கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கருங்காலி என்ற சொல்லுக்கான பெயர்க்காரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"தோகத்தி மரத்தைத்தான் கருங்காலி மரம் என்று அழைப்பார்கள். நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் தோகத்தி கருமை நிறத்தில் இருக்கும். அந்த மரத்தை அரிவாள் கொண்டு வெட்டவே முடியாது. கருங்காலி மரக்கட்டை கோடாலி, ஈட்டி, வேல் கம்பு செய்வதற்குப் பயன்படும். அந்தக் கட்டையை பாறையில் அடித்தால்கூட உடையாது, தெறிக்காது.
கருங்காலிப் பயலே என்று சிலர் திட்டி கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்? தற்போது கருங்காலி மரம் வெட்ட நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் காலத்தில் கருங்காலியை வெட்ட வேண்டுமென்றால் கோடாரியைத்தான் பயன்படுத்துவார்கள். கோடாரி வலிமையாக இருக்க வேண்டுமென்பதால் கருங்காலி கட்டையில்தான் அதன் கைப்பிடி செய்யப்பட்டிருக்கும். கருங்காலி கட்டையில் செய்யப்பட்ட கோடாரி கருங்காலி மரத்தை வெட்டவே பயன்படுவதால், தன்னுடைய இனத்தை காட்டிக்கொடுப்பவனை குறிப்பிட கருங்காலி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி என்பதற்கான பெயர்க்காரணம் இதுதான்".