
‘18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது, 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது, 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சிம் கார்டு விற்க முடியாது..’ என விதிமுறைகள் இருந்தும் நம் கண்ணெதிரே அப்பட்டமாக மீறப்படுகிறது.
கரோனா பரவல் காலத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் படிப்பதற்கு, 18 வயதுக்குக் கீழுள்ள மாணவர்கள், தங்கள் கையில் செல்போன் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி..’ எனச் சொல்வதுபோல், திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்ததுபோல், ஏற்கனவே படிப்புச் சுமையால் மன அழுத்தத்தில் உள்ள மாணவர்கள், படிப்பைக் காட்டிலும் வேறு பொழுதுபோக்கு விஷயங்களுக்காக செல்போனைப் பயன்படுத்துவதற்கு, நாமே இன்னொரு வழியைத் திறந்துவிட்டதுபோல் ஆயிற்று.
இதன் விளைவு, செல்போனில் கேம் விளையாடுவது, பொழுதுபோக்கு செயலிகளுக்கு அடிமையாவது என மாணவர்களை ஒருவித மாயையில் சிக்க வைத்தது. முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ‘பழகி’ விபரீதங்களில் சிக்கியதும் நடந்துள்ளன. விருதுநகர் பாலியல் வழக்கிலும் செல்போனால் மூன்று சிறுவர்கள் கைதாகி, கூர்நோக்கு இல்லத்தில் அடைபட்டதும் நடந்திருக்கிறது.
தனக்கென்று ஒரு செல்போன் இல்லையென்றால், உயிர் வாழவே முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தற்கொலையில் உயிரைவிட்ட சம்பவங்களும் நடந்தபடியே உள்ளன. திருவனந்தபுரத்தில் ஜீவா மோகன் என்ற 11-ஆம் வகுப்பு மாணவி ‘நான் மொபைலுக்கு அடிமையாகிவிட்டேன். இதிலிருந்து மீள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்.’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளது.
உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்பும்கூட செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. குறிப்பாக, செல்போனிலிருந்து வெளிவரும் ரேடியேசன் அதிகமாகச் சூட்டை ஏற்படுத்தி, மூளை, காது, இதயம் போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கண்களுக்கும் பாதிப்பை உண்டுபண்ணுகிறது. கைவிரல் தசைநார் பாதிப்பு, நினைவாற்றல் பாதிப்பு, தூக்கமின்மை எனப் பாதிப்புகள் என்னவோ, வரிசைகட்டி மிரட்டவே செய்கின்றன.
கட்டுப்பாடற்ற செல்போன் பயன்பாட்டால், உலகில் குற்றங்களும், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பதும், விழிப்புணர்வற்ற மரணங்களும் தொடர்ந்தபடியே இருக்க, பள்ளி மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், ‘18 வயதிற்குக் கீழுள்ள மாணவ, மாணவியருக்கு செல்போன் ரீசார்ஜோ, சர்வீஸோ செய்து தரமாட்டோம் எனப் பொதுநலனைக் கருத்தில்கொண்டு, செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியேஷன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றியது ஆறுதலளிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையாகப் பேசப்படுகிறது.
குடும்ப வட்டாரத்திலோ, நட்பு வட்டத்திலோ, செல்போன் பயன்பாட்டிற்கு தானும் அடிமையாகாமல், பிறரையும் அடிமையாகவிடாமல் பாதுகாக்கும் முயற்சி, ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு பழக்கத்தையும் ஜன்னல் வழியாக உடனே தூக்கி எறிந்துவிட முடியாது. அப்படியென்றால், இதுபோன்ற பழக்கங்களில் இருந்து மீளவே முடியாதா?
டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்; ‘தான் ஒரு பழக்கத்துக்கு அடிமை என்பதையும், அதனால் வரும் தீமையையும், ஒருவரை உள்ளார்ந்து உணரச் செய்துவிட்டால், அவர் தானாகவே அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவர வாய்ப்பு உண்டு’
தேவைக்கு மட்டுமே செல்போனைப் பயன்படுத்துபவர்கள் வெகு சிலரே! செல்போனின் தீவிரப் பிடியிலிருந்து தங்களை மீட்க வேண்டியவர்கள் அனேகம்பேர்!