Skip to main content

கைதாவாரா ராஜேஷ் தாஸ்! காப்பாற்றும் எடப்பாடி பழனிசாமி அரசு

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

ddd

 

"எஸ்.பி. பாலியல் அத்துமீறல் விவகாரத்திலேயே இத்தனை மெதுவா நடவடிக்கை எடுத்துச்சுன்னா... சாமான்ய நபர்கள் விவகாரத்துல எங்க நடவடிக்கை எடுக்கப் போகுது'’ என தமிழகமே சலித்துக்கொள்ளும் அளவுக்குத்தான் இருக்கிறது காவல்துறையின் சுறுசுறுப்பு.

 

பெண் எஸ்.பி. பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதையும், எஸ்.பி. முத்தரசியை விசாரணை அதிகாரியாக நியமித்து, விசாகா விசாரணைக் குழு அமைத்ததையும் தவிர வேறெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "பெண் எஸ்.பி. புகார் கொடுக்கச் சென்றபோது பரனூர் சுங்கச்சாவடியில் தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை' என்ற குமுறல் பொதுமக்களிடமும் பல்வேறு அமைப்புகளிடமும் எழுந்துள்ளது.

 

இந்நிலையில், 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழக டி.ஜி.பி. திரிபாதியைச் சந்தித்து, சிறப்பு டி.ஜி.பி. மீது புகாரளித்த பெண் எஸ்.பி.க்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் "பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறப்பு டி.ஜி.பி. காத்திருப்பு பட்டியலில் இருப்பது மட்டும் போதாது. எஸ்.பி.யை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் புகாரளித்தனர். "ராஜேஷ்தாஸ் மீதான புகாரை சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்' என வலியுறுத்தினர்.

 

இது ஒருபுறமென்றால், தமிழகம் முழுவதும் சிறப்பு டி.ஜி.பி.யையும் செங்கல்பட்டு எஸ்.பி.யையும் கைதுசெய்யக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை பணிநீக்கம் செய்ய வேண்டுமென கோவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, து.செ. சுதா சுந்தர்ராமன், மாநிலத் தலைவர் வாலன்டினா உள்ளிட்ட பலரும் கோவை கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு, போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீஸ் தடுத்ததால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகிலும் போராட்டம் நடை பெற்றது.

 

தமிழகமெங்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் குறித்துப் பேசிய மாநிலச் செயலாளர் பாலபாரதி, “ஒரு சிறப்பு டி.ஜி.பி., தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் எஸ்.பி.யிடம் பாலியல்ரீதியாக மோசமாக நடந்துகொண்டார் என அந்தப் பெண் புகார் தந்தபோதே நடவடிக்கை எடுத்திருக்கணும். உடனடியாக சாட்சிகளைக் கலைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கிறதால், அவரைக் கைது செய்திருக்கணும். பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கணும். இதை வலியுறுத்தி நாங்க கோயமுத்தூர்ல எஸ்.பி. அலுவலகத்துக்குப் போய் மனு கொடுக்கப்போனா எங்களையே கைது செய்றாங்க'' என்றார்.

 

இது ஒருபுறமிருக்க, இந்த வழக்கில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் சார்பில் சமரசம் செய்ய முயன்ற வேறொரு அதிகாரியின் பெயரும் தட்டுப்பட்டிருக்கிறது. பெண் எஸ்.பி.யின் புகாரின்பேரில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில்...

 

“உள்துறைச் செயலாளர், தமிழக டி.ஜி.பி.யிடம் புகாரளித்துவிட்டு வீடு திரும்பும் வழியில், எனது கணவர் எனக்கு ஃபோன்செய்து தனது தந்தையிடம் (எனது மாமனாரிடம்) 94422 67101 என்ற எண்ணிலிருந்து ராஜேஷ்தாஸ் சார்பாக ஒருவர் பேசியதாகவும், சமரசம் மற்றும் சமாதானமாகப் போவது பற்றி பேச விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். எனது மாமனாருக்கு இந்த விவகாரம் குறித்துத் தெரிந்திருக்கவில்லையாதலால், ராஜேஷ்தாஸ், என்னிடம் முறையின்றி நடந்துகொண்டதாகவும், அதற்கு மன்னிப்புக் கோர என் காலில் விழத் தயாராக இருப்பதாகவும் அந்த நபர் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு எனது மாமனார் வெறுப்பில், பேச்சின் நடுவிலேயே இணைப்பைத் துண்டித்துவிட்டார்'’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

மாநிலக் காவலர் பணிச் சேவையிலுள்ள உறுப்பினர்களின் முகவரி, தொலைபேசி, அலைபேசி எண்கள் தொகுக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் பார்த்தபோது, அந்த எண் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த டெபுடி கமிஷனர் ஒருவரின் முகவரியின்கீழ் இடம்பெற்றுள்ளது.

 

பெண் எஸ்.பி. மீதான பாலியல் அத்துமீறல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “பெண் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் பழனிசாமி பெண் இனத்துக்கே சாபக்கேடாகிவிட்டார். பெண் எஸ்.பி.யின் புகார்மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப் பதிவுசெய்து 7 நாட்கள் கடந்துவிட்டன. அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ள இரு போலீஸ் அதிகாரிகளையும் இன்னும் சஸ்பெண்ட் செய்து கைதுசெய்யாமல் விட்டுவைத்திருப்பது எதற்காக?

 

இரு குற்றவாளிகளையும் முதல்வர் பழனிசாமியும், அவரது பேச்சுக்கேட்டுச் செயல்படும் உள்துறைச் செயலாளரும் தலைமைச் செயலாளரும் காப்பாற்றிவருவது நியாயமா'' என சூடாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

- கீரன்

 

 

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Rajesh Das petition dismissed High Court in action

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு (16.06.2023)  தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.04.2024) மீண்டும் நீதிபதி தண்டபானி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

‘13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்’ - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
13 IPS officers transferred TN govt action

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.யாக உள்ள தேன்மொழி, தமிழக போலீஸ் அகாடமிக்கு ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏ.எஸ்.பி.யாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வில் திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஸ்டாலின் பதவி உயர்வில் கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஏ.எஸ்.பி. விவேகானந்தா சுக்லா பதவி உயர்வில் திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரி பதவி உயர்வில் மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வி. அன்பு சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராகவும், எஸ். வனிதா மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி. ரமேஷ்பாபு நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராகவும், எஸ்.எஸ். மகேஸ்வரன் சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராகவும், மதுரை நகர் துணை ஆணையர் பாலாஜி காவலர் நலத்துறையின் ஏ.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் கடலோர காவல்படை எஸ்.பி. ஆதி வீரபாண்டியன் சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.