நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 3,998. இதில், 411 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். நாம் தமிழர் கட்சியைத் தவிர வேறு எந்தப் பிரதான கட்சியும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்குப் பெரிய அளவில் இடம் ஒதுக்கவில்லை. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ள மாநிலத்தில், பெண்ணுரிமை, சமத்துவம் பேசும் மாநிலத்தில் வெறும் 411 பெண் வேட்பாளர்களே இந்தத் தேர்தல் போட்டியிட்டனர். அதில் வெறும் 12 பேர் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் செல்கின்றனர். சதவீத கணக்குப்படி பார்த்தால் வெறும் 5 சதவீதம் மட்டுமே.
அந்த 12 வேட்பாளர்கள் யார், அவர்களுள் எத்தனை பேர் ஏற்கனவே சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளை அலங்கரித்தவர்கள், யார் யாரெல்லாம் தங்களது கன்னிப் பேச்சை பேசவிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
1. வரலட்சுமி, செங்கல்பட்டு தொகுதி:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு தொகுதியில் 2016 தேர்தலில் போட்டியிட்டு திமுக சார்பில் வெற்றி பெற்றவர் வரலட்சுமி மதுசூதனன். இம்முறையும் இவர் தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் வரலட்சுமியும், அதிமுக சார்பில் கஜேந்திரனும் போட்டியிட்டனர். இதில் வரலட்சுமி மதுசூதனன், 26,665 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
2. மரகதம் குமரவேல், மதுராந்தகம் தொகுதி:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் இம்முறை போட்டியிட்ட மரகதம், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானவர். இம்முறை மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டார். இதில் மரகதம், 3,570 வாக்குகள் வித்தியாசத்தில் மல்லை சத்யாவை வென்றார்.
3. அமுலு, குடியாத்தம் தொகுதி:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதியில் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்றவர் அமுலு. இவருக்கு இம்முறை குடியாத்தம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பரிதா போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அமுலு, 6,901 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் பரிதாவை வென்றார். சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு பேசப்போகும் எம்.எல்.ஏ.
4. சித்ரா, ஏற்காடு தொகுதி:
ஏற்காடு தொகுதியில் 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சித்ரா. இவர் மீண்டும் இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டார். இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சித்ரா, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை 25,955 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
5. கயல்விழி, தாராபுரம் தொகுதி:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி, 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய தொகுதிகளில் ஒன்று. காரணம், தேர்தலுக்கு முன்பாக திமுக இந்து விரோதி கட்சி, கறுப்பர் கூட்டம் எனும் யூ-ட்யூப் சேனல் தமிழ்க் கடவுள் முருகனை இழிவு செய்துவிட்டனர் என வேல் யாத்திரை எல்லாம் நடத்தியவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். இவர் இந்தத் தேர்தலில் களம் இறங்கிய தொகுதி தாராபுரம். அதனால் இத்தொகுதிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இவரை எதிர்த்து திமுக சார்பில், முதல் தேர்தலை சந்திக்க கயல்விழியை வேட்பாளராக இறக்கியது திமுக. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட கயல்விழி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எல்.முருகனை 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவரும் சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு பேச இருக்கிறார்.
6. மருத்துவர் சரஸ்வதி, மொடக்குறிச்சி தொகுதி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியும் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதிகம் எதிர்பார்த்த தொகுதியாக இருந்தது. காரணம் இந்தத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டவர், மத்திய, மாநில அமைச்சர் பதவிகளை வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவின் மூத்த நிர்வாகியும் ஆவார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் புதுமுக வேட்பாளராக மருத்துவர் சி.சரஸ்வதி நிறுத்தப்பட்டார். இதில், மருத்துவர் சரஸ்வதி, 281 வாக்குகளை அதிகம் பெற்று சுப்புலட்சுமி ஜெகதீசனை வென்றார். சரஸ்வதி சட்டமன்றத்தில் தனது கன்னிப் பேச்சு பேச இருக்கிறார்.
7. வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி:
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்குத் தொகுதி, பாஜக வானதி சீனிவாசன் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட ஸ்டார் தொகுதியாக மாறியது. கமல்ஹாசன், சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் எனப் பேச்சுகள் எழுந்தபோது வேட்பாளர்கள் பெயர்ப் பட்டியலில் அவர் பெயர் கோவை தெற்குத் தொகுதியில் சேர்க்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, இந்தத் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோற்றுப்போன வானதி சீனிவாசனுக்கு வழங்கியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டு மயூரா குமார் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். தீவிரமான மும்முனைப் போட்டி களமானது கோவை தெற்கு. இறுதியில் மே 2 வாக்கு எண்ணும் அன்றும் மூவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். ஒரு கட்டத்தில் மயூராவை கீழே இறக்கிவிட்டு வானதியும் கமல்ஹாசனும் போட்டியில் இருந்தனர். கடைசி சுற்று முடிவில் மநீம தலைவர் கமல்ஹாசனை 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வானதி சீனிவாசன் வென்றார். வானதி சீனிவாசனின் கன்னிப் பேச்சும் இம்முறை சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது.
8 தேன்மொழி, நிலக்கோட்டை தொகுதி:
அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். போட்டியிடும் தொகுதிகளுடன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியின் பெயரும் வெளியானது. நிலக்கோட்டை அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2006ஆம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதன்பிறகு நடந்த 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
2016ல் நடந்த தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் தங்கதுரை போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளில், இவர் டிடிவி தினகரன் அணிக்குச் சென்றார். இதனால், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. அதனைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிலக்கோட்டை தொகுதியில் தேன்மொழி போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரை எதிர்த்து திமுக சார்பில் முருகவேல் ராஜன் களமிறக்கப்பட்டார். இதில், 27618 வாக்குகள் வித்தியாசத்தில் முருகவேல் ராஜனை தோற்கடித்தார் தேன்மொழி.
9. சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி:
கரூர் மாவட்டம், கிரஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் சிவகாமசுந்தரி போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில், முத்துக்குமார் என்கிற தானேஷ் போட்டியிட்டார். தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட சிவகாமசுந்தரி 30,814 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் என்கிற தானேஷை தோற்கடித்தார். இவரின் கன்னிப் பேச்சும் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது.
10. தமிழரசி, மானாமதுரை தொகுதி:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை தொகுதியில் 2006 முதல் தற்போது வரை அதிமுகவே தொடர் வெற்றியைப் பெற்று தொகுதியைத் தன் கைவசம் வைத்திருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்தத் தொகுதியிலும் 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலிலும் எஸ்.நாகராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பாக எஸ்.நாகராஜன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, 2006ல் சமயநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த ஆட்சிக் காலத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்த தமிழரசி களமிறக்கப்பட்டார். பல வருடங்களாக அதிமுக வசம் இருந்த தொகுதியை இந்த முறை 1,4091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தமிழரசி கைப்பற்றினார்.
11. கீதாஜீவன், தூத்துக்குடி தொகுதி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. கீதா ஜீவன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜயசீலன் போட்டியிட்டார். இதில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயசீலனை தோற்கடித்தார்.
12. விஜயதரணி, விளவங்கோடு தொகுதி:
கன்னியாகுமரி மாவட்டம் விளங்கோடு தொகுதியில் கடந்த இரு முறையாக காங்கிரஸ் சார்பாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதரணி. இந்த முறையும் காங்கிரஸுக்குள் நடந்த பல பிரச்சனைகளைத் தாண்டி விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜெயசீலன் போட்டியிட்டார். இதில், விஜயதரணி 28,669 வாக்குகளை அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் ஜெயசீலனை வென்றார்.