Skip to main content

உங்கள் விருதும் வேண்டாம், நீங்களும் வேண்டாம்...

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

முகத்தில் நீண்ட வெள்ளை நிற தாடி, நீண்ட வெள்ளை நிற தலை முடி, மெரூன் நிறத்தில் கவுன் போன்ற உடை. பார்க்க ஞானம் பெற்ற முனிவர் போன்று இருப்பார், அவர் தான் ரவீந்திரநாத் தாகூர், இந்திய தேசியகீதத்தை எழுதியவர். வங்காள மொழி தெரியாதவர்களும்கூட இவர் வங்காளத்தில் எழுதிய தேசிய கீதத்தை பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள். கீதாஞ்சலி என்ற இவரது கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டதுதான் இந்தியாவின் தேசிய கீதம். இவரின் கவிதைகள் விடுதலைக்கானது, மனிதாபிமானமிக்கது, ஆன்மிகம் நிறைந்தது. மேலும் சொல்லப்போனால் வங்காள இலக்கியத்தையும், இசையையும் புதிய வடிவிற்கு மாற்றியவர் இந்தியாவின் இலக்கியமென்றாலும்கூட சூழ்நிலைக்கு ஏற்ப இலக்கியத்தை நவீனமயமாக்கினார் என்று இலக்கியவாதிகளால் போற்றப்பெற்றவர்.
 

rabindranath tagore


தனது எட்டு வயதிலிருந்தே கவிதைகள் படைக்கும் வல்லமை பெற்றிருந்தார். 16 வது வயதில் கணிசமான கவிதைகளை தொகுப்பாக வெளியிட்டார். இதனை இலக்கியவாதிகள் தங்கள் மொழிக்கான 'கிளாசிக்' என்று போற்றி புகழ்கின்றனர். பிறகு, சிறுகதைகள், நாடகங்களுக்கு கதை போன்றவற்றையும் எழுதத் தொடங்கினார். தாகூர் ஒரு மனிதாபிமானம் உள்ளவராகவும், சர்வதேசியவாதியாகவும், பிரிட்டிஷாரை கண்டிக்கும் ஒரு தீவிர எதிர்ப்பு தேசியவாதியாகவும், அவர்களிடம் இந்தியாவின் விடுதலையை மட்டுமே கோரி வந்தவராக இருந்துள்ளார். வங்காள மறுமலர்ச்சி எந்த கலை சார்ந்து இருந்தாலும் அதற்கு காரணம் இவர்தான். பல ஓவியங்களும், டூடுல்களும், பல கட்டுரைகளும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களும் இயக்கியிருக்கிறார். விஷ்வ பாரதி பல்கலைக்கழம் என்ற ஒன்றை நிறுவி பலருக்கு கல்வியையும் தந்துள்ளார்.
 

rabindranath tagore


1912 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். ஐரோப்பியர் அல்லாத நோபல் பரிசு பெற்றவர்களில் முதன்மையானவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவரின் அழகிய கீதாஞ்சலி கவிதை தொகுப்புக்கு கிடைத்த பரிசுதான் இது. இதனை வாழ்த்தி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்த பாரதியார் கவிதை ஒன்றை பரிசாய் அவருக்கு கடிதம் மூலம் அனுப்பியிருக்கிறார். ஒரு நாட்டிற்கு ஒருவரின் எழுத்து தேசியகீதமாய் அமைவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம். இரண்டு நாடுகளுக்கு ஒருவரின் பாடல் தேசியகீதமாய் அமைவது என்பது அசாத்தியம். ஆம், இவரின் எழுத்துக்களால் உருவான இரண்டு பாடல்கள் இரண்டு நாட்டின் தேசிய கீதமாய் இருக்கிறது. "ஜன கண மன கதி" என்று தொடங்கும் இந்திய தேசியகீதத்தையும், "அமர் ஷோனார் பங்ளா" என்று வங்காளதேசத்திற்கும் இவரது எழுத்துக்களால் உருவானபாடல்கள்தான் தேசியகீதமாய் உள்ளது. இங்கிலாந்து அரசின் கவுரமிக்க விருதுகள் அக்கால கட்டங்களில் பிரசித்தி பெற்றது. அவர்களின் சர் பட்டத்தை வாங்க பல பிரிட்டிஷார்கள் கடுமையாக உழைத்தனர். உழைப்பு என்றால் அதிகப்படியான வரியை இந்திய மக்களிடமிருந்து பெறுவது, மக்களை துன்பப்படுத்துவது என்று ஏதேதோ செய்து நல்லபெயரை சம்பாதிக்க முயற்சிப்பர். பிரிட்டிஷார்களின் கவுரமிக்க விருதுகளை அவ்வப்போது இந்தியர்களுக்கும் கொடுத்தனர். அப்படித்தான் " கிநைட்ஹூட்" என்று சொல்லப்படும் கவுரவ விருதை 1915 ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கும், எழுத்து மூலம் அவர் ஆற்றிய தொண்டுகளுக்காகவும் கொடுத்தனர்.  

jallianwala bagh


"நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன்படி, அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை" என்று ஜெனரல் டயர் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக இராணுவ மேலதிகாரிகளிடம் கொடுத்த வாக்குமூலம் இது. 1919 ஆம் ஆண்டில் நடந்த இந்த படுகொலையில் 376 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டதாக பிரிட்டிஷ் பதிவு சொல்கிறது. ஆனால், 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் தனக்கு தரப்பட்ட கவுரவ விருதான 'கிநைட்ஹூட்' விருதை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமே திருப்பி அனுப்பினார். இதன் மூலம் இங்கிலாந்தில் பரவலாக இந்த படுகொலை பற்றி விமர்சிக்கப்பட்டு வந்தது. இச்சம்பவத்தின் மூலம் பெரும் அவமானத்தை இங்கிலாந்து பெற்றிருக்கிறது. தற்போது அரசாங்கத்தை எதிர்த்து விருதுகளை திருப்பி தருபவர்களுக்கும், புறக்கணிப்பு செய்பவர்களுக்கும் இவர்தான் முன்னோடி.

Next Story

‘தென்னாட்டு ஜான்சி ராணி’ - கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை திறப்பு

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Statue of Anjalayammal inaugurated in Cuddalore

 

கடலூர் புதுநகர் பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

 

சுதந்திரப் போராட்டக் களத்தில் தவிர்க்க முடியாதவரும், ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிவாகப் போராடியவருமான அஞ்சலையம்மாள், வயிற்றில் கருவைச் சுமந்து போராடி சிறை சென்றார். பின்பு ஜாமீனில் வெளியே வந்து பிரசவத்தை முடித்துவிட்டு, மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கைக்குழந்தையுடன் சிறைச் சென்றார். கடலூரில் மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் கைது செய்துவிடாமல் தடுத்து காப்பாற்றினார் அஞ்சலையம்மாள். அதற்காக அவருக்குத் தென்னாட்டு ஜான்சி ராணி என்று காந்தி பட்டம் கொடுத்தார். 

 

இந்த நிலையில், அவரது சொந்த ஊரான கடலூரில் அஞ்சலையம்மாளுக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கடலூர் புதுநகர் பூங்காவில் உள்ள சிலையைத் திறந்து வைத்தார். சிலை திறப்பு நிகழ்ச்சியில் கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அஞ்சலையம்மாளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

 

 

Next Story

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Chief Minister M K Stalin inaugurated the statue of poet Rabindranath Tagore

 

செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் முழு உருவச் சிலையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, சேகர் பாபு, சாமிநாதன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.