Skip to main content

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5

 

ramesh khanna

 

ப்ரண்ட்ஸ்... வாழ்க்கையில ப்ரண்ட்ஸ் யாரு? எப்படி வர்றாங்க? சில ப்ரண்ட்ஸ் எப்படி போறாங்க? ஒரு சிலருக்கு வாழ்க்கையில ப்ரண்ட்ஸ் முக்கியமா இருக்காங்க, ஒரு சிலருக்கு வாழ்க்கையைக் கொடுத்ததே ப்ரண்ட்ஸாதான் இருக்கும். ப்ரண்ட்ஸ் இல்லாதவங்க கண்டிப்பா வாழ்க்கையில மிகப்பெரிய பங்கை இழக்குறாங்க. அப்படி ப்ரண்ட்ஸ் இல்லாம யாரும் இருந்துவிட முடியுமா என்ன?

 

பாண்டியராஜனும் நானும் ஒன்னா சைக்கிளில் சுத்துனது, பின்னர் என்னைக் கூப்பிடாம அவரு ஷூட்டிங் ஆரம்பிச்சது, விவேக்கும் நானும் ஒன்னா காமெடி க்ளப்ல ஷோ பண்ணது, பிறகு எங்க நட்புனாலேயே நாங்க இயக்க வேண்டிய படம் கெட்டுப் போனது, ரவிக்குமாருக்கு அசிஸ்டன்ட் ஆனது, அவர் மூலமாக வந்த பெரிய வாய்ப்புகளும் எனக்கு வாய்க்காம போனது, அஜித் கூட தொடர்ந்து பல படங்கள் பண்ணுனது, விஜய் கூட ஒரே படத்தோட நின்னது... இப்படி எல்லாம் சுத்தி சுத்தி நட்புகளால் நிகழ்ந்தது, நட்போடு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையது. இவுங்க எல்லோருமே எனக்கு ப்ரண்ட்ஸ்தான். என் வாழ்க்கையிலயும் ப்ரண்ட்ஸ் என்ற வார்த்தை ரொம்ப முக்கியமானது. 'ப்ரண்ட்ஸ்' படம் எனக்கு மிகப்பெரிய பேரைக் கொடுத்தது. காமெடியன் என்பதைத் தாண்டிய முக்கியமான ரோல் அந்தப் படத்துல எனக்கு. அதுபோக. 'ப்ரண்ட்ஸ்' படம் எனக்கு ஒரு ரொம்ப நல்ல ப்ரண்டையும் கொடுத்தது.

 

சூர்யா... ஒரு புகழ்பெற்ற நடிகரோட பிள்ளையாக சினிமாவுக்குள் வந்தவர். ஆனா, வந்தது மட்டும்தான் அப்படி. அதுக்கப்புறமா அவர் சினிமாவில் இருந்தது புகழ் பெற்ற நடிகரோட பையனா இல்லை. நம்மில் பெரும்பாலானவங்க நினைப்பாங்க, 'ஒரு பெரிய நடிகருக்கோ டைரக்டருக்கோ பிள்ளையாக இருந்தால் ஈஸியா சினிமாவில் ஜெயிச்சிடலாம்னு. ஆனா, அப்படி உள்ளே வந்து இன்னைக்கு சினிமாவுக்கு வெளியே போயிட்டவங்க எத்தனை பேர்? நிறைய... அப்பா சினிமாவில் வெற்றிகரமா இருந்திருந்தா கண்டிப்பா சாதகம்தான். முதல் படம் நடிப்பதற்கும் அந்தப் படம் ஓடலைன்னா அடுத்த படத்துக்கான வாய்ப்பை பசியில்லாமல் தேடுறதுக்கும். சில அப்பாக்கள் பிள்ளைகளை வைத்து படம் எடுக்குறாங்கதான். ஆனால், அப்படி எடுக்குற படங்களும் வெற்றி பெறுவது உறுதியில்லையே.

 

 

ramesh kanna award adhavan

 

வாரிசு நடிகராக இருந்தும் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து, கஷ்டப்பட்டு, தன் உழைப்பால் முன்னேறுபவர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒருவர்தான் சூர்யா. சூர்யா அப்படி என்ன கஷ்டப்பட்டுட்டாருன்னு கேக்குறீங்களா? ஒரு ஃபேமஸ் நடிகரோட பையன், இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கிற படத்தின் ஷூட்டிங்குல தனி ரூமெல்லாம் கேக்காம (இல்லாம) எங்களோட தரையில் பெட்ஷீட் விரித்துப் படுத்துருக்கார். தன் தந்தையின் புகழையெல்லாம் தள்ளிவச்சுட்டு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கார். இதிலென்ன கஷ்டம்? அதை அந்த இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும். சரி, சவால்கள் இல்லாமல் யாருமில்லை, எல்லோருக்கும் சவால்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 

சூர்யாவையும் என்னையும் ப்ரண்ட்ஸ் ஆக்குனது ப்ரண்ட்ஸ் படம்தான். உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், படையப்பா, அமர்க்களம் இப்படி பல படங்கள் நடிச்சு மெல்ல பிஸியான நேரத்துல வந்ததுதான் 'ப்ரண்ட்ஸ்' வாய்ப்பு. மலையாளத்துல இதே படத்துல என் கேரக்டர்ல சீனிவாசன் சார் நடிச்சிருந்தார். அவரும் என்னைப் போலவே நடிகர், வசனகர்த்தா, கதைகளும் எழுதியிருக்கார். தமிழில் அந்தப் பாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்தார் இயக்குனர் சித்திக். அவரோட இப்ப வரைக்கும் நல்ல நட்பு இருக்கு. ப்ரண்ட்ஸ் படத்துல விஜய், சூர்யா, நான் மூணு பேரும் கிட்டத்தட்ட முழு படத்துலயும் ட்ராவல் ஆவோம். அதனால் ஷூட்டிங்கிலும் ஒன்னா இருப்போம். விஜய் நல்ல மனிதர், எளிமையானவர்தான். என்னதான் இருந்தாலும் அவர் அப்பவே வளர்ந்த ஹீரோ. எங்களுக்கு அவர்கிட்ட நிறைய பேச தயக்கமா இருந்தது. சூர்யாவும் நானும் ஒன்னாதான் சுத்துவோம், ஒரே ரூம்ல தங்கியிருக்கோம், நிறைய பேசுவோம்.

 

அப்போ நான் ரொம்ப பிஸியா இருந்த நேரம். நிஜமாதாங்க... ஹீரோக்களை விட காமெடியன்ஸ் பிஸியாதான் இருப்பாங்க. ஆனா, எத்தனை வருஷத்துக்கு அதே மாதிரி பிஸியா இருப்பாங்க என்பது ஒரு கேள்விதான். அது, நான் பிஸியா இருந்த நேரம். கீழ பழனி, உடுமலைப்பேட்டை ஏரியால ப்ரண்ட்ஸ் ஷூட்டிங்.... மேல கொடைக்கானல்ல தெனாலி ஷூட்டிங்... ரெண்டுக்கும் நான் போய்ட்டுப் போய்ட்டு வருவேன். ப்ரண்ட்ஸ் ஷூட்டிங்ல இருந்து தெனாலி ஷூட்டிங் கிளம்புனா, 'ஜோவைக் கேட்டதா சொல்லுங்க'னு சூர்யா சொல்லிவிடுவார். தெனாலி முடிஞ்சு இங்க கிளம்புனா, 'சூர்யாவைக் கேட்டதா சொல்லுங்க'னு ஜோதிகா சொல்வாங்க. நானும், 'மச்சான் உன்னை ரொம்ப கேட்டாருமா, பாக்காம கஷ்டப்படுறாரு', 'தங்கச்சி உன்னைக் கேட்டுச்சுப்பா, உன்னைப் பாக்காம அது முகமே சரியில்ல'னு கொஞ்சம் எக்ஸ்டராவா போட்டு சொல்லுவேன். அஜித்-ஷாலினி காதலிலும் நான் இருந்திருக்கேன், சூர்யா-ஜோதிகா காதலிலும் நான் இருந்திருக்கிறேன். ரெண்டு ஜோடிகளும் இப்பவும் மகிழ்ச்சியா இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இப்படி அவுங்களுக்குத் தூதா, அன்பா நான் இருந்ததால என்னை சூர்யா தெனாலி படத்தில் வருவது போல 'தெய்வமச்சான்'னு கூப்பிடுவார்.

 

 

friends

 

 

சூர்யாவும் நானும் காரில் நிறைய சுத்தியிருக்கோம். திடீர்னு வந்து கூப்பிடுவார், டின்னர் போவோம். ஊரை சுத்திட்டு வருவோம். ஒரு முறை சூர்யாவின் நண்பர் ஒருவர் பன்ருட்டியில் ஒரு கடை திறந்தார். அந்த விழாவுக்கு சூர்யா, என்னையும் கூப்பிட்டார். நான், என் மனைவி, ரெண்டு பசங்க, சூர்யா எல்லோரும் சேர்ந்து என்னுடைய வேகன்-ஆர் (Wagon R) காரில் போனோம். அது அவ்வளவு வசதியா இருக்காது. அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படமாட்டார். எங்களுடன் நேரம் செலவு செய்யவேண்டும். அவருடைய நேரம், அந்த மரியாதை எல்லாம் அவர் என்னுடனான நட்புக்குக் கொடுத்தது. அது இன்றும் தொடருது. ப்ரண்ட்ஸ் படம் வெளிவந்தது, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எங்களுக்கும் நல்ல பேரைக் கொடுத்தது. ஆனாலும் சூர்யா, தனி கதாநாயகனாக வெற்றி பெற வேண்டியிருந்தது. அதற்கான நல்ல வாய்ப்புக்காக காத்துக்கிட்டிருந்தார்.

 

vadapalani

 

 

விக்ரமன் சார் 'வானத்தைப் போல' மிகப்பெரிய வெற்றிக்குப் பின் ஒரு படம் தொடங்குறார். பிரஷாந்த்தை வச்சு பண்ணலாம்னு திட்டம் போட்டு, தேதிகள் பிரச்சனையால தள்ளிப் போய்க்கிட்டு இருந்தது. பின்னர் பிரஷாந்த் அந்தப் படத்தில் இல்லையென்றானது. நான் படத்தில் இருக்கேன்னு முன்னாடியே தெரியும். நான் சூர்யாகிட்ட சொன்னேன், "சூர்யா, நீ போய் விக்ரமன் சாரைப் பாரு.. இது நல்ல கதை, கண்டிப்பா ஹிட் ஆகும். நீ போய் அவர்கிட்ட பேசு"ன்னு. சூர்யாவுக்கு தயக்கம்... "நானா எப்படி போய் கேக்குறது? சார் தப்பா எடுத்துக்கமாட்டாரா?"ன்னு. "விஜய்க்கு விக்ரமன் சார் எடுத்த 'பூவே உனக்காக' படம்தான் வெற்றியின் தொடக்கமா இருந்தது. அப்படி உனக்கு அமைய வாய்ப்புள்ள ஒரு கதை இது. நீ வா போலாம்"னு நானே சூர்யாவை அழைத்துப் போனேன். விக்ரமன் சாரை சந்தித்து, 'சூர்யா இந்தக் கதைக்கு சரியா இருப்பார், நல்லா நடிப்பார்'னு சொல்லி பேசினோம். விக்ரமன் சாருக்கும் சூர்யாவை பிடித்துப் போய் அவரை வச்சே படத்தைத் தொடங்கினார். அந்தப் படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. அந்தப் படம்தான் 'உன்னை நினைத்து'.

 

 

tn5 title

 

 

அதுக்குப் பின்னாடி சூர்யா ஒரு பக்கம் வளர்ந்து, டாப் ஹீரோவாகி... நான் ஒரு பக்கம் படங்கள் நடித்துக்கொண்டே இருந்தபோது... ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமார் என்னோட பழைய கதை ஒன்னைக் கேட்டார். அந்தக் கதை நான் கேப்டன் விஜயகாந்துக்கு எழுதியது. கதையைக் கேட்ட அவர், "நல்லாருக்கேயா..இதை படமா பண்ணலாம். இப்போ டாப்ல இருக்க சூர்யாவை வச்சே பண்ணலாம்"னு சொன்னார். உடனே சூர்யாவைப் பார்த்தோம், கதை சொன்னோம். உதயநிதி ஸ்டாலினைப் பார்த்தோம், கதை சொன்னோம். எல்லாம் விறுவிறுவென நடந்து 'ஆதவன்' படம் உருவாச்சு. படமும் வெற்றிதான். இப்போ, சூர்யா இருக்கும் உயரம் இன்னும் பெரிது. ஆனாலும் எங்கள் நட்பு அப்படியேதான் இருக்கு. ஜூலை 23 அவரோட பிறந்தநாள், அவர் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும். அவர் நினைத்த பாத்திரங்களில் நடிக்கணும். என் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன். அஜித்துக்கும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்னு சொன்ன மாதிரி, சூர்யாவுக்கும் எனக்கும் ஒரு தெய்வ பந்தம் இருக்கு. கொஞ்சம் அதிகமா சொல்றேனோ? செப்டம்பர் 11, என்னுடைய திருமண நாள். அவருடைய திருமண நாளும் அதேதான். இப்போ சொல்லுங்க... அவர் எனக்கு தெய்வம் தந்த மச்சான், நான் அவருக்கு 'தெய்வமச்சான்'தானே?

 

முந்தைய பகுதி...

எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் அஜித்துக்குதான் அந்தப் பழக்கமிருந்தது... - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #4

 

அடுத்த பகுதி...

 

விஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்