சமீப காலமாக, அதிரடி பேட்டிகளின் மூலம், இந்துக்களின் காவலனாகத் தன்னை வெளிப்படுத்திவரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் ‘யாருய்யா நீ? எங்கயிருந்த இவ்வளவு நாளா? உன்ன மாதிரி ஒரு ஆளத்தான்யா தேடிக்கிட்டிருந்தோம்..’ என்கிற ரீதியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பேசிவருகிறார்களாம். விளம்பரங்களில் ‘வலிமையின் சிகரம்’ என்ற பட்டத்தை வேறு அவருக்குத் தந்து “இந்துக்கள் காலம் காலமாக பேசாமல் இருந்த பல பிரச்சனைகளை, ஒரு அமைச்சராக இருந்தும் இத்தனை துணிச்சலாகப் பொதுவெளியில் பேசுவது நீங்கள் மட்டும்தான்..’ என்று நாகர்கோவில் பகுதியிலிருந்து பாராட்டவும் செய்கிறார்களாம்.
தமிழகத்தில் அதிக அளவில் மீடியாக்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்பவர்களில் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் ஒருவர். அவரிடம் ‘அரசியலைக் காட்டிலும் மதங்கள் குறித்துப் பேசுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றீர்களே? பொதுத்தேர்தலுக்கு முன், புதிதாக ஒரு அமைப்பு தொடங்கி, தமிழகத்தில் இந்துக்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தோடு இருப்பதாகப் பேசப்படுகிறதே? சமீபத்திய இந்து ஆதரவுப் பேச்சின் பின்னணியில் அமைப்பு ரீதியாக சிலர் இருக்கிறார்களாமே?’ என்று கேட்க, நம்மிடம் தன் மனதில் இருந்தவற்றை வெளிப்டையாகப் பேசினார்.
“முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். அதிமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதிலிருந்து ஒருக்காலும் விலகமாட்டேன். வேறு அமைப்பு தொடங்குவேன் என்று பேசுவதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ, அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், நிச்சயம் குரல் கொடுப்பேன். சரி, மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். ‘அந்த எஸ்.ஐ. சம்பவத்தை ஒரு கொலை சம்பவமா ஆக்கிட்டாங்க. ஒரு கொலைன்னு அப்படியே முடிச்சிட்டாங்க. நீங்கதான், பிரச்சினையை வெளியே கொண்டுவந்தீங்க’ன்னு என்கிட்ட பலர் கவலையோடு பேசினாங்க. இந்தமாதிரி ஏன் கொலை பண்ணுறாங்க? அவங்களுக்கு என்ன கொள்கை இருக்கு? என்ன நோக்கம் இருக்கு? கொலை பண்ணுறதுக்குன்னு ஒரு காரணத்தைச் சொல்லுவாங்க. அப்பாவி மக்களைக் கொல்லுறத எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ரொம்ப பொறுமையா இருக்கேன். தற்கொலை கொலைகளில் கூட, சாதி, மதம் பார்த்தே செயல்படுது திமுக. யாரை நாம சப்போர்ட் பண்ணலாம், யாருக்காக குரல் கொடுக்கலாம்னு, எல்லாத்துலயும் அந்தக் கட்சிக்கு ஓட்டு கணக்குதான்.
நான் எந்த மதத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை. வரலாற்றுப் பதிவுகளை உள்ளது உள்ளபடி சொல்கிறேன். பல்வேறு படையெடுப்புகளில் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிருந்து மன்னர்கள் போய் பிற வழிபாட்டுத்தலங்களை இடித்தார்கள் என்று எந்த வரலாற்றிலும் இல்லை. இவ்வளவு நடந்தும், எப்போதும் இந்துக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். தேசப்பற்றுடன், பிற மதத்தினரோடு சகோதரத்துவத்துடன் பழகிவருகிறார்கள். இந்தத் தன்மையை தவறாகப் பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியுமா? இது என் தனிப்பட்ட கருத்து. எந்த மதத்திலும் ஒட்டுமொத்த பேரும் தவறானவர்கள் கிடையாது. ஒரு சிலர்தான், வன்முறையில் இறங்குகிறார்கள். அவர்களை விமர்சிக்காமல் எப்படி இருக்கமுடியும்? திமுகவோ, அத்தகைய விசயங்களில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவர்களுக்குத் துணை போகிறது. அதனால்தான், திமுக தலைமையைக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். கூட்டணி சேர்ந்து, பெருவாரியான மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் அவர்கள் எம்.எல்.ஏ. ஆனார்கள். ஆனால், சட்ட மன்றத்தில் ஒரு தடவைகூட பொதுவான மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்ததில்லை. அவர்கள் சார்ந்த மதத்தினருக்காக மட்டுமே பேசிவருகிறார்கள். இது மதம் சார்ந்த அரசியல் கிடையாதா?
திமுகவும் தி.க.வும் என்ன செய்கிறது? இந்து கோவில்களை விமர்சிக்கிறது. இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தி பேசுகிறது. ஓட்டுக்காக ஜாதி ரீதியாக, மத ரீதியாகப் பிரித்துப் பார்க்கின்ற திமுகவின் அணுகுமுறைக்கு எதிராக உறுதியாக குரல் கொடுப்பேன். இந்துக்கள் மற்ற மதத்தினர் மீது வைத்திருக்கும் நேசத்தையும், மனிதத்தன்மையோடு நடந்துவரும் நற்பண்புகளையும் எல்லா மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், எனது பாணியில் எடுத்துச் சொல்கிறேன். நான் சொல்வதெல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்பதால், சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் மதவெறியைத் தூண்டுவதாகச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
எந்த மதத்திலும் எந்தக் கடவுளும் மனிதனின் உயிரைப் பறிக்கச் சொல்லவில்லை. சிலர்தான், தங்களின் அரசியலுக்காக, சுயநலத்துக்காக, பிற மதத்தினரை பகைமையுடன் பார்க்கின்றனர். ஒரு மத வழக்கங்களை, பழக்கங்களை மட்டும் கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் முதலில் பொதுவாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கடகடவென பேசிவிட்டு ஓய்ந்தார்.
அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய ஒரு அமைச்சரின் இத்தகைய பேச்சும் நிலைப்பாடும் கலவையான கருத்துகளுடனே எதிர்கொள்ளப்படுகிறது.