முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அதிரடியாக அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதில் பேரறிவாளனுக்காக அவரது தயார் அற்புதம் அம்மாள் பல சட்டப்போராட்டங்களை நடத்திய நிலையில் பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்...
1991 ஆம் ஆண்டு - ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை தாக்குதலால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.
ஜூன் 21 1991 - இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சிவராசன் மற்றும் தனு ஆகியோர் அணிந்திருந்த வெடிகுண்டு பெல்டின் செயல்பாட்டிற்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக கூறி தனது 19 வயதில் பேரறிவாளன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு. அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (தடா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி 28, 1998 - இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும் சென்னை தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
மே 11, 1999 - இந்த வழக்கின் மேல் முறையீட்டில் 19 பேர் விடுவிக்கப்பட்டு பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இவ்வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
அக்டோபர் 8, 1999 - பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அக்டோபர் 27,1999 - தமிழக ஆளுநருக்கு இவர்கள் நால்வர் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
ஏப்ரல் 19, 2000 - நளினியின் தூக்கு தண்டனையை குறைக்க முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. மேலும் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இவர்களது தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
ஆகஸ்ட் 12, 2011 - சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவர் அனுப்பிய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாக மத்திய அரசு கூறியது.
ஆகஸ்ட் 30, 2011 - முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதே நாளில், சென்னை உயர்நீதிமன்றம் மூவரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.
பிப்ரவரி 18, 2014 - பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதற்கு அடுத்த நாளே பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 போரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.
பிப்ரவரி 20, 2014 - இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
டிசம்பர் 2015 - இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆகஸ்ட் 25, 2017 - கைது செய்யப்பட்டு 15 வருடம் கழித்து முதல் முறையாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையைச் சந்திக்க பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஜாமீன் வழங்கியது.
செப்டம்பர் 6, 2018 - பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
செப்டம்பர் 9, 2018 - இவ்வழக்கில் தொடர்புடைய 7 போரையும் விடுதலை செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
ஜனவரி 23, 2021 - 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவு குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 19, 2021: பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகும் அவரது ஜமீனை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நீட்டித்து வந்தது.
இதையடுத்து பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று(18.5.2022) அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த 32 ஆண்டுகள் பேரறிவாளனும், அவரது தாய் அற்புதம் அம்மாளும் வழக்குகளுடன் சேர்ந்து ஏகப்பட்ட வலிகளையும் சுமந்து வந்திருக்கின்றனர். பல தடைகளையும், இன்னல்களையும் தாண்டி அற்புதம் அம்மாள் ஒரு வரலாற்று அற்புதத்தையே நடத்தி இருக்கிறார்.