‘மண்ணுலகத்தில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்.’ என்ற ராமலிங்க வள்ளலார் “இறையருளைப் பெறுவதற்கான ஆதாரம் அன்புதான். அன்பு மனதில் ஊற்றெடுக்க வேண்டுமென்றால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்றுதான் வழியாகும். அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்றே சொல்ல வேண்டும். பசியானது புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் பெருங்கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.” என்று தெளிவுபடச் சொல்கிறார்.
வள்ளலாரின் கருணை உள்ளம் குறித்து இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால், வள்ளலாரின் படத்தோடு, மகா அவதார் பாபாஜி மற்றும் ரஜினிகாந்த் படங்களையும் பேனரில் இடம்பெறச்செய்து, ரஜினி அன்னதான மையம் என்ற பெயரில், ரஜித் பாலாஜி என்பவர் சிவகாசியில் தொடர்ந்து அன்னதானம் செய்துவருவதுதான்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் காலையில் நோயாளிகளுக்கு மூலிகைக் கஞ்சி கிடைக்கச் செய்கிறார். சிவகாசியில் தனக்குச் சொந்தமான இடத்தில் அன்னதானமும் செய்துவருகிறார். ‘இது எப்படி உங்களால் முடிகிறது?’ என்று கேட்டால், “தமிழகத்தில் மூன்று இடங்களில் ஓட்டல் தொழில் செய்கிறேன். அதனால், அரிசி, பருப்பு போன்றவை நிறைய வருகிறது. அதனைக்கொண்டு உணவு தயாரிக்கிறோம். சாப்பாடுகூட கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து, அன்னதானம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறோம். ஆரம்பத்தில் இப்படிச் செய்தோம். இப்போது, தானாகவே மக்கள் வந்துவிடுகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
ரஜினி பெயரில் இந்த நல்ல காரியத்தைச் செய்துவருவதால், ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் இவரை வாழ்த்தியிருக்கிறார். வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கிறோம். நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ‘பசி போக்குவதே ஜீவகாருண்யம்’ என்று கூறிய வள்ளலார், ‘எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவித்து, சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான்.’ என்று கூறியதோடு, வாழ்ந்தும் காட்டினார். அவர் வழியில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.” என்றார் தன்னடக்கத்தோடு.
கடவுள் உள்ளமே கருணை இல்லமே! ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது புறநானூறு.