Skip to main content

மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது..! பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..!

Published on 30/11/2020 | Edited on 03/12/2020

 

ddd

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக, பஞ்சாப் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், டெல்லியில் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

 

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பிறகு விற்கலாம், அப்படியான ஒரு நல்ல காரியத்தை நாங்கள் செய்திருக்கிறோம் என்று மோடி சொல்லி வருகிறார். 

 

உண்மையில் விவசாயி இருப்பு வைக்க முடியாது. பெரிய வியாபாரிகள்தான் இருப்பு வைத்துச் சம்பாதிப்பார்கள். இதனை, பா.ஜ.க தலைவர்கள் உள்பட மோடி வரை அனைவரும் மறுத்தார்கள். பெரம்பலூரில் உள்ள குடோனில் வெங்காயத்தை டன் கணக்கில் பதுக்கி வைத்ததைப் பறிமுதல் செய்ததோடு நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க என்ன சொல்கிறது?

 

செப்டம்பரில் சட்டத்தை நிறைவேற்றினார்கள். மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் வெங்காயத்தை யார் இருப்பு வைத்தார்கள் என்று தெரிய வந்திருக்கிறதே?. 

 

ஒரு விவசாயி தன்னுடைய பொருளை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சென்று யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம் என்கிறார்கள். எந்த ஒரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் அதுபோல் செய்வது நடைமுறையில் சாத்தியமே கிடையாது. 

 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு எதுவாக இருக்கட்டும், உடனே அதனை விற்க வேண்டும், அந்த காசை வாங்கி கடனை அடைக்க வேண்டும், குடும்பச் செலவு செய்ய வேண்டும், மறுபடியும் சாகுபடி செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதுதான் யதார்த்தமான நிலைமை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பொருளை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பது என்பது சாத்தியமே கிடையாது. அதேபோல் இருப்பு வைப்பதும் சாத்தியமில்லை. 

 

விலை குறையாமல் இருப்பதற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் செய்யும்போது குறிப்பிடப்பட்டுள்ள தொகையைக் கொடுக்கவில்லை என்றால், புகார் செய்து அதனை வசூல் செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. 

 

cnc

 

நடைமுறையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், கரும்பு விவசாயி கரும்பை உற்பத்தி செய்து ஆலைகளுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆலைதான் கரும்பின் விலையைத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் அதனுடன் கூடுதலாகக் கொடுப்பதை தீர்மானிக்கிறது. ஆனால், அந்தத் தொகைகளை விவசாயிகள் பெற முடியவில்லையே. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆலைகளிலும் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகை கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது. 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல், மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள்தான் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கார்ப்பரேட் முதலாளிகள் பலமடைய வேண்டும் என்பதற்காக, நன்றி விசுவாசத்தோடு, அரசாங்கத்தின் சட்ட ரீதியான உதவிகளைக் கொண்டுவருவதற்கு, பா.ஜ.க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அழுத்தமாக. 

 

 

Next Story

‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - சுனிதா கெஜ்ரிவாலின் புதிய பிரச்சாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Sunita Kejriwal launched a new campaign 'Blessing Kejriwal'

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இதற்காக கெஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு கூறுவதற்காக வாட்ஸ் ஆப் எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் இன்றில் இருந்து ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ என்று ஒரு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இந்த வாட்ஸ் ஆப் எண்ணின் மூலம் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்த்து மற்றும் ஆசிர்வாதங்களை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என்று பேசியுள்ளார்.

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.