மனைவி தொல்லையினால் ஆண்டுக்கு 10,000 ஆண்கள் தமிழ்நாட்டில் இறக்கின்றனர் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், மனைவிமார்கள் கொடுக்கும் தொல்லையால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பத்தாயிரம் ஆண்கள் இறப்பதாக கூறி அதற்கு அரசு விசாரணை ஆணையம் வைக்க வேண்டும், மற்றும் இதுபோல பல கோரிக்கைகளை வைத்தனர். மேலும் பெண் காவல் நிலையங்களில் ஆண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், எப்படி பெண்களை விசாரிக்கும்பொழுது பெண் காவலர்கள் இருக்கிறார்களோ அதேபோல ஆண்களை விசாரிக்கும் பொழுது ஆண் காவலர்கள் இருக்க வேண்டும், ஆண்களை இப்படி பெண்கள் அடிமைப்படுத்தியுள்ளதை பெரியார், பாரதியார், பாரதிதாசன் என்று பெண்களுக்காக போராடிய தலைவர்கள் இருந்திருந்தால் இவர்கள் செய்யும் அராஜகத்தை பார்த்து வருத்தப்பட்டிருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாக அவர்கள் கூறியது, பெண்கள் ஆண்கள் மீது கொடுக்கும் அவதூறு வழக்குகளை தவிர்த்திடவும், அவ்வாறு கொடுப்பவர்களை கைது செய்யவேண்டும் என்றும், ஆண்கள் தாங்கள் படும் கஷ்டங்களை வெளியேவந்து தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான்.
மும்பையில் 21 வயது இளைஞன் ஒருவன் 18 வயது நிரம்பிய தனது நண்பனை தன்னிடம் எப்பொழுதும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்ததாலும், தனக்கு கல்வியறிவு குறைவு என்று அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டிருந்ததாலும் 54முறை தொண்டையில் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூமியையே குப்பையாக்கிவிட்ட மனிதன் விண்வெளியையும் விட்டுவைக்கவில்லை. 2018 வரை விண்வெளிக் குப்பைகளாகிவிட்ட செயற்கைக்கோள்களின் அளவு மட்டும் 7,500 டன் என ஒரு தகவல் குறிப்பிடுகிறது. இவை எந்த நேரமும் பூமிக்கு அச்சுறுத்தல் நிறைந்தவை என்றே சொல்லப்படுகிறது. இதை சுத்தம்செய்ய செயற்கைகோள் ஒன்று அனுப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தால் தமிழகத்திற்கு பெய்ய வேண்டிய மழையின் அளவு தடுக்கப்படுகிறது எனவே மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை வெட்டி குறைக்க வேண்டும் எனக்கோரி ஜெய்சுதின் என்ற வழக்கறிஞர் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தென்மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால் மற்ற மாநிலங்களை போல் தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு பலனளிப்பதில்லை. மேலும் தென்மேற்கு பருவக்காற்று மேற்குத்தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால் கேரளாவிற்கு அதிக பலன் கொடுப்பதோடு 3,000 டி.எம்.சி மழைநீர் வீணாக கடலில் கலப்பதாகவும், அந்த மனுவில் கூறியுள்ள ஜெய்சுதின், சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்கும் பட்சத்தில் தென்மேற்கு பருவமழையானது தமிழகத்திற்கு கைகொடுக்கும் எனவும், இதனால் நீருக்காக மற்ற மாநிலங்களை நாடவேண்டிய அவசியம் தமிழகத்திற்கு இருக்காது எனவும் தெரிவித்திருந்தார்.
மத்திய பிரதேச மாநிலம் சட்டர்பூரிலுள்ள கோவிலில் மழையை வரவழைப்பதற்காக பாஜக அமைச்சர் இரு தவளைகளுக்குத் திருமணம் செய்துவைத்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளானது.
ஜப்பான் கட்டுப்பாடில் இருந்த குட்டி தீவை தற்போது காணவில்லை என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கு கடலோர பகுதியுள்ள ஹோகிடோ என்ற தீவவு உள்ளது. இந்த தீவு அருகே உள்ள இசாமி ஹனகிட்டோ ஹோஜுமா என்ற ஒரு குட்டி தீவுதான் காணாமல் போய்விட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ள செய்தியில், ”கடந்த 1987 ஆம் ஆண்டில் இந்த குட்டி தீவு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது. கடல் மட்டத்தை விட 4.6 அடி உயரத்தில் இருந்தது. தற்போது அதை காணவில்லை” என்கிறது. இதனிடையே ஜப்பானில் ஏற்பட நிலநடுக்கத்தின் காரணமாக இந்த குட்டி தீவு கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். வடிவேலு நகைச்சுவை ஒன்றில் இல்லாத கிணற்றை காணவில்லை என்று புகார் தெரிவிப்பார். ஆனால், இங்கோ ஜப்பான் உண்மையிலேயே இருந்த தீவு காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள தோகலாப்பள்ளி கிராமத்தில், பெண்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் நைட்டி அணிந்துக் கொண்டு தெருவில் நடமாட கிராம பெரியவர்களால் தடை செய்யப்பட்டிருந்தது. இது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சி உ.கீரனூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தனது வீட்டில் பாசமாக வளர்த்து வந்த நாய்க்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நாயக்கு ஆலம் எடுத்தனர். மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு மற்றும் வரிசை வழங்கபட்டது. நாய்க்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியதை அந்த ஊரில் சிலர் வியப்புடன் பார்த்தனர்.
விவசாயம் செய்து சேமித்து வைத்த 16 லட்ச ரூபாயை ஆடு ஒன்று தின்ற சம்பவம் செர்பியா நாட்டில் நடந்தது. பல ஆண்டுகளாக விவசாயம் செய்து நிலம் வாங்குவதற்காக சேமித்து வைத்த தொகையை நிலம் விற்பவரிடம் கொடுக்க மேஜை மீது வைத்திருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பின் பழியை தீர்த்துக்கொள்ள தங்களது பணத்தை சாப்பிட்ட அந்த ஆட்டினை சமைத்து சாப்பிட்டுவிட்டனர்.
முந்தைய பகுதி: