தவே இல்லை. முன்பு ஆங்காங்கு தொண்டர்கள் கலெக்சன் செய்துவந்த நிலை மாறி, இப்போது கருணாநிதியே நேரடி கலெக்சனில் ஈடுபடுகிறார்.

 

கருணாநிதி பொதுவாழ்வில் பொன்விழா கண்டு, முதலமைச்சர் ஆகியிருந்தாலும், அப்பதவிக்கு தகுந்தமாதிரி நடக்க வேண்டாமா?  உதாரணமாக, ஜனதாதள செயல்வீரர்கள் கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி!

 

இவர் அங்கு சென்றது முதல் தவறு! அந்த கூட்டத்தில் பேச முயலும்போது அவமானப்பட்டது அடுத்த தவறு. கூச்சல் குழப்பத்துடன் பேசியது அதற்கடுத்த தவறு. இதில் எல்லாம் பெரியதவறு சட்டம் தன் கடமையை செய்யும் என்று பேசி, குறிப்பிட்ட நபர்களை கைது செய்தது! அடுத்தகட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாதவரா கருணாநிதி. இல்லை! நீங்கள் எழுதியது போல் கருணாநிதிதான் ஜனதாதள செயல்தலைவர் போல் அன்று நடந்து கொண்டார். 

 

அதேபோல் ஜெயலலிதா....அடிக்கடி அரசியல் விலகல் நாடகம் நடத்துவதே அவருடைய அரசியலாக இருக்கிறது. சினிமாக்காரங்க அப்படிதான்! திருத்த முடியாது. ஆனால், தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தால் ஜெயலலிதா தன் நிலையில் இருந்து நிச்சயம் மாறுபடுவார்.

 

இப்போது, ராஜீவ் காந்திக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக பேசி வருகின்றனர். நான் யாருடன் தொடர்பு வைத்தாலும் அதை பகிரங்கமாகவே செய்வேன். ஏனென்றால்,நான் உண்மையான அரசியல்வாதி.