Skip to main content

ஆப்பு வைக்கிறாரா பப்பு?

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
rahul gandhi


காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற மரியாதைகூட இல்லாமல், ராகுல் காந்தியை பப்பு என்று கிண்டல் செய்வது பிரதமர் மோடிக்கு வழக்கம். அதாவது மோடி என்னவோ மிகப்பெரிய மேதை போலவும், நிர்வாகப்புலி போலவும், ராகுல் சின்னக் குழந்தை போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்க மோடியும் பாஜகவினரும் முயற்சித்தனர்.
 

ஆனால், மோடியைப் போல கார்பரேட்டுகளின் வேலைக்காரராக இல்லாமல், மக்களுக்கான வேலைக்காரனாக தன்னை தொடர்ந்து காட்டிக்கொண்டே இருந்தார். இந்தியாவின் ஏழை எளிய மக்களோடு அவர் நின்றார். மோடியின் கோமாளித்தனங்களால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் சுகதுங்கங்களில் பங்கேற்பவராக இருந்தார்.
 

அற்பனுக்கு வாழ்வுவந்தால் அர்த்தராத்திரியில் குடைப்பிடிப்பான் என்ற பழமொழிக்கு உதாரணமாக மோடி உலகநாடுகளை வலம்வரத் தொடங்கினார். பத்து லட்சம் ரூபாய்க்கு உடை அணியவும், ஒருமுறை பயன்படுத்திய உடையை மறுமுறை பயன்படுத்தாமலும் ஆடம்பரமாக வலம்வரத் தொடங்கினார். ராகுலோ, தனது முன்னோரைப் போல கதராடையுடன் எளிமையாக மக்களோடு உறவாடினார்.
 

மோடியின் நிர்வாகத்திறமை பல விஷயங்களில் பல்லிளித்துவிட்டது. அவருடைய முடிவுகளால் இந்தியப் பொருளாதாரம் படுமோசமாக பின்னடைவைச் சந்தித்தது. சிறு மற்றும் குறுந்தொழில்கள் நசிவடைந்து, கார்ப்பரேட்டுகளின் கை ஓங்கத் தொடங்கியது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று பல வகைகளில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கையை சீரழித்து, அம்பானி, அதானி உள்ளிட்ட பெருமுதாலாளிகளின் பாக்கெட்டுகளை நிறைத்தது.
 

விவசாயிகளையும், விவசாயத்தையும்கூட மோடி கருத்தில் கொள்ளவில்லை. விவசாயிகளின் பிரச்சனையை பேசியே ஆட்சிக்கு வந்த மோடி, விவசாயக் கடன் தள்ளுபடிக் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்தார். போராடிய விவசாயிகள் நாடுமுழுவதும் பைத்தியக்காரர்களைப் போல நடத்தப்பட்டனர். ம.பி.யிலும், ராஜஸ்தானிலும், உ.பி.யிலும் கேவலமாக ஒடுக்கப்பட்டனர். ஒரு பைசா கடன் தள்ளுபடி என்ற கேவலமான நிகழ்வுகளும் நடந்தேறின.
 

மக்களின் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி சாமியார்களுக்கும், அகோரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மக்களை மத அடிப்படையில் பிரித்தாளும் முயற்சிகளை பாஜக தீவிரப்படுத்தியது. மாடுகளைக் காட்டிலும் மனிதர்கள் கேவலமாக அடித்துக் கொல்லப்பட்டனர்.
 

கடந்த நான்கரை ஆண்டு மோடி அரசாங்கத்தின் ஆகப்பெரிய நிர்வாகம் என்பது சாமானிய மக்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாத்தித்ததுதான். அதற்கான விலையைத்தான் பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்கள் இப்போது கொடுத்திருக்கின்றன.
 

மோடியால் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்தி, மோடிக்கு வைத்த ஆப்பாகவே இந்த தேர்தல் முடிவுகளை பார்க்க வேண்டும்.