Skip to main content

அனைத்து தொகுதிகளிலும் வென்றதும் உண்டு தோற்றதும் உண்டு... பாமகவின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு!

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

pmk


2019 நாடாளுமன்ற தேர்தல், யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மீதும் மாநில அரசு மீதும் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்று சொல்லப்படும் நிலையில் அதிமுக எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற கேள்வி இருக்கிறது. 
 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல். இந்தத் தேர்தலில் கண்டிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்ததற்கு ஏற்ப, பாஜகவின் தமிழக பொறுப்பாளரான பியூஷ் கோயல் கடந்த வாரம் ஒரு நாள் நள்ளிரவில் தமிழகம் வந்து, அதிமுக தொகுதி பங்கீட்டாளர் குழுவை சந்தித்துவிட்டு சென்றார். இன்று காலை பாமகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. திடீரென அடையாரிலுள்ள க்ரௌண் பிளாஸா ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசி பின்னர் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வருவதற்கு முன்பு பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். அதை உடைக்கும் வகையில் தற்போது அதிமுகவும் பாமகவும் கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

பாட்டாளி மக்கள் கட்சி 1989ஆம் ஆண்டு ராமதஸால் உருவாக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல்களில் 1991ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட்டாலும் 1996ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.  அப்போது மதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமை வகித்த திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. சுமார் 15 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது, ஆனால் ஒரு தொகுதியில் கூட  வெற்றி பெறவில்லை. 
 

மத்தியில் தேவ கௌடாவின் ஆட்சி கவிழ்ந்தபின் 1998ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுகவுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பாமக. இந்தத் தேர்தலில் பாமக 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

இந்த ஆட்சி 13 மாதங்களிலேயே கவிழ, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. இதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பாமக இந்தத் தேர்தலிலும் அதையே தொடர்ந்தது. இத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

2004ஆம் ஆண்டு தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளிலுமே வெற்றிபெற்றது. மத்தியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி ஏற்றார்.
 

2009ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கடைசி கட்டத்தில் கூட்டணி வைத்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாமல் போனது. அதிமுக தலைமையில் உருவான இந்த கூட்டணி, தேசிய கட்சிகளுடனான கூட்டணியில் சேராமல், தேர்தலுக்குப் பின்பே பாஜகவுக்கு ஆதரவு அளித்தது.
 

2014ஆம் ஆண்டில் பாமக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் பாஜக-தேமுதிக-மதிமுக-ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் கூட்டணி அமைத்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் பாமகவும், மற்றொன்றில் பாஜகவும் வெற்றிபெற்றன. பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். மத்தியில் பாஜகதான் ஆட்சியும் அமைத்தது, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
 

இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு. பாமக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல முறை இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும் தனித்தே போட்டியிடுவோம் என்றும் கூறி வந்துள்ளது. அது போல ஓரிரு சட்டமன்ற தேர்தல்களில் செயல்பட்டும் உள்ளது. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல்களை கூட்டணியுடன்தான் சந்தித்து வருகிறது. பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் மத்திய அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். இந்த முறை பாமக எடுத்துள்ள கூட்டணி முடிவு அதற்கு எத்தகைய பலன்களை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது