Skip to main content

விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6 

Published on 25/08/2020 | Edited on 25/08/2020
ramesh kanna



இன்னைக்கு என் ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்கும்போது திடீர்னு வாட்ஸப்பில் சில ஃபோட்டோக்கள் வந்தது. கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளுக்காக நிறைய மெஸேஜ்கள் வந்தன. அந்த கள்ளமில்லா சிரிப்ப சில நாட்கள் இடைவெளிக்குப் பின் பாக்குறது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு மட்டுமில்ல, நெறய பேருக்கு அவர் உடல் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியாதான் இருக்கும். இன்னும் நெறய பேருக்கு அவரை பழையபடி பாக்கணும்னு ஒரு ஏக்கமே இருக்கும். நானும் அவர்களில் ஒருவன்.

என்ன காரணம்...? அவர் ரொம்ப வித்தியாசமானவர், தனித்துவமானவர். சினிமா உலகத்துல அவர் கண்டிப்பா தனித்துவமானவர்தான். ஏன்னா, சினிமாவில் இருந்தபோதும் சரி அரசியலுக்கு வந்தபின்னும் சரி, அவர் மக்களோட நெருக்கமா இருந்தார். அவர் அளவுக்கு ஃபேமஸான வேற எந்த ஹீரோவும் அவர் அளவுக்கு இறங்கி மக்களை சந்திக்கல, இறங்கி வேலைகள் செஞ்சதில்ல. அவரை நம்பலாம், அவரை நம்பி எதுவும் செய்யலாம், நம்புறவங்கள கைவிடமாட்டார். அந்த வகையில் அவர் உண்மையிலேயே  கேப்டன்தான்.

 

dharmachakkaram



1995-96 சமயம்... 'தர்மசக்கரம்' பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்துக்கிட்டுருந்தது. நான் அஸோசியேட்டா வேலை செய்தேன். அந்தப் படத்துல ஒரு சின்ன கதாபாத்திரமும் பண்ணியிருக்கேன். அப்போதெல்லாம் விஜயகாந்த் சார்க்கு படம் பண்ணணும்னா முதலில் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்கிட்டதான் கதை சொல்லணும். நான், என் நண்பன் விவேக் கூடப் போய் ராவுத்தர்கிட்ட கதை சொன்னேன். அவர், "சூப்பரா இருக்கேப்பா... நீ போய் பொள்ளாச்சியில விஜிகிட்ட பேசு. நான் ஃபோன்ல சொல்லிடுறேன்"னு சொன்னார். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.

தர்மசக்கரம் ஷூட்டிங்கும் அமைஞ்சதால அப்போவே விஜயகாந்த் சார்கிட்ட பேசுனேன். "கதை ராவுத்தர் கேட்டாச்சுல்ல, பிடிச்சுருச்சுன்னா ஒன்னும் கவலையில்ல பண்ணிடலாம். நீ கவலப்படாத"னு சொன்னார். சந்தோஷம் அதிகமாச்சு. எல்லாமே ஒத்து வந்தாலும் நம்ம ராசின்னு ஒன்னு இருக்கு. ராசி, அதிர்ஷ்டம் எல்லாம் நம்பாதவர்களைக் கூட சினிமா நம்ப வச்சுடும். அந்த அளவுக்கு நிலையாமை உள்ளது சினிமா. நான் பொள்ளாச்சியில் ஷூட்டிங் முடிச்சுட்டு வருவதற்குள்ள இங்க சென்னையில கேப்டன் படம் இயக்குற வாய்ப்பையும் முடிச்சு வச்சுட்டாங்க. ஆமா, 'நானும் ரமேஷ்கண்ணாவும் சேர்ந்துதான் இந்தப் படத்தை இயக்கப் போறோம்'னு விவேக் சொல்ல, அது குழப்பமாகி அப்புறம் அந்த படம் இயக்கும் வாய்ப்பே போய்விட்டது.

 

 

 

vanathai pola



 

vanathai pola2



கோடி கோடி பேர் இந்த உலகத்தில் இருந்தாலும் நம்ம வாழ்க்கையென்பது ஒரு நூறு பேர் கூடத்தானே? சினிமாவில் இருக்கவங்களுக்கு வேணா அது ஒரு ஐநூறு பேரா இருக்கலாம். ஆனாலும் மனசுக்கு நெருக்கமானவங்க, மனமுவந்து பழகுறவங்கன்னு எடுத்துக்கிட்டா அதுக்குள்ளேதான் வரும். அந்த மாதிரி சுத்தி சுத்தி திரும்பவும் விஜயகாந்த் சார்கிட்ட வந்துட்டேன். ஆமா, விக்ரமன் சார் 'வானத்தைப் போல' படம் ஆரம்பிச்சார். அதுலயும் எனக்கு நல்ல கேரக்டர். அந்தப் படத்துல செந்தில் சார், நாங்க, எல்லாம் வச்சிருந்த கடையையும் அந்த வடையையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டாங்க. அந்த அளவு காமெடியிலும் சரி, சென்டிமென்டிலும் சரி, வானத்தைப் போல, வானத்தைப் போலதான். மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம். அடுத்து, 'மரியாதை' படத்திலும் அவருடன் நடித்தேன். ஆனால், கடைசி வரை அவருக்காக நான் ரெடி பண்ணிய கதையை அவரை வைத்து இயக்க முடியவில்லை. அவரை வைத்து எடுக்க முடியலையே தவிர அந்த கதை படமாகி வெற்றியும் பெற்றது. ஆமா, 'ஆதவன்' கதைதான் அது. சூர்யா நடிச்சார், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார், நான் இயக்கவில்லை. ராசி... ராசி... ஹி... ஹி...

அரசியல் வருவதற்காக, வந்த பிறகு சிலர் சில புதிய விஷயங்களை செய்வார்கள். அதற்கு முன்ன அப்படி இருந்திருப்பாங்களான்னு தெரியாது. ஆனா, விஜயகாந்த் சார்கிட்ட ஏற்கனவே இருந்த விஷயங்கள், அவர் ஏற்கனவே செய்த செயல்கள், அவரை அரசியலுக்கானவராக உருவாக்குச்சு. படங்களில் தொடர்ந்து நடித்தபொழுதே ஷூட்டிங்கில் அவர் கேரவனிலோ தனியாகவோ போய் உட்கார்ந்து நான் பார்த்ததேயில்லை. நடுநாயகமாக நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பார். ஷூட்டிங்குக்கு எதுவும் தேவையென்றால் உடனே ஏற்பாடு செய்வார். எல்லார்கிட்டயும் 'சாப்பிட்டாச்சா, வேற எதும் குறைவா இருக்கா'னு கேட்டு செய்வார். யார் வேணும்னாலும் அவரை அணுகலாம். அப்படித்தான் இருந்தார்.

அப்பொழுது இருந்த அந்த எளிதாக அணுகும் தன்மை, அரசியலுக்கு வந்த பின்னும் இருக்கு. இப்பவும் நான் அவரது வீட்டுக்கு நேரா போனா, உடனே உள்ள வர சொல்லி பார்ப்பார். நான் நெருங்கி பழகுன ரஜினி சார், கமல் சார்கிட்டக் கூட இது முடியாது. ஏன்னா, அவர்களுக்கு பல பிரச்சனைகள், தடைகள் இருக்கு. முன்னாடியே நேரம் கேட்டு, சந்திக்கப் போறது அவர்களுக்கு சரியா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் போகணும். அவர்கள் மேல் தவறல்ல, புகழ் பெற்றவர்கள், பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள் அப்படித்தான் பிஸியா இருப்பாங்க. ஆனால் அந்த நிலையிலும் எளிதாய் அணுக முடிந்தவராக இருப்பது கேப்டனின் குணம்.


 

 

vanaithaipola success meet



தமிழ் சினிமாவில் ஃப்லிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் என்றாலே ஒதுக்கிய காலத்தில், அவர்களை அழைத்து ஆதரித்து படம் செய்து அவர்களுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கியவர். ஆர்.கே.செல்வமணி சாருக்கெல்லாம் முதன் முதலில் நல்ல சம்பளம் வாங்கித்தந்தார்.  அவரோட தைரியமும் யாருக்கும் வராது. ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலில் இறங்கி எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். அதுக்கு முன்னாடி ஜெயலலிதா ஆட்சியிலேயே கலைஞருக்கு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தினார். கலைஞர் செய்வது தவறென்று நினைத்தால், அதையும் சொல்லுவார். மீடியாவை சரியாகக் கையாளவில்லைனு அவர் மேல் குற்றச்சாட்டு இருக்கு. ஆனா, கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்ட நிருபர்களைத்தான் அவர் திட்டினார். மற்றபடி அவருக்கு பத்திரிகையாளர்கள் நெருக்கம்தான்.

நடிகர் சங்க தலைவரா இருந்து அவர் செஞ்சது பெரிய வேலை. கடனை அடைத்தது, பல பிரச்சனைகளை முடித்தது என்று...அவர் இறங்கி வேலை செய்தார். அவரோட பிறந்த நாளன்னைக்கு அவரை சந்திக்கப் போவேன். அவர் பிஸியா இருக்காருன்னு நினைச்சு நாம கிளம்புனா, விடமாட்டார். 'இருங்க ரமேஷ்கண்ணா போலாம், மெதுவா'ன்னு உட்கார வச்சு நிறைய பேசுவார். ஒரு முறை, ரோட்டில் என் கார் பஞ்சராகி நின்றுகொண்டிருந்தேன். அவர் காரில் வந்தார், பிரேமலதாவும் இருந்தாங்க. என்னைப் பாத்துட்டு நிறுத்திட்டார். அவர் கூட மூணு நாலு கார் வந்தது. மக்களும் அவரை கவனிச்சுட்டாங்க. 'என்னாச்சு ரமேஷ் கண்ணா... டேய், இறங்கு என்னன்னு பாரு'னு சொல்றார். எனக்கு ஒரே பதற்றம், கூட்டம் கூடுது. "அண்ணே...நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கிறேன், நான் சரி பண்ணிட்டுப் போறேன்"னு சொல்றேன் கேக்கமாட்டேன்கிறார். கஷ்டப்பட்டு அனுப்புனேன். அவர் உயரத்துக்கு, என்னால் அவருக்கு ஆகப்போவது எதுவுமில்லை. ஆனாலும் அப்படி நடந்துகொண்டார், அவர்தான் கேப்டன்.

அவர் உடல்நலம் பெற்று வருவதாகக் கேள்விப்பட்டேன், மகிழ்ச்சி. மீண்டும் அரசியலில் முழுவீச்சில் இறங்கவேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றிகள் பெறுவார். 'அவரை இவ்வளவு புகழ்றியே... நீ ஏன் அவர் கட்சியில் சேரல'னு கேக்குறீங்களா? நான் ஒருமுறை அவர்கிட்ட கேட்டேன், "அண்ணே... கட்சியில சேருறேன்'னு. வேற யாரா இருந்தாலும் பிரச்சாரத்துக்காவது பயன்படுவாங்கன்னு சேர்த்திருப்பாங்க. ஆனா அவரு, "சும்மா இரு ரமேஷ்கண்ணா, நீ போய் குடும்பத்தைப் பாரு. உனக்கு இந்த பிரச்னையெல்லாம் வேணாம். இது என் வேலை, நான் பாத்துக்குறேன். உனக்கு எதுவும் தேவைன்னா மட்டும் என்கிட்டே சொல்லு" என்று சொன்னார். அவர்தான் கேப்டன்!
 

 

முந்தைய பகுதி:

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5

 

 

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

கடலூர் உழவர் சந்தை பகுதியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
DMDK Treasurer Sudish Vote Collection at Cuddalore Farmers Market Area

தேமுதிக பொருளாளர் சுதீஷ், கடலூர் நாடாளுமன்ற  அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு   குள்ளஞ்சாவடி பகுதியில்  வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,  இந்த தொகுதியில் போட்டியிடும் சிவக்கொழுந்து ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பயணித்து உள்ளார். 2006 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அதிமுக, தேமுதிக கூட்டணி 2011 ம் ஆண்டு பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ சிறப்பாக பணியாற்றியவர்.

அவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரியும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திமுகவில்  ரூ.500 கோடி, ஆயிரம் கோடி இருந்தா தான் எம்பி ஆக முடியும்.  இவர் வெற்றி பெற்றால் உங்கள் கோரிக்கைகள்  ஆறு மாதத்தில் தீர்த்து வைப்பார்.  கடலூர் மாவட்டம் எங்கள் சொந்த மாவட்டம்,எனது சகோதரி இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்.   வேட்பாளர்  சிவக்கொழுத்துக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்  பேசினார்.

அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சனிக்கிழமை  காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடை பயிற்சி மேற்கொண்ட வாரே தேமுதிக பொருளாளர் சுதீஷ், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து  அவர் கடலூர் உழவர் சந்தை பகுதி சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் காய்,கறி விலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆற்றியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.