Skip to main content

தமிழகத்தில் வெற்றிபெற பீகாரில் இருந்து ஆட்களை கூட்டி வருகிறார்கள் - சீமான் தாக்கு!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

gh



தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின்போது சீமான் பேசியதாவது, "நீங்கள் திமுக, அதிமுகவை தோற்கடித்து விடுவியா என்று தொடர்ந்து என்னிடம் சிலர் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு ஸ்டாலின் சொன்ன ஒரு கருத்தை தற்போது சொல்கிறேன். ஸ்டாலின் என்றால் நம்மூர் ஸ்டாலின் இல்லை, ஜோசஃப் ஸ்டாலின். உலகில் வெல்ல முடியாத படை என்று ஒன்று இல்லவே இல்லை என்று அவர் கூறுகிறார். அதைப் போல இவர்கள் ஒன்றும் வெல்ல முடியாதவர்கள் அல்ல. அதிமுக, திமுக என்பது வெல்ல முடியாது படையாக நான் கருதவில்லை, இவர்கள் இருவரும் வெறும் சொறிசிறங்கு படை. இவர்களை நாம் வெல்ல முடியாதா என்ன! நாம் இவர்களுடன் போரிட்டு எல்லாம் இவர்களை வீழ்த்த வேண்டாம். அவர்களாகவே தங்களை அழித்துக்கொள்வார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.  

 

தேர்தலில் வெற்றிபெற பீகாரில் இருந்து ஆட்களைக் கூட்டி வருகிறார்கள். அவர்களுக்கு 100 கோடி சம்பளம். திமுக ஒரு அரசியல் கட்சி இல்லை, அது ஒரு குடும்பக் கட்சி. கார்ப்பரேட் நிர்வாகம் என்றால் அதற்கு திமுக மிகச் சிறந்த உதாரணம். கட்சியைக் கம்பெனியாக்கி நீண்ட காலம் ஆகிறது. ஆனால் நீங்கள் இன்னும் அவர்களுக்கு வாக்களித்து இந்த நாட்டைச் சீரழித்து வருகிறீர்கள். இவர்கள் இவ்வளவு சேவை செய்து, போராடி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல. தங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காத்தான்.

 

தற்போது ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சியில் 10 ஆண்டுகளாக இல்லாதவர்களும் மீண்டும் கொள்ளையடிக்க இந்தத் தேர்தலை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ஒரு முதலீட்டாளன் பணத்தைப் போடுவது அதைப் பல மடங்கு அதிகரிக்கவா அல்லது மக்கள் சேவைக்காகவா? மக்களாகிய நீங்கள் தெளிவாக சிந்தனை செய்து பார்க்க வேண்டும். ஒரு வேட்பாளர் வாக்கிற்கு 500 கொடுக்கிறார் அல்லது 1000 ரூபாய் கொடுக்கிறார் என்றால், அவர் வெற்றிபெற்ற பிறகு 500 கோடியை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான். லாபம் இல்லை என்றால் அவர்கள் ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் என்ன மக்கள் சேவை செய்யவா வந்திருக்கிறார்கள். நாங்கள் புதிய தேசம் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பிள்ளைகள் இந்த தேர்தலில் களமாட இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அடக்குமுறை, பாலியல் வன்கொடுமை, சாதிய பாகுபாடு இல்லாத தேசத்தை நாங்கள் நிச்சயம் அமைப்போம். எங்களுக்கு ஒரு வாய்ப்பை மட்டும்தான் உங்களிடம் கேட்கிறோம். நிச்சயம் நாங்கள் நல்லது செய்வோம். கெடுப்பவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை நல்லது செய்ய நினைக்கும் எங்களுக்கு ஒருமுறை கொடுங்கள் என்று நாங்கள் வேண்டிக் கேட்கிறோம்" என்றார்.