Skip to main content

தமிழ் சினிமாவுக்கு ஒரு தேசிய அங்கீகாரம்! ரஜினியின் சாதனை பயணம்!!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021
Superstar

 

ஏப்ரல் 1. தமிழகம் முழுவதும் ஜனநாயக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டிக்கொண்டிருந்தபோது, ரஜினியின் அரசியல் முடிவால் சற்றே சோர்வடைந்திருந்த அவரது ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானது அந்த அறிவிப்பு.

 

இந்திய சினிமாவில் நான்கு தசாப்தங் களைக் கடந்தும் மக்கள் மனதில் அசைக்கமுடியா சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ரஜினிக்கு இந்திய திரைத் துறைக்கான மிக உயரிய விருதான "தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. தமிழ் திரைத்துறையில் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் பாலச்சந்தருக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் மூன்றாவது நபர் ரஜினிதான்.

 

"இந்திய சினிமாவின் தந்தை' என வர்ணிக்கப்படும் இயக்குனர் தாதாசாகேப் பால்கே பெயரால் 1969-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு வழங்கிவரும் இந்த விருது, திரைத்துறையின் வளர்ச்சிக்காகப் பங்காற்றிய கலைஞர்களைக் கௌரவிக்க வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விருது வழங்கப் படாமல் இருந்த சூழலில், "2019-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது.

 

Superstar

 

இந்த விருது அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே கொண்டாடியது. அதற்கு மிகமுக்கிய காரணம், ரஜினி என்ற பெயருக்கு இன்றளவும் இருக்கும் அந்த "மாஸ்'தான். இதற்குமுன்பு இந்த விருதினைப் பெற்ற சாதனையாளர்களைப் போல அல்லாமல், "சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தோடு தனது கரியரின் உச்சத்தில் இருக்கும்போதே இந்த விருதினை பெற்றுள்ளார் ரஜினி. 1975-ல் "அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி திறந்த அந்த கேட், அவரை கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மேன் கலர், அனிமேஷன், 3டி படங்கள் என நீண்டநெடிய பாதையில் "அண்ணாத்த' வரை வெற்றிகரமாகப் பயணிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

 

தமிழ் சினிமாவில் அதுவரை ஹீரோவுக் கென இருந்த இலக்கணத்தை உடைத்து, திறமை மற்றும் உழைப்பை மட்டுமே கொண்டு படிப்படியாகத் திரையுலகின் உச்சிக்கு ஏறி வந்த நடிகர் அவர். ஆண்டுக்கு இருபது படங்கள் வரை கூட ரஜினி நடித்த காலகட்டம் உண்டு. சிறிய வேடங்களில் தொடங்கி, வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ, சூப்பர் ஸ்டார் என 45 ஆண்டுகால தனது சினிமா பயணத்தில், தலைமுறைகள் கடந்து அனைத்து வயதினரை யும் தன்னை ரசிக்க வைத்த ரஜினி, இன்று தனது எழுபதாவது வயதிலும் தன்னை ரசிக்க வைக்கிறார் என்பதே அவ ரது வெற்றிக்கான காரணம்.

 

புதிய தொழில்நுட்பங்கள், புதிய ஜானர்கள், புதியவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக் காலத்திற்கேற்பத் தன்னை தகவமைத்துக்கொண்ட ரஜினி சிறந்த நடிகராகவும், மாஸ் என்டர் டெய்னராகவும் தன்னை மக்கள் மனதில் பதிய வைத்தார். தென்னிந்தியாவைக் கடந்து வடஇந்தியாவிலும், ஏன்? சர்வதேச அளவிலும் கூட தனக்கான ரசிகர் வட்டத்தை விரி வாக்கியுள்ளார் ரஜினி. நடிகர் என்பதைக் கடந்து தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என சினிமாவின் பல்வேறு தளங்களில் பயணித்த ரஜினி இன்று அடைந்திருக்கும் உயரம் அசாத்தியமானது. இந்திய சினிமாவின் 108 ஆண்டுகால பயணத்தில் 45 ஆண்டுகள் ரஜினியும் பயணித்திருக்கிறார் என்பதே இந்திய சினிமா மீதான அவரது தாக்கத்தை நமக்கு புரியவைக்கும்.

 

"முரட்டுக்காளை' தொடங்கி "பாட்ஷா', "படையப்பா', "தர்பார்' வரை தலைமுறை கடந்து தாறுமாறான பல மாஸ் படங்களைக் கொடுத்த ரஜினி, "முள்ளும் மலரும்', "16 வயதினிலே', "ஆறி லிருந்து அறுபது வரை' என நடிப்புக்குப் பெயர் சொல்லும் படங் களைக் கொடுக்கவும் தவறியதில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால உழைப்பின்மூலம் இந்திய சினிமாவின் பாட்ஷாவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ரஜினிக்கு "பால்கே விருது' என்பது தமிழ் சினிமாவுக்கான தேசிய அங்கீகாரமே.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Chief minister MK Stalin Greetings to writer Bama 

பெண்களுக்காகக் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஆம் தேதி) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாகத் தலித் மக்களின் குரலாக ஒலித்து சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு நேற்று (07.03.2024) அறிவித்திருந்தது.

எழுத்தாளர் பாமா, பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையைத் தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய ‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட் புக்' விருதைப் பெற்றுள்ளது.

Chief minister MK Stalin Greetings to writer Bama

இந்நிலையில் எழுத்தாளர் பாமாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார். மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்து நடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.