2016ஆம் ஆண்டு நடந்த தமிழகத்தின் 15வது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வர் வேட்பாளருமான ஜெயலலிதா சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டு மே இறுதியில் பதவியேற்ற ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மறைந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அது தமிழக அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா வெற்றிபெற்ற ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்குள் அதிமுக, ஒ.பி.எஸ். மற்றும் சசிகலா என இரண்டாக பிளவுபட்டிருந்தது. இருவரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரினர். ஆனால், இருவருக்குமே இரட்டை இலை கிடையாது என சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். அதன்பிறகு, அதிமுகவிற்கு மீண்டும் இந்த சின்னம் கொடுக்கப்பட்டாலும், இதே கதை அதிமுகவிற்கு 1989லும் நடந்திருக்கிறது என அப்போது பேச்சுகள் எழுந்தன.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர்., 1987ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின் முதல்வராக ஜானகி சிறிதுகாலம் செயலாற்றினார். அதன்பின் 1989ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுக இரண்டாக உடைந்து ஜெ அணி, ஜா அணி என தேர்தலை சந்தித்தது. இந்தத் தேர்தலில்தான் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஏன் அதிமுக இரண்டாகப் பிரிந்தது..?
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டே திண்டுக்கல் மாவட்டம், ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர்., எப்போது தமிழகம் வருவார்? எப்போது பதவியேற்பார் எனும் கேள்விகள் தமிழகத்தின் அனைத்து பக்கங்களிலும் எதிரொலித்துகொண்டிருந்தன. அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளதா என அரசியலர்களும், சட்ட நிபுணர்களும் பெரும் விவாதத்தை மேற்கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆர் அமைச்சரவையின் மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன், அன்றைய தமிழக தலைமைச் செயலருடன் அமெரிக்காவிற்குப் புறப்பட்டார்.
எப்படியும் எம்.ஜி.ஆர். பதவியேற்பு பற்றிய நற்செய்தி வருமென அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், அதிமுகவிற்கு வாக்களித்த வாக்களர்களும் நம்பிக்கையில் இருந்தனர். ஆனாலும், கட்சியினுள் ஜெயலலிதாவின் வளர்ச்சியால் ஏற்பட்டிருந்த உட்கட்சி பூசல், தேர்தலுக்கு முன்பாக ஜெயலலிதா வகித்துவந்த கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிப்பு, ஆகியவை மக்கள் மத்தியில் ஆட்சியமைப்பு குறித்த லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதுமட்டுமின்றி அப்போதைய ஆளுநர் குரானா, “தேர்தல் முடிவுகள் வந்ததும் தற்போதைக்கு தற்காலிகமாக ஒருவரை பதவியில் அமர வையுங்கள், எம்.ஜி.ஆர். வந்ததும் மற்றவையைப் பார்த்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார். இவையெல்லாம் மக்களை பெரிய சிந்தனைக்குள் ஆழ்த்தியது. கட்சித்தலைமை பற்றி சரியான தகவலின்றி அதிமுகவும், ஆட்சித் தலைமையின்றி தமிழக மக்களும் குழம்பிக்கொண்டிருந்தனர்.
இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்து 1985ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றார். அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் வாழ்வாதார உரிமை போராட்டம் இலங்கையில் மீண்டும் வலுத்துக்கொண்டிருந்தது. அதனால், 1985ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கலைஞர், தி.க. பொதுச்செயலாளராக இருந்த கி.வீரமணி, காமராஜ் காங்கிரஸ் தலைவராக இருந்த பழ.நெடுமாறன் ஆகியோர் கூடி, `டெசோ’ எனும் `தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை' உருவாக்கினர். இதன் தலைவராக திமுக தலைவர் கலைஞர் இருந்தார். இந்த அமைப்பின் குறிக்கோளாக தமிழீழம்தான் தீர்வு என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது, தமிழீழப் போராளிகளுக்கு உதவுவது, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிய உதவிகள் கிடைக்கச் செய்வது என வகுக்கப்பட்டது.
டெசோ அமைப்பை துவங்கி பல போராட்டங்களை அவ்வமைப்பு அறிவித்து, அதன்படி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டுக்கொண்டிருந்தனர். பத்திரிகைகளில் தொடர்ந்து டெசோ அமைப்பு பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதேநேரத்தில் பதவிகளிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை வழங்கினார் எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர் விவகாரத்தில் அவர்களின் போராட்டத்திற்காக அதிமுக அரசு பல உதவிகளை செய்தது என மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அவர்களது ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் அமைப்பாகிய டெசோ ஒன்றுகூடி போராடி மக்கள் மனதையும் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தது. இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இதனால், கொள்கை பரப்புச் செயலாளராக பதவியேற்ற ஜெயலலிதா எதிர்முனையில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவாக போராட்டத்தை அறிவித்து, நடத்தினார். இப்படி அதிமுகவும் திமுகவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்திவந்தனர். ஆனால், சர்வதேச அரசியல் காரணங்களால் இன்றளவும் ஈழத்தமிழர் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது என்பதும் மறுக்க முடியாதது.
1970ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை 1986ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். வெளியிட்டார். இதிலும் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. ஆளும்கட்சி, மத்திய அரசுடனான கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் வீசிய அனுதாப அலையென அதிமுகவிற்கு சாதகமாக களம் இருக்குமென எதிர்பார்த்திருந்த நேரத்தில், தேர்தல் முடிவுகள் அதிமுகவை அசைத்துப் பார்த்தது. 1971 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவிற்கு பெரும் வெற்றியை இந்த உள்ளாட்சித் தேர்தல் கொடுத்தது. இந்த தோல்விக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதிமுகவின் உட்கட்சி பூசலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர். வராததுமே முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது. வெகுகாலத்திற்கு பிறகு திமுகவிற்கு கிடைத்த வெற்றியில் திமுகவினர் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
ஆளும் கட்சியினை வீழ்த்திய திமுகவினர், சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், திமுகவினரை கலங்கடிக்க செய்தது சட்டமேலவை கலைப்பு அறிவிப்பு. உள்ளாட்சி முடிவுகள் வெளியாகிய குறுகிய காலத்திலேயே மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் திமுக மேலவை தேர்தலில் இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. உள்ளாட்சி, மேலவை என மீண்டும் திமுகவிற்கு ஏறுமுகமாக இருந்தது. இந்தநிலையில்தான் மேலவை கலைப்பை அறிவித்தார் எம்.ஜி.ஆர்.
அதற்குள்ளாக 20% இடஒதுக்கீட்டை கேட்டு வன்னியர் சங்கத் தலைவர் ராமதாஸ் தலைமையில், வட மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திடீரென சாலையில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. நிலைமை கைமீறிப் போவதாக உணர்ந்த அதிமுக அரசு, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இப்படி பெரும் போராட்டக்களமாக மாறியிருந்த அதிமுக ஆட்சிக் காலம், அதன் அந்திம காலத்திற்கு வந்திருந்தது. அதிமுகவின் பெரும் பிம்பம் எம்.ஜி.ஆர், 24.12.1987 அன்று அதிகாலை மறைந்தார். தமிழகம் முழுக்க அழுகுரல் எதிரொலிக்க, சென்னையை நோக்கி மக்கள் வெள்ளம் படையெடுக்க, ராஜாஜி அரங்கில் துயில்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். மெரினா கடற்கரையில் அவரின் உடல் அடக்கம் செய்ய ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அதில் ஏற முயன்ற ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். பின்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அதிமுகவினர் தன்னை கீழே தள்ளியதாக தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். உடல் நல்லடகத்திற்குப் பிறகு, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என எதிர்பார்ப்பு எழுந்தபோது, மூத்த அமைச்சர் நெடுஞ்செழியனை தற்காலிக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் குரானா. ஜெயலலிதாவின் ஆதரவுடன் முதல்வர் பதவி போட்டிக்கு முன்வந்தார் நெடுஞ்செழியன். அதேபோல், ஆர்.எம்.வீரப்பன் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, முதல்வர் பதவி போட்டிக்கு முன்வந்தார். அதேநேரம், ஜானகி ஆதரவாளர்கள் ஆளுநரை சந்தித்து, ஜானகியை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டும் எனக்கூறி எம்.எல்.ஏ க்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்தனர். அதன் மூலம் ஜானகி முதல்வரானார். இருந்தபோதிலும் பதவியேற்று மூன்று வாரத்திற்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அறிவித்தார் ஆளுநர். பிளவுபட்ட அதிமுகவில் ஜானகி பக்கம் 90 எம்.எல்.ஏ.க்கள் நின்றனர். அதனைக் கொண்டு ஜானகியும் பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் ஜானகி எம்.ஜி.ஆரின் சிறுபான்மை அரசால், ஆட்சியை நடத்த முடியாது என ஆளுநர் டெல்லிக்குத் தகவல் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து அவரது ஆட்சி கலைக்கப்பட்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஜெ அணி எனவும், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தலைமையில் ஜா அணி எனவும் இரண்டாக பிளவுப்பட்டு 1989 தேர்தலை சந்தித்தது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கமிஷன்கள்..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #5