Skip to main content

தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4

 

TamilNadu Election History part 4

 

1975 - 1977, மாநில அரசுகளிடம் இருந்த உரிமைகள் எல்லாம் நசுக்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் தேர்வு செய்யும் செய்திகள் எல்லாம் மத்திய அரசின் தணிக்கைக் குழுவுக்குச் சென்று, எந்த எந்தச் செய்திகள் வெளியாகலாம் எப்படி வெளியாகலாம் என முடிவு செய்யப்பட்டு அச்சுக்கு சென்றுகொண்டிருந்தன. கருத்துச் சுதந்திரம் என்பது சுதந்திர இந்தியாவில் கரு'மை' பூசிக்கொண்டிருக்க, ஆட்சியையும் அரசையும் பற்றி பேசுபவர்கள் சிறையில் சிதைந்து கொண்டிருந்தனர். இப்படி இந்தியா முழுக்கவே அடுத்து என்ன நடக்கும்? வாழ்வாதாரம் என்ன? நமது மண்ணுக்கான அரசியல் நம் மண்ணில் நடக்குமா எனப் பல்வேறு கேள்விகளுடன் பொதுமக்கள் தத்தளித்துக் கொண்டிருக்க, மாநில அரசியல் கட்சியினர் தங்களது மாநிலத்தின் அதிகாரத்தையும் அரசியலையும் காப்பாற்ற குரல் கொடுத்துச் சிறை சென்றுகொண்டிருந்தனர். தமிழகத்தில் மாநிலக் கட்சியான திமுக அவசரக் காலத்தைக் கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. அதேவேளையில், தமிழகத்தின் இன்னொரு மாநிலக் கட்சியான அதிமுக, இந்திராவுக்கும் அவசரக் கால நிலைக்கும் பரிபூரண ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருந்தது.

 

அதையே 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கடைப்பிடித்தது. இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்து அத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து விலக்கியது, கலைஞர் உள்ளிட்ட அமைச்சரவை மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் கொண்ட பட்டியலை அன்றைய ஆளுநர் கே.கே.ஷாவிடம் எம்.ஜி.ஆர் கொடுத்தது, கச்சத்தீவு விவகாரம், மதுவிலக்குப் பிரச்சனை போன்றவற்றை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அந்தத் தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

 

ஆட்சியில் அமர்ந்ததும் மாநிலத்தில் பெரும் மாறுதலாக, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவந்த முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான விசாரணை சட்டத்தை ரத்து செய்தார் எம்.ஜி.ஆர். இது கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டுவந்த நிலையில், 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு ஏழை எளியோர் அதிர்ந்து உறைந்திடும் அளவிற்கான மற்றொரு பெரும் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை, ‘பிற்படுத்தப்பட்டோர்கள், அவர்களுக்குரிய சலுகைகளைப் பெற அவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 9,000 ரூபாய்க்குள்ளானதாக இருக்க வேண்டும்’ என்பதே அது. இதற்குத் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகள் எழுந்தது. திமுக, திக, காங்கிரஸ் எனக் கட்சிகளும் இயக்கங்களும் போராட்டங்களை அறிவித்தன. அவர்கள் அறிவித்ததுபோல் கண்டனப் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் என அனைத்து விதங்களிலும் எதிர்ப்பு எழுந்தது. இருந்தபோதிலும் அதனை நிறைவேற்றினார் எம்.ஜி.ஆர்.

 

1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 1977ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 130 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை மட்டும் பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதற்குக் காரணங்கள், நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்துவந்த விவசாயிகளின் போராட்டம் உச்சநிலையில் இருந்தது. சில இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. அதேபோல் அரசு ஊழியர்களின் பிரச்சனை. பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான ஆணை எனப் பல பிரச்சனைகளுடன் அதிமுக அந்த தேர்தலைச் சந்தித்துத் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர். புதிதாகப் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோர் சலுகை ஆணையை ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், அப்போதுதான் 31% ஆக இருந்த இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.

 

எமர்ஜென்சியைத் தொடர்ந்து 1977-ல் ஆட்சியை இழந்த இந்திரா அரசு, இரண்டரை வருடங்கள் கழித்து 1980ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிது காலத்திற்குள், இந்தியா முழுக்க ஒன்பது மாநிலங்களின் ஆட்சியைக் கலைத்தார். அதில், ஒன்றாக தமிழகத்தின் அதிமுக அரசும் கலைக்கப்பட்டது. 1977ல் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர். அரசு, மூன்றே ஆண்டுகளில் (1980ஆம் ஆண்டு) கலைக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, 1980ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், 1977ல் இந்திரா காங்கிரசுடன் கை கோர்த்திருந்த எம்.ஜி.ஆரின் அதிமுக, இம்முறை அதனைக் கைவிட்டு சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட அநேகக் கட்சிகளை தன் பக்கம் இழுத்து கூட்டணி அமைத்தது. இதில், அதிமுக 177 இடங்களில் போட்டியிட்டது.

 

கலைஞர், இந்திரா காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். மாநிலக் கட்சியான திமுக 112 இடங்களிலும் தேசியக் கட்சியான இந்திரா காங்கிரஸ் 114 இடங்களிலும் போட்டியிட்டது.

 

TamilNadu Election History part 4

 

1980ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையை ரத்து செய்து, ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, மாநில அரசு மீது தவறு ஏதுமில்லாமல் காரணமே இல்லாமல் திடீரென கலைக்கப்பட்டது இவற்றைக் கொண்டு 1980ஆம் ஆண்டு வெற்றியைப் பெற்றது அதிமுக. இவற்றைவிட அதிமுக வெற்றிக்குப் பெரும் காரணம் இந்தத் தேர்தலில் அமைந்த கூட்டணி.

 

1972-ல் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதும், திமுக தலைவர் கலைஞர் மற்றும் அவரது அமைச்சர்கள் மீது ஊழல் புகார் மனுக்களைத் தயாரித்து தமிழக ஆளுநரை சந்தித்துக் கொடுக்கச் சென்ற பின், அது தமிழக முதல்வருக்குத்தான் செல்லும் எனத் தெரிந்ததும் நேராகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது வரலாறு. அதனையே தற்போது மு.க.ஸ்டாலினும் செய்துள்ளார். அதிமுக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்கள் மீது பெரும் ஊழல் புகார்களைத் தயாரித்து ஆளுநரிடம் கொடுத்தார். இரண்டு ஊழல் புகார் மனுவிலும் உண்மையுள்ளதா அல்லது சித்தரிக்கப்பட்டதா என்பது வேறு கதை, வேறு வரலாறு. ஆனால், ஊழல் புகார் மனு கொடுப்பது மூலம் ஆளும் நபர்கள் மீது பெரும் ஊழல் பிம்பத்தை ஏற்படுத்த முடியும். இதேபோல, திமுக தற்போது அதிமுக மீது கட்டமைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு மற்றும் எடப்பாடி அறிவித்திருக்கும் 10.5% இட ஒதுக்கீடு ஆகியவை எந்த அளவிற்கு 2021 தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

கலைஞர் செய்து காட்டியதை எடப்பாடி பழனிசாமி செய்வாரா? | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #3

 

எம்.ஜி.ஆர். ஆட்சியில் கமிஷன்கள்..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #5