Skip to main content

சாவித்திரி என்னும் அழகு தேவதை! கோடானுகோடிகளில் ஒருத்தி!

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் நடிகையர் திலகத்தை ‘முழுமையாக’ காட்சிப்படுத்திவிட முடியாதுதான்! ஏனென்றால்,  அவர் அப்படித்தான்! கட்டுரைக்கும் இது பொருந்தும். ஆனாலும், சாவித்திரி என்ற நடிப்புக் கடலில் இருந்து, உள்ளங்கை அளவுக்கு அள்ளி இங்கே தெளித்திருக்கிறோம்.

 

savitri

 

 

 

 
களங்கம் கற்பித்துவிட முடியாது!

1964-ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்தது, சாவித்திரி நடித்த கை கொடுத்த தெய்வம். அந்தப் படத்தில் அவருக்கு வெகுளிப்பெண் கதாபாத்திரம். சிவாஜி அவரை வியந்து பாடுவது போல காட்சி.    சாவித்திரியின் குணாதிசயத்தை உணர்ந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய சிந்தனையில், பாடலின் வரிகள் தானாக வந்து விழுந்தன. 

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, 
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ 
பார்வையிலே குமரியம்மா  பழக்கத்திலே குழந்தையம்மா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ

கண்ணென்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ 
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ 
ஆதாரம் நூறென்று ஊர் சொல்லலாம் 
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்

 

ஆம்.  தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சாவித்திரி நல்லது செய்திருக்கலாம்; கெட்டதும் பண்ணியிருக்கலாம். அதை வைத்து,  சினிமாவோ, கட்டுரையோ,  சாவித்திரிக்கு களங்கம் கற்பித்துவிட முடியாது. ஏனென்றால்,  அவர்   ‘பாலினும் வெண்மை; பனியிலும் மென்மை’ ஆனவர். 

 

savitri

 

 

நடிகர் திலகமே வியந்த நடிகையர் திலகம்!
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சாவித்திரியின் உடலமைப்பில் மாறுபாட்டைக் காணலாம். மிஸ்ஸியம்மா சாவித்திரி ஒரு அழகு; பாசமலர் சாவித்திரி வேறொரு அழகு.  திருவருட்செல்வரில் ஊதிப்பெருத்த சாவித்திரியும், கடைசி காலத்தில் அம்மா வேடங்களில் நடித்த சாவித்திரியும் வெவ்வேறு தோற்றங்களைக் கொண்டிருந்தார்கள். பட வாய்ப்புக்கள் அதிகமாகக் கிடைத்ததால், சாவித்திரியை மிஞ்சிவிட சரோஜாதேவியால் முடிந்தது. ஆனால், சாவித்திரியின் நடிப்புத் திறமையை சரோஜாதேவியால் நெருங்க முடிந்ததில்லை.

 

 

 
தெலுங்குப் பெண்ணான சாவித்திரியின் தமிழ் உச்சரிப்பு அலாதியானது. 1953-ல் சிவாஜியின் நடிப்பில் 'பெம்புடு கொடுகு' என்ற  தெலுங்குப்படம் வெளியானது. அவர் பேசிய தெலுங்கை ‘பயங்கரம்’ என்று கிண்டலடித்தது ஒரு பத்திரிகை. பின்னாளில், நடிகர் திலகமே, நடிகையர் திலகம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “சகோதரி சாவித்திரியுடன் நடிக்கும்போது, நான் சற்று எச்சரிக்கையாகத்தான் நடிப்பேன். நாங்கள் இருவரும் நடிக்கும் காட்சிகளில் நிச்சயமாக நடிப்புப் போட்டி இருக்கும்.” என்றிருக்கிறார். சரஸ்வதி சபதத்தில் சாவித்திரிதான் சரஸ்வதி. அப்போது கர்ப்பமாக இருந்தார். மேக்-அப் முடித்து, ஆடை அலங்காரத்துடன் ஸ்டுடியோவுக்குள் சாவித்திரி வரும்போது, தீபாராதனை காட்டினார்கள். அவரை கலைமகளாகவே பாவித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.   ஏனென்றால், தோற்றத்திலும் நடிப்பிலும் அப்படி ஒரு தெய்வாம்சம்! வறுமை வறுத்தெடுத்த நிலையிலும்கூட,  தன் ரசிகர் ஒருவரின் அவசரத் தேவைக்காக, தான் பெற்ற ஷீல்டுகளையெல்லாம் சேட்டு கடையில்  விற்று ரூ.10000 தந்ததாகட்டும்,  விலை உயர்ந்த பட்டுச்சேலையை விற்று, டிரைவரின் மகள் திருமணத்துக்கு உதவியதாகட்டும், அத்தனை தயாள குணம்! இடதுகைப் பழக்கம் உள்ள சாவித்திரியை வள்ளல் என்று சொன்னால் மிகையாகாது. 

 

savitri

 

உறவை உதறவைத்த  ‘ப்ளே-பாய்’ ஜெமினி!
1965-ல் சிறந்த ஜோடியைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது ஒரு சமூகநல அமைப்பு. அப்போது, சிறந்த தம்பதியினருக்கான முதல் பரிசைப் பெற்றது ஜெமினி – சாவித்திரி ஜோடி. ஆனாலும், வாழ்க்கையில் சாவித்திரி தோல்வி அடைந்ததற்கு காரணமாகச் சொல்லப்படுவது   ஜெமினியின் ‘ப்ளே பாய்’ நடவடிக்கைகளே!  
12 வயதில் சினிமா சான்ஸ் கேட்டு சென்னை வந்தபோது முதன் முதலாக ஜெமினியை சந்தித்தார் சாவித்திரி. 16 வயதில் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த வயதில்தான்,  32 வயது  ஜெமினியோடு  அவர் பழக ஆரம்பித்தார். தனது 19-வது வயதிலேயே பாப்ஜி என்ற அலமேலுவை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளோடு வாழ்ந்த ஜெமினி, 31-வது வயதில் புஷ்பவள்ளி என்ற நடிகையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். பாப்ஜி,  புஷ்பவள்ளி ஆகிய இருவரோடு திருப்திகொள்ளாத மனநிலையில், ஜெமினியின் மூன்றாவது தேர்வாக இருந்தார் சாவித்திரி. பழக ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கடந்துதான்,  ஜெமினி-சாவித்திரி உறவு வெளிஉலகத்துக்கு தெரிந்தது. இரண்டாவது மனைவியாக இருந்தாலும்,  ‘என் இடத்தில் இன்னொருத்தியா?’ என்று சாவித்திரி மீது கடும் கோபம் கொண்டார் புஷ்பவள்ளி. காரை ஏற்றிக் கொல்லவும் முயற்சித்தார். ஜெமினியுடனான சாவித்திரியின் வாழ்க்கை என்பது 17 வருடங்கள்தான். 1969-ல் இருவரும் பிரிந்தனர்.  இதற்கெல்லாம் காரணம் ஜெமினியின் அலைபாயும் மனதுதான். மனைவிகள், குழந்தைகள், குடும்பங்கள்  என எல்லாமே பலவாக இருந்தும், தனது 70-வது வயதில், செக்ரட்டரி ஜூலியானவையும் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்தியதை என்னவென்று சொல்வது? இவை அனைத்தையும் அவரது லீலைகளாகப் பார்த்த இந்த உலகம், ‘காதல் மன்னன்’ என்ற பட்டம் வேறு தந்தது. 

சரிவுக்குக் காரணம் சந்திரபாபுவும்தான்!
தான் தேடிக்கொண்ட வாழ்க்கைத்துணை சரியில்லாதபோது,  சாவித்திரி என்ன செய்வார் பாவம்! ஒருமுறை இந்தோனேசியா சென்றார் சாவித்திரி. அங்கே விருந்தளித்த அந்நாட்டு அதிபர் சுகர்தோ,  மது அருந்தும்படி வற்புறுத்தினார். அதிபரின் விருப்பம் ஆயிற்றே! மது அருந்தினார் சாவித்திரி. ஜெமினியைப் பிரிந்திருந்த காலக்கட்டத்தில், சந்திரபாபுவின் தோழமை சாவித்திரிக்கு ஆறுதல் அளித்தது. சாவித்திரி ரூ.25000 கொடுத்து உதவியதால்தான்,  மாடி வீட்டு ஏழை திரைப்படத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் தர சந்திரபாபுவால் முடிந்தது.  ‘உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்ட’ எனச் சொல்வது,  சாவித்திரி – சந்திரபாபு விஷயத்தில் மிகச்சரியாக இருந்தது. மாலை நேரத்தில், சாவித்திரி மது அருந்துவதற்கு ‘கம்பெனி’ கொடுப்பவராக இருந்தார் சந்திரபாபு. இப்படித்தான் மதுவுக்கு அடிமையாகிப் போனார் சாவித்திரி.  இருவருமே படம் எடுத்து, நஷ்டப்பட்டு, குடித்து, வாழ்க்கையைத் தொலைத்தார்கள். 

 

 

கவர்ச்சி காட்ட வைத்த மலையாளப்பட உலகம்!
ஒருகாலத்தில் வாரிக் கொடுத்த சாவித்திரி வீடு, வாசல் அனைத்தையும் இழந்து,  வறுமையின் பிடியில் தவித்தார். அவரது பணத்தேவையை அறிந்த மலையாளப்பட உலகம், சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. சுழி என்றொரு மலையாள சினிமா. அதில் சுஜாதாவின் அம்மாவாக நடித்தார் சாவித்திரி. குடிகாரி கதாபாத்திரம். தமிழ்ப்பட உலகம் தேவதையாக ஆராதனை செய்த சாவித்திரியை, இரவு உடையில், போதையின் உச்சத்தில், விரகதாபத்தை வெளிப்படுத்துபவராக காட்டியிருந்தனர்.  வறுமையின் கொடுமையால், தன் புகழுக்கு பங்கம் உண்டாக்கும் ஒரு பாத்திரத்தில் தெரிந்தே நடித்தார் சாவித்திரி.   தமிழகத்திலும் அந்தத் திரைப்படத்தை வெளியிட்டனர். மற்ற கதாநாயகிகளைப் போல் அல்ல! தங்கள் குடும்பத்தில் ஒருவராக, சகோதரியாக சாவித்திரியைப்  பார்த்து வந்தவர்கள் தமிழ் ரசிகர்கள்.  வயதான காலத்தில் சாவித்திரி கவர்ச்சியாக நடித்ததை அறிந்து, உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்தார்கள் நல்லுள்ளம் கொண்ட அவர் ரசிகர்கள். 

 

savitri

 

 

 

எம்.ஜி.ஆரின் அறிவுரையைக் கேட்கவில்லை!
எம்.ஜி.ஆர். ஒரு கொடைவள்ளல் அல்லவா! தன்னுடன் கதாநாயகியாக நடித்த சாவித்திரிக்கு உரிய விதத்தில் ஏன் உதவவில்லை என்று கேட்கத் தோன்றும். குடிப்பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுப்பவர் எம்.ஜி.ஆர். ஆனாலும், ஒருகட்டத்தில் சாவித்திரிக்கு உதவினார். சொந்தப் படம் எடுத்து தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த நிலையில், எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகத்துக்கு வந்து அவரை சந்தித்தார் சாவித்திரி. “உடம்பை கவனித்துக்கொள்” என்று அட்வைஸ் செய்து, ரூபாய் 1 லட்சத்தை ஒரு குட்டிச்சாக்கில் கட்டிக் கொடுத்தார். வசிப்பதற்கு வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.  அந்தப் பணத்தை சாவித்திரி எதற்காகச் செலவழிப்பார் என்பதை எம்.ஜி.ஆர். அறியாதவர் அல்ல. சாவித்திரியும் எம்.ஜி.ஆர். செய்த உதவியை நல்லவிதத்தில் பயன்படுத்தவில்லை.


மரணம் மட்டுமே தேவை! 
நோயின் தாக்கத்தில் இருந்தபோது, தன்னுடன் யாராவது பேச மாட்டார்களா என்று ஏங்கித் தவித்தார் சாவித்திரி. யாருமே தன்னைச் சந்திக்க வராத நிலையில், தன் வீட்டருகில் உள்ள ரிக்ஷாக்காரர்களைத் தேடிப் போய் பேசினார். சாலையோரத்தில் அமர்ந்து குடித்தார். பணத்துக்காகப் பலரிடமும் கை நீட்டினார். தன் பிள்ளைகளைக் கூட விரட்டியடித்தார். ஏனென்றால், அப்போது அவருக்கு மானம், பாசம் எதிலுமே நாட்டம் இல்லை. மரணம் மட்டுமே தேவையாக இருந்தது. அதற்காகவே காத்திருந்தார்.

 
அஞ்சலி செலுத்துவதற்கு அனைவரும் வந்தார்கள்!
அன்றும், இன்றும், என்றும் ரசிக மனங்களை ஆக்கிரமிக்கும் அசாத்திய நடிப்புத் திறமையைத் தன்னகத்தே கொண்டவராக இருந்த சாவித்திரி, 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார்.  1981, டிசம்பர் 25-ஆம் நாள், சென்னை லேடி வெலிங்டன் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. எந்த வீட்டுக்கு அடைக்கலம் கேட்டு நள்ளிரவில் ஓடி வந்தாரோ, அந்த நுங்கம்பாக்கம் வீட்டிலிருந்துதான் சாவித்திரியின் இறுதிப் பயணம் தொடங்க வேண்டும் என்பதில் உறுதி காட்டினார் ஜெமினி. அவருடைய மனைவிகள் பாப்ஜியும், புஷ்பவள்ளியும் சாவித்திரியின் உடலைப் பார்த்து அழுதனர். அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., நடிகர்கள் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சிரஞ்சீவி, சிவகுமார், மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, கே.பாலாஜி மற்றும் நடிகைகள் ராஜசுலோசனா, மனோரமா, சுகுமார், குட்டி பத்மினி என திரைஉலகமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. 
ஆயிரத்தில் அல்ல,  ‘கோடானுகோடிகளில் ஒருத்தி’ என சாவித்திரியை,  வரலாறு மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. 
 

 

Next Story

''யாருங்க சொன்னா, நான் இதுக்காகத்தான் அப்படி செஞ்சேன்னு'' - கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றார். இவருக்கு பல்வேறு தரப்பிலுருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இவர் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், தன் உடல் எடை மெலிவு குறித்தும் நேற்று அளித்த ஒரு பேட்டியில் பேசியபோது....  

 

keerthy suresh

 

 

''எனக்கு தேசிய விருது கிடைத்ததற்காக பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் 'நடிகையர் திலகம்' படம் முடித்த பின் ஒரு 5 மாதம் ஓய்வில் இருந்தேன். அந்த சமயம் என்னை பலரும் ஏன் குண்டாக இருக்கிறாய், சப்பியாக இருக்கிறாய் என்றெல்லாம் கேட்டார்கள். நானும் சரி இனிமேல் சில காலம் ஒர்கவுட் எல்லாம் செய்து பார்ப்போம் என ஆரம்பித்து 5, 6 மாதங்கள் உடற்பயிற்சி செய்தேன். அதன் பலன்தான் நான் இருக்கும் தற்போதைய தோற்றம். யார் கிளப்பிவிட்டாரகள் என தெரியவில்லை. நான் எந்த படத்திற்காகவும் என் உடலை குறைக்கவில்லை. சொல்லப்போனால் சில தமிழ் படங்களுக்காக என்னை அணுகிய சிலர், இன்னும் கூட வெய்ட் போட சொல்கிறார்கள்'' என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது ஏன்...? தேர்வுக்குழு சொன்ன அசத்தல் காரணம்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Keerthy

 

 

இதில் சிறந்த நடிகைக்கான விருதை ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியான இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்கியதற்கான காரணத்தை தேர்வு குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, 'ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தின் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற வகையில், பலவிதமான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக' இந்த தேசிய விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.