நான் சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கும்போது தினமும் ஏதாவது ஒரு டைரக்டரை பார்க்கப் போவேன். பாரதிராஜா, பாலச்சந்தர் ஆஃபிஸ்க்கு உள்ளேயே போக முடியாம சலிச்சுப் போகும் நாட்கள்ல, புது டைரக்டர்ஸையும் பார்க்கப் போவதுண்டு.
இந்த ஆங்கிள்ல கமல் மாதிரி இருக்கேனா?
அப்படிப் போன ஒரு இடத்துல ஒரு புது டைரக்டர் என்னைப் பார்த்துட்டு "ஆளு கமல்ஹாசன் மாதிரியே சூப்பரா இருக்கீங்க, நல்லா வருவீங்க"ன்னு பாராட்டுனாரு. நமக்குதான் நம்ம மூஞ்சி தெரியுமே... வெள்ளையா இருந்தா கமல் ஆகிட முடியுமா? இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம் இருந்தது. நம்மள ஒருத்தன் கமல்ஹாசன்னு சொல்லிட்டானேனு. சிரிச்சுக்கிட்டே சரி, சரின்னு கேட்டுக்கிட்டேன். சரியா, கிளம்பும்போது அவரு சொன்னார், "அந்த முக்குல இருக்குற கடையில இட்லி வாங்கித் தந்துட்டுப் போங்க, அடுத்த முறை வாங்க, நீங்க படத்துல நடிக்க ஏற்பாடு பண்றேன்"னு. அப்போதான் தெரிஞ்சது அவரு எதுக்காக என்னை 'கமல்ஹாசன் மாதிரி இருக்க'னு சொன்னாருன்னு. இது 'காதல்' படத்துல வரும் ஸீன் மாதிரியே இருக்குல்ல? சினிமாவுல வாய்ப்புத் தேடி அலையும் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் இது நடந்திருக்கும். வாங்கச் சொல்லும் ஐட்டம் வேண்ணா மாறலாம், இட்லி, பிரியாணி, சரக்கு இப்படி.
இதுதான் கமல்ஹாசன் சாருக்கும் நமக்கும் இருந்த தொடர்பு (?). ஆனா, பின்னாடி கே.எஸ்.ரவிக்குமார் கூட வேலை செய்தபோது கமல் கூட நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூட அறிமுகமாகும்போதே கொஞ்சம் பிரச்சனையாதான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் கமல் சாரை வச்சு 'அவ்வை சண்முகி' படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. ஷூட்டிங் போற தேதியெல்லாம் முடிவாகி தயாராகிட்டோம். அமெரிக்காவிலிருந்து மேக்-அப் மேன் வந்துட்டார். ஆனால், கமலுக்கு மேக்-அப்ல திருப்தியில்லை. வேற ஏற்பாடு பண்ணனும்னு சொல்லிட்டார். எங்க டைரக்டருக்கு ஃபுல் டென்சன். அவர் எப்பவுமே சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டுக்குள் படமெடுத்துக் கொடுக்கிறவர். தயாரிப்பாளர்களின் இயக்குனர்னு அவரை சொல்லுவாங்க.
நாங்க போய் கமல் சாரைப் பாக்குறோம். "இப்போ வேற மேக்-அப் ஏற்பாடு பண்ணனும்னா நீங்க திரும்ப அமெரிக்கா போகணும். மோல்டு எடுக்கணும். இங்கயும் ஷூட்டிங் அதுவரை தள்ளிப்போகும்" என்றெல்லாம் விளக்கி அவரை கன்வின்ஸ் பண்ண முயன்றோம். அவர் கன்வின்ஸ் ஆகல. "அதனால என்ன, படம் நல்லா வரணும்"னு சொல்லி திரும்ப அமெரிக்கா கிளம்பிட்டார். ஒரு மாசம் கழிச்சுத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சது. அப்போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. இதெல்லாம் கூடுதல் செலவுன்னு தோணுச்சு. ஆனால், படம் தயாரான பின்தான் எனக்குப் புரிஞ்சது, இந்த மேக்-அப் ஏன் தேவையென்று.. அவர் சிரத்தை எடுத்து போகாமல் இருந்திருந்தால், இப்பொழுதும் ஒரு ரெஃபரன்சாக இருக்கும் அளவுக்கு தரமா அது வந்துருக்குமா என்பது சந்தேகம்தான்.. இப்படி, கமல் சார் எப்பொழுதுமே தனக்கு திருப்தி வந்தால்தான் ஒரு செயலை முடிப்பார்.
படம் துவங்குவதுக்கு முன்னாடி இப்படின்னா, ஷூட்டிங் அப்போ இன்னும் கடினமா உழைத்தார். அவருடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருக்கு. ஷூட்டிங் நடப்பது மகாபலிபுரம் பக்கத்துல ஒரு பங்களாவுல. அவர் வீட்டுல இருந்து அங்க வர அப்போதெல்லாம் இரண்டரை மணிநேரம் ஆகும். மேக்-அப் போட மூன்றரை மணிநேரம். 5.30 மணிக்கு ஆரம்பிச்சாதான் 9 மணிக்கு ஷூட்டிங் போக முடியும். அப்போ, ஆழ்வார்பேட்டையில் காலைல 2 மணிக்கு எழுந்து தினமும் ஷேவ் பண்ணிட்டு கிளம்பனும். இப்படி, தொடர்ந்து 55 நாட்கள் நடிச்சது எனக்குத் தெரிஞ்சு அவர்தான். வேற யாருகிட்டயும் இந்த அளவு உழைப்பை நான் பார்த்ததில்லை.
9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிச்சு முதலில் க்ளோஸ்-அப் காட்சிகளை எடுப்போம். மேக்-அப் உரிவதற்கு முன்னாடி எடுக்கணும்னு அப்படி செய்வோம். அப்போதெல்லாம் கேரவன் கிடையாது. நாலு மர ஷீட்டை அடிச்சு அதுல விண்டோ ஏசி மாட்டி உள்ள உக்காந்திருப்பார். ஷூட்டிங் முடியும் வரை எதுவும் சாப்பிட முடியாது. ஆனா, அவர் அதுக்கெல்லாம் சளைத்தவரில்ல. சினிமாவுக்கெனவே வாழ்பவர். அவ்வை சண்முகி படத்துல நான் ஒரு சின்ன வேடத்தில் நடித்தேன். கமல் டான்ஸ் மாஸ்டர், நான் டைரக்டரா வருவேன். இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டுனதாக கிரேசி மோகன் என்கிட்டே சொன்னார். அது ஒரு மகிழ்ச்சி.
அப்போல்லாம் நான் ஃப்லிம் சொசைட்டியில நிறைய உலகப் படங்கள் பார்ப்பேன். இப்போதான் நெட் ஃப்ளிக்ஸ், அமேசான் அது இதுன்னு வந்து எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்க முடியுது. அப்போல்லாம் உலக சினிமா பாக்குறவங்க, சென்னையில நல்ல க்ளைமேட் வர்ற மாதிரி ரொம்ப அரிதா இருப்பாங்க. அப்படி உலக படங்கள் பார்த்த பழக்கத்துல, கமல் சார் முன்னாடி கொஞ்சம் அறிவாளியா காட்டிக்கணும்னு, நானே ஒரு டாப்பிக்ல அவருகிட்ட பேச ஆரம்பிப்பேன். "சார்... உங்களுக்கு ஃபிரென்ச் டைரக்டர் கோடார்ட் தெரியுமா, அவரு..." அப்படின்னு ஆரம்பிப்பேன். "ஆமா, ஜேன் லக் கோடார்ட் ..."னு அவரு ஆரம்பிச்சு கோடார்ட் எடுத்த படங்கள் லிஸ்ட், அதுல உள்ள சீன் எல்லாத்தையும் சொல்லுவாரு. அதே கதைதான் அகிரா குரஸோவாவும், அவர் பேரைச் சொன்னாலும் அவரைப் பற்றிய விவரங்களையெல்லாம் சொல்லி அசத்துவாரு. அவரு பேச ஆரம்பிச்சா நான் அடங்கிருவேன். ஆனா, அவருக்கு என்னைப் பிடிக்கும், 'அட்லீஸ்ட் நமக்கு இதெல்லாம் பேச ஒருத்தன் இருக்கானே'னு.
'அவ்வை சண்முகி' படம் வெற்றி பெற்று ஹிந்தியில் 'சாச்சி 420' என்ற பெயரில் எடுத்தோம். அதுலயும் வேலை பார்த்தேன். ஹிந்தி நடிகர் ஓம் பூரி அதுல நடிச்சார். ஷூட்டிங் நடக்கும்போது எல்லார்கிட்டயும் ஹிந்தி அல்லது இங்கிலிஷ் பேசுவார். என் கிட்ட வந்ததும் மட்டும் வேற ஒரு மொழி பேசுவாரு. ஹிந்தி மாதிரியும் இருக்கும், ஹிந்தியில்லாத மாதிரியும் இருக்கும். நானும் புரிஞ்ச மாதிரியே தலை ஆட்டுவேன், அவரு போனதுக்கு அப்புறம் முழிப்பேன். ஒரு நாள் கமல் இதைப் பார்த்துட்டு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு ஒன்னும் புரில, போய் கேட்டேன். "அவரு பேசுனது என்ன மொழின்னு தெரியுமா?"னு கேட்டார். "ஹிந்தி மாதிரி தெரியுது, ஆனா சுத்தமா புரியல" என்று சொன்னேன். சிரிச்சுக்கிட்டே "நீ ரமேஷ் கண்ணானு பேர் வச்சுருக்கீல... கண்ணா என்றால் பஞ்சாபி பெயர். அதான் உன்கிட்ட பஞ்சாபி பேசுறார். உன்னை அவருடைய சொந்தக்காரன்னு நெனச்சுகிட்டார் போல..." என்றார். அப்புறம் நான் ரமேஷ் கண்ணன் என்ற பெயரை ரமேஷ் கண்ணா என்று மாறிய கதையை சொன்னேன்.
கமலுக்கு தெரியாத சப்ஜெக்ட்கள் மிகக்குறைவாகத்தான் இருக்கும். எந்தத் துறையென்றாலும் பேசுபவர்களுக்கு இணையா அவர் பேசுவார். அவர் ஒரு சினிமா மனிதர். எந்த நேரமும் அதைப் பற்றியேதான் யோசிப்பார். அவருடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்க, ஏன் அவர் சினிமாவில் இருக்கும்போது நாமளும் இருக்குறதுக்கே கொடுத்து வைத்திருக்கணும். அதனால்தான் எங்க டைரக்டரும் நாங்களும் அவருக்கு 'உலக நாயகன்' பட்டம் கொடுத்தோம். மற்றவர்களெல்லாம் சினிமாவில் சம்பாரித்து வெளியில முதலீடு பண்ணி பெருக்குவாங்க. இவரு ஒருத்தர்தான் சம்பாதிச்சது எல்லாத்தையும் சினிமாவிலேயே விட்டார். அவர் கூட பல படங்கள் வேலை செய்துவிட்டேன் கமலும் நானும் எவ்வளவோ விஷயங்கள் பேசியிருக்கோம். ஆனா, ஒரு நாளும் அரசியல் பேசியதில்லை. ரஜினி, 'நான் வரமாட்டேன்'னு சொன்னாலும் அரசியல் நிலவரம் பற்றியெல்லாம் பேசுவார். ஆனா, கமல் பேசுனதே இல்ல. இன்னைக்கு திடீர்னு அரசியலுக்கு வந்துட்டார். அவர் கண்டிப்பா வரலாம். அவருக்கு அந்தத் திறன் இருக்கு. எந்த வேலையிலிருந்தாலும் அதில் முழுமையா உண்மையா இருப்பார் கமல் சார், அரசியலிலும் அப்படித்தான் இருப்பார்னு நான் நம்புறேன்.
அடுத்த பகுதி:
முந்தைய பகுதி:
நான் எழுதிய வசனத்தைப் பேச மறுத்த ரஜினி! ரமேஷ் கண்ணா எழுதும் 'திரையிடாத நினைவுகள் #2'