மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில், திடீர் திருப்பமாக கடந்த வாரம் தொலைக்காட்சிகளில் உரையாற்றிய பிரதமர் மோடி மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இருந்தாலும் வட மாநிலங்களில் போராடும் விவசாயிகள் மசோதாவை நாடாளுமன்றத்தில் வாபஸ் வாங்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று தொடர்ந்து உறுதியாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்ற கேள்வியைப் பொருளாதார ஆய்வாளர் ராம சுப்ரமணியன் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு...
" ஒரு ஆண்டுக்கு மேலாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தீண்டாமை சுவர் போல வைத்து அவர்களை பார்க்க முடியாமல் செய்தார்கள். கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த சட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு செய்கிறார்கள். அதுவும் பிரதமர் மோடி அவர்கள், இது நல்ல சட்டம் தான், ஆனால் இதனை விவசாயிகளுக்குப் புரிய வைக்க முடியாததால் அதனை நாங்கள் விலக்கிக்கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். எத்தனையோ குழுக்களை அமைத்துப் பார்த்தார்கள், விவசாயிகள் எதிர்ப்பு குறையவில்லை என்ற காரணத்தால் தற்போது பல்டி அடித்துள்ளார்கள்.
குறிப்பாக வரப் போகின்ற தேர்தல் அவர்களின் மனதை மாற்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பாக சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலைக் கவனிக்க வேண்டும். பல இடங்களில் ஆளும் கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த கட்சி மண்ணை கவ்வியது. வெற்றி பெறுவோம் என்று அசால்ட்டாக இருந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த தோல்வி வரப் போகின்ற பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடக்கப்போகும் தேர்தல்களில் எதிரொலிக்கக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கருதுகிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்று பார்க்க வேண்டும். அடுத்து உ.பியில் லக்கிம்பூர் விவகாரம். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவர்களை அவதூறாகப் பேசியது உள்ளிட்டவை அங்கே இன்னமும் அனலாகக் கொதித்து வருகிறது.
அதை எல்லாம் சரி செய்ய இந்த நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், காலீஸ்தான் தீவிரவாதிகள் என்று பேசியதை எல்லாம் விவசாயிகள் மறந்துவிட்டு வாக்களித்துவிடுவார்கள் என்று எந்த அடிப்படையில் இவர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் வாக்களிக்கும் போது அனைத்து விவசாயிகளுக்கும் இவர்கள் பேசியது நினைவில் வந்து போகாமல் இருக்காது. அது நிச்சயம் வாக்குகள் எண்ணப்படும் போது பிரதிபலிக்கும்.
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் பாஜக கடந்த முறை வெற்றிபெற்ற மாதிரி மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் அப்போது இருந்த சூழ்நிலை என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். பணமதிப்பிழக்க நடவடிக்கையின் போது பிரதமர் சில உறுதிமொழிகளைத் தந்தார். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், அனைத்து சரியாகிவிடும் என்றார். ஆனால் 50 நாட்கள் அல்ல 5 வருடம் ஆகியும் எதுவும் சரியாகவில்லை. அதே போல் இந்த விவசாய மசோதா எவ்வித விவாதங்களும் இன்றி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை அதோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை.
இந்த பணமதிப்பிழப்பு எவ்வளவு முட்டாள்தனமானது என்று வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடமாகவே வைத்துள்ளார்கள். இந்தியப் பொருளாதாரமே அதன் பிறகுதான் வீழ்ச்சி அடைந்தது. எனவே இரண்டையும் நாம் குழப்பிக்கொள்ள வேண்டாம். விவசாய சட்டத்தைப் பொறுத்தவரையில் முதல் நாளில் இருந்தே அனைவரும் எதிர்த்துத்தான் வருகிறார்கள். தற்போதைய அரசின் முடிவு என்பது விவசாயிகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்" என்றார்.