Skip to main content

‘பத்து சதவீத பணக்காரர்களால் பசியின் பிடியில் இந்தியா’ மே 28  - உலகப் பசி தினம்

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

World Hunger Day

 


திருவள்ளுவர் கூறுகிறார்;

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

 

இதன் பொருள் - தவ வலிமை உடையவரின் வலிமையானது பசியை பொறுத்துக்கொள்வதாகும். அதுவும்கூட, பசியுடன் உள்ளவருக்கு உணவு கொடுத்துப் பசியைப் போக்குபவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதேயாகும்.

 

பசி, பிணி, பகை இல்லாததே நாடு என்கிறார் வள்ளுவர். பசியும்கூட ஒரு பிணியாகவே பார்க்கப்படுகிறது. இந்த உலகத்தில் பசியால் இறப்போரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அதுபோலவே, உணவை வீணாக்கி குப்பையில் கொட்டுவோரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டேதான் போகிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்ந்துவருவதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

 

இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களில், 80 கோடி பேர் ஏழைகள் என்பதை ஒத்துக்கொள்கிறது மத்திய அரசு.  2020இல், ஊரடங்குக்கான நலத்திட்ட அறிவிப்பு உரையில், இந்தியாவில் 80 கோடி ஏழைகள் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். 

 

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? வளம் மிகுந்த இந்திய தேசத்தில்,  இந்தியர்கள் 80  கோடி பேர் ஏன் ஏழைகளாக இருக்கின்றனர்? இத்தனைக்கும், உலகில் மிகக் கடினமான உழைப்பாளிகளாக இந்தியர்கள் கருதப்படுகின்றனர். ஆனாலும், வீடு மட்டுமல்ல, எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல், அப்பட்டமான வறுமையைச் சந்தித்துக்கொண்டிருப்பவர்கள் நம் தேசத்தில் அனேகம் பேர்.

 

இந்திய மக்கள்தொகையில், வெறும் 10 சதவீதமே உள்ள பணக்காரர்களிடம் 80 சதவீத சொத்துகள் குவிந்திருக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வு காரணமாகவே, இந்தியாவில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது என்ற கருத்தினை, பல பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்றனர். 

 

ஈகை குறித்து நாலடியார் சொல்கிறது; 

 

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.

 

அதாவது, செல்வம் சேரும் காலத்தில் மென்மேலும் சேரும். நல்வினை முடிந்துவிட்டால் அச்செல்வத்தை இறுகப் பிடித்தாலும் அது நீங்கிப் போகும். இவ்வுண்மையை அறியாதவர், பிறருக்குப் பொருள் கொடுத்து உதவமாட்டார்கள். சேர்த்த செல்வத்தைப் பிறருக்கு மகிழ்வோடு கொடுத்து உதவ வேண்டும் என, ஒவ்வொரு மனிதனின் செயல்பாடும் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

 

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா. ஒருவரின் பசியைப் போக்கிப் பாருங்கள். அவரது முகத்தில் தெரியும் மகிழ்ச்சியில் கடவுளைக் காணமுடியும்.  அந்த ஏழையின் முகத்தில் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்றால், வேறெங்குமே கடவுளைக் காண இயலாது.

 

கரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இத்தருணத்தை, ஏழைகளின் பசியைப் போக்குவதற்கான வாய்ப்பாகக் கருதி, உதவும் கரங்களை நீட்டுவோம்! 

 

 

Next Story

"நண்பர்களின் பைகளை நிரப்பும் மத்திய அரசு" - பட்டினிக் குறியீடு குறித்து ராகுல் காந்தி விமர்சனம்...

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

rahul gandhi about hunger index

 

மத்திய அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருப்பதால்தான் ஏழைகள் பட்டினியில் இருக்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

 

ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்திற்குக் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம், வயதிற்கு குறைந்த உயரத்தைக் கொண்ட குழந்தைகளின் விகிதம் மற்றும் குழந்தை இறப்பு ஆகிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 

 

2020 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75 -ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 88 -ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 2010-14 காலகட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் சதவீதம் 15.1% ஆக இருந்தது, 2015-19-ல் இது மோசமடைந்து 17.3% ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான 'சாட்' கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில், இதனை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "இந்தியாவில் ஏழைகள் எல்லாம் பட்டினியோடு இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். 
 

 

 

Next Story

பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை...

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

global hunger index 2020

 

உலகப் பட்டினிக் குறியீட்டு நாடுகள் பட்டியலில் மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது.

 

ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்திற்குக் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம், வயதிற்கு குறைந்த உயரத்தைக் கொண்ட குழந்தைகளின் விகிதம் மற்றும் குழந்தை இறப்பு ஆகிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 

 

2020 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில், இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான வங்கதேசம் 75 -ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 88 -ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 2010-14 காலகட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் சதவீதம் 15.1% ஆக இருந்தது, 2015-19-ல் இது மோசமடைந்து 17.3% ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான 'சாட்' கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.