Skip to main content

ஒரு மணியடித்தால் திருக்குறள் கேட்கும்... தமிழ்ச்சேவை புரியும் கடை

Published on 08/09/2018 | Edited on 10/09/2018

 

thirukural

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் கடை வீதியில் சமீபத்தில் ஒரு நாள் பொருட்கள் வாங்க சென்றோம். அப்போது மாலை 3 மணிக்கு ஒரு கடை மாடியில் இருந்து ஒலிபெருக்கி மூலம், மதியம் 3 மணி என்ற பெண் குரல், 'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோருக்குப் பொய்யா விளக்கே விளக்கு', என்ற திருக்குறளை கணீர் குரலில் ஒலித்ததோடு அதற்கான பொருள் விளக்கமும் கூறி நிறுத்தியது அந்த ஒலிபெருக்கி பெண் குரல்.

 

thirukural

 

நாம் நின்று அண்ணாந்து பார்த்தோம். மொட்டை மாடியில் இரண்டு ஒலி பெருக்கி குழாயில் இருந்து ஒலித்தது அந்த குரல். சரி யாரோ இப்படி செய்துள்ளார், வாழ்க வள்ளுவம் என்று மனதில் எண்ணியபடியே நாம் சென்ற பணிகளை முடித்துக்கொண்டு திரும்பும்போது சரியாக மாலை 5 மணிக்கு  மீண்டும் அந்த இடத்தை நெருங்கும்போது அதே ஒலிபெருக்கியில் இருந்து பெண் குரல், மாலை 5 மணி என்றதோடு, 'செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்', என்ற குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொன்னது.

 

வியப்பு மேலிடவே அந்த ஒலிப் பெருக்கிக்கு கீழ் இருந்த கடைக்குள் நுழைந்தோம். முறுக்கு மீசையோடு அமர்ந்திருந்த முதியவரிடம் அதுகுறித்து கேட்டோம். ஒலிபெருக்கி மூலம் நேரத்தையும், குறளும் அதற்கான விளக்கமும் எப்படி ஒலிபரப்பப்படுகிறது, யார் ஏற்பாடு இது என்றோம். அவர் நம்மை உபசரித்து அன்போடு பேச ஆரம்பித்தார். அவர் பெண்ணாடம் திருக்குறள் ஆய்வு மையம் பேரவையின் தலைவர் த.கோ.சம்பந்தம். அதன் செயலாளர் திருஞானசம்பந்தம்.

 

thirukural

 

"நம்மிடம் வாழ்வின் தத்துவத்தை வள்ளுவன் தனது 1330 குறள்பாக்களில் சொல்லியுள்ளார். வாழ்வின் தத்துவமான அந்த குறளை எளிமையான முறையில் எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் உள்ளோம். எங்கள் மையத்தின் சார்பில் அவ்வப்போது நண்பர்கள் உதவியோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பல அறிஞர்கள், பள்ளி மாணவ - மாணவிகள் வந்து கலந்து கொள்கிறார்கள். எங்கள் மையத்தின் சார்பில் பள்ளிப் பிள்ளைகளுக்கு குறள்பா போட்டி வைத்துள்ளோம். ஒரு அதிகாரத்துக்கு 5 ரூபாய் வீதம் 100 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தால் பரிசுத் தொகையும், 200 குறளை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் பரிசுத் தொகையும் அளிக்கிறோம்.

 

1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் என அறிவித்துள்ளோம். இதில் பல பள்ளி பிள்ளைகள் குறள் ஒப்பித்து பரிசு பெற்றள்ளனர். 1330 குறளையும ஒப்பிவித்து 10 ஆயிரம் பரிசு பெறும் முயற்சியில் பல மாணவ மாணவிகள் ஆர்வமாக முயன்று வருகிறார்கள். இப்படி குறள் பற்றிய அருமை பெருமைகளை பல வழிகளிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியின் வெளிப்பாடாகதான் கடை வீதியில் எங்கள் கடை மாடியில் தினமும் மணிக்கு ஒருமுறை நேரத்தை குறிப்பிட்டவுடன் ஒரு குறளும், அதற்கு விளக்கமும் சொல்லும் முறையை ஒலிபெருக்கி மூலம் செயல்படுத்தி வருகிறோம். இதன் செலவு மட்டும் 5 ஆயிரம் ரூபாய். இந்த வடிவமைப்பை திருநெல்வேலி ஜங்ஷன் அருகேயுள்ள லிங்கராஜா என்பவர் பதிவு செய்து தருகிறார். அவரது தொடர்பு எண் 9994590097. நாங்கள் இந்த குறள் ஒலிபரப்பை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒலிபரப்பி வருகிறோம்.

 

thirukural

 

அதேபோல் திருச்சியை சேர்ந்த கரு.பேச்சிமுத்து அவர்கள் திருக்குறளும், ஏழிளந்தமிழும் என்ற புத்தகம்எழுதி வெளியிட்டுள்ளார். அதில் குறள் அதற்கான விளக்கமும் உள்ளன. அதோடு ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றி வேட்கை, நன்னெறி, உலகநீதி ஆகிய தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. பள்ளிப் பாடங்களில் கூட இவை இப்போது இல்லை. அதை தமது திருக்குறள் புத்தகத்தில் இடம்பெற செய்து இல்லம் தோறும் திருக்குறள் இருக்க வேண்டும். அனைவரும் படித்து நல்ல முறையில் பின்பற்றி நடக்க வேண்டும். மனம் அமைதி, மெய்திறனோடு வாழ திருக்குறளும், ஏழிளந்தமிழும் என்ற புத்தகத்தை வழங்கி வருகிறார். அதை வாங்கி மாணவ மாணவிகளுக்கு கொடுத்து படிக்க சொல்லி எங்கள் மையத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்கிறார் த.கோ.சம்பந்தம்.

 

"மேலும் அக்காலத்தில் மொழியாராய்ச்சி இல்லாததாலும், வடமொழி சொற்கள் ஒவ்வொன்றாக புகுத்தப்பட்டன. பல புலவர்களுக்குக் கூட வடசொல், தென் சொல் புலப்படாத காலத்தில் திருக்குறளிலும் பல வடமொழி சொற்கள் புகுந்தன. அவைகளையெல்லாம் களையெடுத்து தூய தமிழ் எழுத்துக்களோடு மக்களை படிக்க, பேச வேண்டும் என்ற நோக்கத்திலும் உள்ளது எங்கள் குறள் ஆய்வு மையம்.

 

திருக்குறள் எல்லா வகையிலும் உயர்வு பெற்ற நூல். எல்லா கேடுகளும், பாடுகளும், துன்பங்களும், தொல்லைகளும் நீங்கி எல்லோரும் இன்பமாக வாழ வழி காட்டுகிறது. திருக்குறள் தெளிந்து மனமும், வள்ளிய அறிவும், திண்ணிய நெஞ்சும், நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றி நமக்கு தந்துள்ளார். அதனைப் படித்து அதன்படி நடந்து பயன்பெற வேண்டும்" என்கிறார் த.கோ. சம்பந்தம். பெண்ணாடம் குறள் ஆய்வுமையத்தின் பணிகள் மென்மேலும் வளர வாழ்த்துவோம். வளரட்டும் தமிழ்பணி, செழிக்கட்டும் குறள்நெறி. இதே மையத்தின் மூலம் சாவிக்கொத்து, அன்பளிப்பு கவர்கள் உள்பட அனைத்தும் வள்ளுவர் படம் பொருத்தி தயாரித்து, குறைந்த விலையில் அளித்து வருகிறார்கள்.

Next Story

திருவள்ளுவர் நாள் விழா‌‌ கொண்டாட்டம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Thiruvalluvar day celebration in Sivagangai!

சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவிற்கு வந்தோரை மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.

‘வள்ளுவத்தைப் பாடுவோம்’ எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். ‘உடுக்கை இழந்தவன் கை போலே’ எனும் தலைப்பில் முனைவர் உஷா, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, ‘எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ எனும்  தலைப்பில் ஆசிரியர் மாலா, ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், ‘யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர்.

ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர். அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார்,இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.

Next Story

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Three-language policy is an imposition'-poet Vairamuthu interviewed

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.