Skip to main content

கமலின் கட்சியை அசைத்த தனியார் நிறுவனம்... நிர்வாகிகள் பதவி விலகலின் பரபர பின்னணி...

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

dd

 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியது தமிழக அரசியலில் நேற்றைய தினம் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் தங்களது பதவி விலகல் கடிதத்தைக் கமலிடம் கொடுத்தனர். அதேபோல் பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே. குமரவேல், மௌரியா, முருகானந்தம் ஆகியோரும் ராஜினாமா செய்தனர். 

 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம், எதிர்பார்த்த வகையிலான தேர்தல் முடிவுகளைப் பெறவில்லை. அரசியல் விமர்சகர்களால் இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கட்சிக்குள் நிலவிய குழப்பமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்ற புதிய கோணத்தை இந்தப் பதவி விலகல்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தனது விலகல் குறித்து 12 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனம் கட்சிக்குள் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்கள் குறித்தும், அதனைக் கமல் கையாண்ட விதம் குறித்தும் பல்வேறு தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

 

அவரது அந்த கடிதத்தில், 

 

"2021 சட்டமன்றத் தேர்தலில் நமது தலைவரை முதலமைச்சராக்கிவிட வேண்டும் என்கின்ற பெரிய கனவுடன் பயணிக்கத் தொடங்கினோம். நமது அக்கனவிற்குத் துணையாக இருக்கும் என்ற நோக்கத்தில் ஐபேக் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் 2019 ஏப்ரலில் கையொப்பமாகி 2019 செப்டம்பர் மாதம் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

 

அதன்பிறகு `சங்கையா சொல்யூசன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தேர்தல் ஆலோசனை நிறுவனமாக உருவாக்கினர். அவர்கள் கட்சியின் பிரசாரத்துக்குப் பயனுள்ள வகையில் எந்தப் பணிகளையும் சரிவரச் செய்யாமல், கட்சிக்குப் பெரும் செலவுகளை மட்டுமே உயர்த்திக்கொண்டிருந்தனர் என்பது எனக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தெரிந்தது.

 

இதுகுறித்து தலைவரிடம் தெரிவித்தபோது, `சட்டமன்றத் தேர்தல் வரையில் மட்டுமே அவர்களின் பங்களிப்பு இருக்கும்' என்றார்.

 

அந்நிறுவனம் கட்சிக்காக முன்னெடுத்த எந்தவிதச் செயல்பாடும் கட்சியினரின் பிரசார ரீதியான வளர்ச்சிக்கு உதவவில்லை. கூட்டணியில் குழப்பம், தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், வேட்பாளர் தேர்வில் குழப்பம், கட்சியின் தேர்தல் அறிக்கையில் குழப்பம் என்று தொடர் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் கையில் தலைவர் தொகுதி மற்றும் இதர தேர்தல் பணிகளை ஒப்படைத்தால் இங்கும் நமது வெற்றி வாய்ப்பு குறைவாகிவிடும் என்பதைத் தலைவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால், என் கருத்து கேட்கப்படவில்லை. 

 

கட்சியின் இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. நேர்மையும் திறமையும் விசுவாசமும் நிறைந்த பலர் இந்தக் கட்சியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனாக நான் இந்தக் கட்சியிலிருந்து நேர்மையுடன் வெளியே செல்கிறேன்.

 

கமல்ஹாசனால் நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் உற்காசகமும் உத்வேகமும்தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முக்கியமான தேர்தல்களைச் சந்திப்பதற்கான வலிமையைக் கொடுத்தது. அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

அரசியல் எனும் விதையை, எனக்குள் விதைத்த கமல்ஹாசனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும், காந்தி சொன்னதுபோல ‘நீங்கள் விரும்பும் மாற்றமாக இருங்கள்’ என்பதற்கேற்ப சிறப்பாகவும், அறத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விடை பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

முக்கிய நிர்வாகிகளின் இந்த விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், "‘சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்படச் செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர். மகேந்திரன்.

 

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப்போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக்கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும், திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமை இன்மையையும், நேர்மை இன்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயல்கிறார்.

 

தன்னை எப்படியும் நீக்கிவிடுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னைக் களை என்று புரிந்துகொண்டு தனக்குத் தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின்போது கூடாரத்தைப் பிடித்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.