Skip to main content

தமிழக ஆளுனர்களின் கதை பகுதி-2

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

கலைஞர் ஆட்சியை கவிழ்க்க மறுத்த இரண்டு ஆளுநர்கள்!

 

1971 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி முதல் தமிழகத்தின் ஆளுநராக கே.கே.ஷா பொறுப்பேற்றார். இவர் கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூகநீதி திட்டங்களில் மனதை பறிகொடு்ததார். அதனால்தான் தனது பெயருக்கு முன் உள்ள கே.கே. என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களுக்கு கலைஞர் கருணாநிதி என்று விளக்கம் அளித்தார். அதாவது தனது பெயரை கலைஞர் கருணாநிதி ஷா என்று அழைப்பதை பெருமையாக நினைப்பதாக கூறினார். அந்த அளவுக்கு மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நல்லுறவு இருந்தது.

 

ஆனால், அத்தகைய ஆளுநரிடம் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியைக் கலைக்க 1971 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இந்திரா தலைமையிலான மத்திய அரசு வற்புறுத்தி கையெழுத்துப் பெற்றது. இதை அவரே பின்னர் தெரிவித்திருக்கிறார். திமுக ஆட்சி கலைப்புக்கு பிறகு மேலும் 5 மாதங்கள் அந்த பொறுப்பில் நீடித்தார்.

 


பதவியே போனாலும் ஆட்சியைக் கலைக்க துணை போக மறுத்த சுர்ஜித் சிங் பர்னாலா

 

நெருக்கடி நிலைக்காலத்தில் தமிழக ஆளுநராக 1976 ஜூன் 16 முதல் 1977 ஏப்ரல் 8 ஆம் தேதிவரை ஆளுநராக இருந்தவர் மோகன்லால் சுகாதியா. இவர் மூலமாக பல்வேறு மாநில உரிமைகள் மத்திய அரசு பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனதாக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் தோல்வி அடைந்தது. உடனே சுகாதியா தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். உடனே, 1977 ஆம் ஆணடு 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 27 ஆம் தேதிவரை 18 நாட்களுக்கு பி.கோவிந்தன் நாயர் என்பவர் தற்காலிக ஆளுநராக பொறுப்பு வகித்தார்.

 

ஜனதாக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் பிரபுதாஸ் பட்வாரி என்பவர் தமிழக ஆளுநர் ஆனார். இவர் 1977 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி முதல் 1980 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வரை இந்த பொறுப்பில் நீடித்தார். ஜனதாக் கட்சி ஆட்சி கவிழந்ததால் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததால் இவர் தனது பதவியிலிருந்து விலகினார். உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிக ஆளுநர் பொறுப்பை ஏற்றார்.

 


கலைஞர் கருணாநிதி ஷா என்று பெருமையோடு கூறிய கே.கே.ஷா

 

பின்னர் ஸ்ரீ சாதிக் அலி என்பவ் 1980 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி முதல் 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதிவரை ஆளுநராக பொறுப்பேற்றார். இவருடைய பதவிக் காலத்தில்தான்  தமிழகத்தில் எம்ஜியார் தலைமையிலான அதிமுக அரசு கவிழ்க்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட உள்குத்து காரணமாக மீண்டும் அதிமுகவே வெற்றிபெற்றது.

 

இவருக்கு அடுத்து எஸ்.எல்.குரானா ஆளுநராக பொறுப்பேற்றார். இவருடைய பதவிக்காலத்தில்தான் எம்ஜியார் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திரா ஏற்பாட்டில் எம்ஜியார் அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்திரா தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரதமரான ராஜிவ் காந்தி இந்திராவின் அனுதாப அலையை பயன்படுத்தி தேர்தல் நடத்த முடிவு செய்தார். தமிழக அரசையும் முன்கூட்டியே கலைத்துவிட்டு சட்டமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தலில் நோவுக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு என்பதாக வாக்காளர்கள் வாக்களித்து அதிமுகவை மீண்டும் வெற்றிபெறச் செய்தனர். அதன்பிறகு வாய்பேச முடியாத எம்ஜியாரின் ஆட்சியையும் இவர்தான் தாங்கிப் பிடித்தார். எம்ஜியாரின் மரணத்தைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவால் ஆட்சி கவிழ்ந்தது. அதுவரை குரானா பொறுப்பு வகித்தார்.

 


‘அதர்வைஸ்’ ஆர்.வெங்கட்ராமன் 

 

அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த பி.சி.அலெக்ஸாண்டர் என்பவரை தமிழக ஆளுநராக நியமித்தது மத்திய அரசு. ஆறு மாதங்கள் மட்டுமே ஆளுநர் ஆட்சி அமல்படுத்த முடியும் என்ற நிலையில் ஒரு ஆண்டு காலம் ஆளுநர் ஆட்சி நீடிக்கப்பட்டது. பிரதமர் ராஜிவ் காந்தியை தமிழகத்தில் கிராமங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று காங்கிரஸை பலப்படுத்த மூப்பனார் முயன்றார்.

 

ஆனால், 1989ல் தமிழகத்தில் மீண்டும் திமுக வெற்றி பெற்றது. மத்தியில் தேசிய முன்னணி வெற்றி பெற்று வி.பி.சிங் தலைமையில் ஆட்சி அமைந்தது. இதையடுத்து தேசியமுன்னணியில் இடம்பெற்ற அகாலிதளத்தின் தலைவரான சுர்ஜித் சிங் பர்னாலா தமிழகத்தின் ஆளுநரானார்.

 

பிளவுபட்ட அதிமுக ஒன்றாக இணைந்தது. மத்தியில் தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளித்த பாஜக, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவெடுத்ததை தொடர்ந்து தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அதையடுத்து மத்திய அரசு கவிழ்ந்தது. உடனே, தேசிய முன்னணியில் இடம்பெற்றிருந்த சந்திரசேகர் தலைமையில் அரசு அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தது. அதற்கு பிரதிபலனாக தமிழகத்தில் திமுக அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வற்புறுத்தப்பட்டார். அந்தச் சமயத்தில் குடியரசுத்தலைவராக ஆர்.வெங்கட்ராமன் இருந்தார். திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் பர்னாலா அறிக்கை தர மறுத்தார். இதையடுத்து ஆர்.வெங்கட்ராமன், அரசியல் சட்டம் 356 ஆவது பிரிவில் இடம்பெற்ற அதர்வைஸ் என்ற ஆங்கில வார்த்தைப் பிடித்துக்கொண்டு அதைப்பயன்படுத்தி திமுக அரசை கலைத்தார். மாநில அரசாங்கத்துக்கு ஆதரவாக மத்தியஅரசின் உத்தரவை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்த முதல் ஆளுநர் பர்னாலா என்பது குறிப்பிடத்தக்கது.

 


பொறுப்பற்று செயல்பட்ட பொறுப்பு ஆளுநர்

 

அவரைத் தொடர்ந்து பீஷ்ம நாராயண் சிங் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜிவ் காந்தி தமிழக பிரச்சாரத்துக்கு வந்தால் அவருடைய உயிருக்கு ஆபத்து என்று இரண்டு முறை எச்சரித்தார். இப்படி எச்சரிப்பது ஆளுநரின் நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது எனக் கூறப்பட்டது. அவருடைய எச்சரிக்கைப் படியே ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அவருடைய மரணத்தால் மத்தியில் காங்கிரஸ் கட்சி மைனாரிட்டி ஆட்சி அமைக்க முடிந்தது. தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைக்க முடிந்தது.

 

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட சென்னாரெட்டியைப் போல மாநில முதல்வரால் அவமானப்படுத்தப்பட்ட ஆளுநர் வேறு யாரும் இருக்க முடியாது. ஜெயலலிதாவின் முறைகேடுகள் குறித்து வழக்குத் தொடர சுப்பிரமணியசாமிக்கு இவர்தான் அனுமதி கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா, சென்னாரெட்டி தனது கையைப் பிடித்து இழுத்தார் என்று கூசாமல் பொய் பேசினார். இது தமிழக மக்கள் மத்தியில் முகச் சுழிப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் பதவியில் இருக்கும்போதே மரணம் அடைந்தார்.

 

அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து கிருஷ்ணகாந்த் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 23 நாட்களில் எம்.பாத்திமா பீவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் கலைஞர் தலைமையில் ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஐக்கிய முன்னணி ஆட்சியும் நடைபெற்ற சமயம் அது. காங்கிரஸ் விருப்பப்படி இவர் நியமிக்கப்பட்டார்.

 

ஆனால், 1998ல் பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்தாலும் ஆளுநரை மாற்றும்படி கலைஞர் கோரவில்லை என்பது முக்கியமானது. ஜெயலலிதா வழக்கில் சிறைத்தண்டனை பெற்றது இவருடைய காலகட்டத்தில்தான். 2001 தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிந்தும் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்து, தள்ளுபடியானதும் கலைஞர்தான் சதிசெய்து தடுக்கிறார் என்று பிரச்சாரம் செய்ததும் இவருடைய காலகட்டத்தில்தான்.

 

 

கோவை அதிகாரிகள் ஆய்வில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்

 

இவருக்கு அடுத்து சி.ரங்கராஜன் என்பவர் 2001 ஜூலை 3 முதல் 2002 ஜனவரி 18 ஆம் தேதி வரை தற்காலிக ஆளுநராக இருந்தார். அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 2004 நவம்பர் 3 ஆம் தேதி வரை பி.எஸ்.ராமமோகன்ராவ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தச் சமயத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திமுக முக்கிய பங்குதாரராக இருந்தது. எனவே, தனக்காக பதவியை ராஜினாமா செய்த சுர்ஜித் சிங் பர்னாலாவை தமிழக ஆளுநராக  கலைஞர் பரிந்துரைத்தார். எனவே, 2004 நவம்பர் 3 ஆம் தேதி முதல் 2011 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவர் தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்தார்.

 

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோசையா முழு பதவிக் காலத்தையும் கடத்தினார். ஜெயலலிதா ஆட்சியில் சர்ச்சைக்குள் சிக்காமல் கவனமாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் இவர்.

 

இவருடைய பதவிக்காலம் முடிந்தவுடன்  வித்தியாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதாவது மகாராஸ்டிரா ஆளுநர் பொறுப்புடன் தமிழகத்தையும் கூடுதலாக நிர்வகித்தார். இவருடைய பதவிக்காலத்தில்தான் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மொத்த மர்மத்துக்கும் இவர் சாட்சியாக இருந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது. விசாரணை கமிஷனில் இவருடைய சாட்சியம் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிலையில் இவர் தமிழக பொறுப்பை துறந்து, புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சரவை பொறுப்பில் இருக்கும் சமயத்தில் ஆளுநரே நேரடியாக நிர்வாகத்தில் தலையிடும் புதிய அத்தியாயத்தை இவர் தொடங்கி வைத்திருக்கிறார். இவருடைய இந்த அத்துமீறிய நடவடிக்கைகளை பாஜகவும் அதிமுகவும் தவிர, மற்ற அனைத்து கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன்.

 

புறவாசல் வழியாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்துக்குள் பாஜக தலையிட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.x

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.