தமிழகத்தில் மின் கட்டணங்களை உயர்த்துகிறது தி.மு.க. அரசு. இதற்கான உத்தேச கட்டண விபரங்களை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார். இந்த மின்கட்டண உயர்வுகள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.
கடுமையான கட்டண உயர்வுகளை அறிவித்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது இடியை இறக்கியிருக்கிறீர்களே?
தமிழகத்தில் 2 கோடியே 37 லட்சம் பேர் வீடு மற்றும் குடிசைகளில் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்களில் 1 கோடி பேருக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. மேலும், 63 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு 2 ரூபாய் 15 காசுகள் மானியத்தை அரசு தருகிறது. அந்த வகையில், 1 கோடியே 63 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இந்த கட்டண உயர்வில் எந்த பாதிப்பும் இல்லை. மீதமுள்ளவர்களுக்கு மட்டும்தான் கட்டண உயர்வு. அதுவும் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்வு கிடையாது. மிகச் சொற்பமான உயர்வுதான். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மின்கட்டணம் மிகக்குறைவு. ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் நலன் காப்பதில் முதல்வர் (மு.க.ஸ்டாலின்) எப்போதும் கவனமாக இருக்கிறார்.
குறிப்பிட்ட யூனிட் பயன்படுத்துவோருக்கு இவ்வளவு கட்டணம் என இருக்கும் படிநிலைகளில் (ஸ்லாப் சிஸ்டம்) நிறைய குளறுபடிகள் இருப்பதாக சொல்லப்படுகிறதே?
ஸ்லாப் சிஸ்டத்தில் இருந்த சின்னச் சின்ன குளறுபடிகளையும் களைந்திருக்கிறோம். குறிப்பாக, இப்போது வீடுகளில் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 1,130 ரூபாய் கட்டணம் செலுத்துவார்கள். அதுவே 501 யூனிட் பயன்படுத்தி விட்டால், கூடுதலாக பயன்படுத்திய அந்த 1 யூனிட்டிற்கு மட்டுமே 656 ரூபாய் 60 காசுகள் கட்டவேண்டும். இது மக்களுக்கு மிகப் பெரிய சுமை! புதிய கட்டண உயர்வில் இதெல்லாம் நீக்கப்பட்டு சீரான ஒரே கட்டணமாக இருப்பதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது. அந்த வகையில், இரு மாதங்களுக்கு 200, 300, 400, 500, 600, 700, 800, 900 ஆகிய யூனிட்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு முறையே, மாதத்திற்கு ரூபாய் 27.50, ரூபாய் 72.50, ரூபாய் 147.50, ரூபாய் 297.50, ரூபாய் 155, ரூபாய் 275, ரூபாய் 395, ரூபாய் 565 மட்டுமே கட்டண உயர்வாக உத்தேசித்திருக்கிறோம். ஆக, ஸ்லாப் சிஸ்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் முற்றிலும் களையப்பட்டுள்ளது. மேலும், நிலைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலான கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்திருக்கிறோம்.
கட்டண உயர்வுக்கான காரணங்களை அடுக்கினாலும் கடைசியில் மக்கள் தலையில்தானே சுமை ஏற்றப்படுகிறது. இதை தி.மு.க. அரசு தவிர்த்திருக்க வேண்டுமல்லவா?
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதுமே மின்துறை குறித்த முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே, மின் கட்டணத்தை எந்தச் சூழலிலும் உயர்த்தக்கூடாது என அறிவுறுத்தியிருந்தார். அதன்படிதான் மின்வாரியம் செயலாற்றியது. இப்பவும் கூட கட்டணத்தை உயர்த்துவதில் முதல்வருக்கு உடன்பாடில்லை. ஆனால், உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம், அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மின்சாரவாரியத்தை பெரியளவில் கடனாளியாக்கி, நிர்வாகத்தை சீர்குலைத்து வைத்திருந்ததும், ஒன்றிய அரசின் தொடர்ச்சியான அழுத்தங்களும்தான். அதனாலேயே, கட்டண உயர்வு என்கிற கசப்பு மருந்தை கொஞ்சம் கொடுக்கவேண்டியதிருக்கிறது.
தமிழகத்தை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்யும் நிலையில், வாரியத்தின் கடன் சுமைக்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியை மட்டும் குற்றம்சாட்டுவது எப்படி சரியாகும்?
ஆட்சிப் பொறுப்பிலிருந்து தி.மு.க. 2011-ல் விலகியபோது, மின்சார வாரியத்தின் கடன் 43,493 கோடியாக இருந்தது. அதன்பிறகு அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்த கடன் சுமை 3 மடங்கு அதிகரித்து தற்போது ரூ.1,59,823 கோடியாக இருக்கிறது. அதேபோல ரூ.4,588 கோடியாக இருந்த வங்கியின் வட்டித் தொகை தற்போது ரூ.16,511 கோடியாக உயர்ந்துவிட்டது. இதுமட்டுமல்ல, 2011-ல் ரூ.18,954 கோடியாக இருந்த வாரியத்தின் நிதி இழப்பு, அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.94,312 கோடியாக உயர்ந்து கடந்த 2021 மார்ச் 30-ந் தேதி ரூ.1,13,266 கோடியாக நிதி இழப்பு அதிகரித்தது. தவிர, 2006-2011 தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் அ.தி.மு.க.வின் ஆட்சியில் உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. இதனால் திட்டத்தின் மூலதன செலவுகள், கட்டுமானத்தின் மீதான வட்டி ஆகியவை ரூ.12,647 கோடியாக அதிகரித்துவிட்டது. மேலும், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தனர். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்ததால் வாரியத்தை கடனாளியாக்கி வைத்திருந்த அ.தி.மு.க.தான் முழுப்பொறுப்பு. அதனை மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.
கட்டணத்தை நீங்கள் உயர்த்திவிட்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு மீது குற்றம்சாட்டுகிறீர்களே?
அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகளால் வாரியத்தின் கடன் சுமை அதிகரித்த நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துமாறு ஒன்றிய அரசின் எரிசக்தித் துறை அமைச்சகம் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தே வந்தது. இது குறித்து 28 முறை கடிதம் எழுதியிருக்கிறது. "மின் கட்டணத்தை உயர்த்தவில்லை எனில், ரூ.10,793 கோடி ரூபாய் மானியத்தை நிறுத்துவோம். திட்டங்களுக்கான கடன் உதவி ரூ.30,230 கோடி ரூபாய் நிறுத்தப்படும், புதிய திட்டங்கள் தொடங்க முடியாது என்றெல்லாம் ஒன்றிய அரசு மிரட்டியது. தமிழக மின்வாரியத்துக்கு கடன் உதவி செய்யக்கூடாது' என ரிசர்வ் வங்கிக்கு கடிதமும் எழுதியது ஒன்றிய அரசு. மேலும், கட்டணத்தை உயர்த்த நாங்கள் மறுத்ததால், ஆத்மாநிர்பார் திட்டத் தின் கீழ் வழங்கவேண்டிய ரூ.3,435 கோடியை நிறுத்தி வைத்துவிட்டனர். ஒன்றிய அரசினால் இப்படி பல நெருக்கடிகள் தொடர்ந்த தால்தான் கட்டண உயர்வுக்குத் தள்ளப்பட்டோம்.
தி.மு.க. ஆட்சியமைத்து இந்த ஓராண்டு காலத்தில் மின் துறையில் நீங்கள் என்ன சாதித்திருக்கிறீர்கள்? வாரியத்தின் சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய மின் திட்டங்களுக்கான எந்த முயற்சிகளும் இல்லையே?
ஒன்றிய அரசின் உதய் திட்டத்தில் அ.தி.மு.க. கையெழுத்திட்டதால்தான் இன்றைக்கு மின்கட்டணத்தை உயர்த்துங்கள் என்று ஒன்றிய அரசு நம்மை மிரட்டுகிறது. இருப்பினும் முந்தைய அ.தி.மு.க. அரசால் ஏற்பட்ட நிர்வாக சீர்கேட்டை மேம்படுத்தியிருக்கிறோம். இதனால், கடந்த 1 ஆண்டில் மட்டும் 2,200 கோடி ரூபாயை மின்சார வாரியம் சேமித்திருக்கிறது. 2006- 2011 தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டதால், முதலில் அந்த திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து நிறைவேற்றும் பணிகளை துரிதப்படுத்தியிருக்கிறோம். இது செயல்பாட்டுக்கு வரும்போது 6,220 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும். வெளிச்சந்தையில் கொள்முதல் செய்வதும் குறையும். முடக்கப்பட்ட முந்தைய திட்டங்கள் நடைமுறைக்கு வந்ததும் புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கான முயற்சிகள் எடுக்கப்படும். தவிர, மாவட்டத்துக்கு ஒரு சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கும் திட்டம், 10,000 மெகாவாட் நீர்மின்சார உற்பத்தி திட்டம், 2000 மெகாவாட் எரிவாயு மின்சார உற்பத்தி திட்டம் ஆகியவற்றின் பணிகள் வேகமெடுத்துள்ளன. மின்வழித்தடங்களில் ஏற்படும் மின் இழப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் 4 லட்சம் விவசாயிகளில் கடந்த 1 ஆண்டில் மட்டும் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 50,000 இணைப்புகள் கொடுக்கப்படவிருக்கிறது. அத்யாவசியமும் அவசரமானதுமான பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதத்திற்கு ஒருமுறை மின் ரீடிங் எடுக்கும் முறையை ஏன் அமல்படுத்த மறுக்கிறீர்கள்?
வாரியத்தில் பணியாளர்கள் பற்றாக்குறைதான் இதற்கு காரணம். ஸ்மார்ட் மீட்டர் தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. அது அமலுக்கு வரும்போது மாதம் ஒருமுறை மின் ரீடிங்கை அமல்படுத்துவோம். நிச்சயம் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும்.
ஒன்றிய அரசு நெருக்கடி தந்தபோதும் கட்டணத்தை உயர்த்தவில்லை என்கிறது அ.தி.மு.க. அத்துடன், கட்டண உயர்வை எதிர்த்து அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறதே?
அ.தி.மு.க. ஆட்சியில் 37 சதவீத கட்டண உயர்வு நடந்திருக்கிறது. தற்போதைய கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வுமே காரணம் என்கிற நிலையில், தி.மு.க.வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அந்தக் கட்சிகளுக்கு எந்த தார்மீக தகுதியும் கிடையாது.