Skip to main content

''கூப்பிடும்போதெல்லாம் வரணும்!'' தொண்டரின் மனைவியிடம் அத்துமீறிய அ.தி.மு.க. புள்ளி! முதல்வரின் சொந்த ஊரில் 'பிளே பாய்' கவுன்சிலரின் லீலை... 

 

Ervadi

 

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அ.தி.மு.க.வில் பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளராகவும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மனைவி அமுதா. ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். உள்ளூரில் இக்குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கு உண்டு. அண்மையில், அவர் காமாட்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவரின் மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரிடம் 'அத்துமீறிய' சம்பவம், சேலம் மாவட்ட இலை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜெகநாதன் மீது மல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்மீது காவல்துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்குள்ளாகவே, புகார் கொடுத்தவரே திடீரென்று மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வாபஸ் பெற்றுள்ளார். ஜெகநாதனின் ஆள்கள் அவரை மிரட்டியதால்தான், புகாரைத் திரும்பப் பெற நேர்ந்ததாக காட்டுத்தீ போல தகவல்கள் கிளம்பின. மற்றொருபுறமோ, ஜெகநாதன் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட குரல் பதிவும் வெளியாகியது. 

 

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய கணவரும் பேசத் தயங்கிய நிலையில், அவர்கள் சார்பாக உள்ளூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் நம்மிடம் விரிவாகப் பேசினர்.


பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண்ணுக்கு 30 வயதாகிறது. அவருக்கு 14 வயது, 12 வயதுகளில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கணவர், சுமை தூக்கும் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், ஜூலை 10ஆம் தேதி அவருடைய வீடு அருகே, ஏர்வாடி பஞ்சாயத்து நிதி சார்பில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக போர்வெல் போடும் பணிகள் நடந்தது. அந்தப் பணிகளைப் பார்வையிடுவதற்காக பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதனும், அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர்.


அப்போது வீட்டில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்ணும், இரு குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். அந்த வீட்டுக்குப் பின்புறத்தில் ஜெகநாதனும், உடன் வந்தவர்களும் மது அருந்தினர். திடீரென்று ஜெகநாதன், 'சைடு டிஷ்' வாங்கி வருவதாகக் கூறிவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் திடுதிப்பென்று நுழைந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். 


ஜெகநாதன், ஒரே ஊர்க்காரர் மட்டுமின்றி, அ.தி.மு.க.வில் பெரிய புள்ளி. அதனால் அந்தப் பெண், அவர் வீட்டுக்குள் நுழைந்ததைப் பற்றி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ''என்னாலே இத்துனூண்டு வூட்டுக்குள்ள இருக்கறவ... பனமரத்துப்பட்டி சேர்மன் நான்தான். அரசாங்கம் கொடுக்குற இலவச தொகுப்பு வீட்டை உனக்குத் தந்துடறேன். உன்னை என் பொண்டாட்டி மாதிரி வெச்சி காப்பாத்துறேன்... என்ன சொல்றலே...,'' என்று அவருக்கு வலை விரித்துள்ளார். திடீரென்று ஜெகநாதன் அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முயன்றார். பதறிப்போன அவர், மகன்களிடம் ஓடிச்சென்று அவர்களை அரவணைத்தபடி நின்று கொண்டார். 


'நீங்க எனக்கு அப்பா மாதிரி. பசங்க முன்னாடி இப்படி எல்லாம் செய்றது நல்லா இல்லீங்க... இங்கிருந்து வெளியே போய்டுங்க...,' எனக் கெஞ்சவும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போன ஜெகநாதன், 'சரி... இப்போ போய்டுறேன்... நான் கூப்புடும்போது நீ வந்துடணும். ஒரு நாளாவது என் கூட இருக்கணும்லே... சரினு சொல்லி சத்தியம் பண்ணு... நான் போயிடறேன்...,' எனப் பிடிவாதமாக கேட்டிருக்கிறார். அவரை எப்படியாவது அங்கிருந்து அப்புறப்படுத்தினால் போதும் என்ற கையறு நிலையில் இருந்த அந்தப் பெண், அவருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அதன் பின்னர்தான் ஜெகநாதன் அங்கிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியும் இருக்கிறார்.


ஊரு பெரிய மனுஷன பகைச்சிக்கிட்டா என்னாவறதுனு ரெண்டு நாளா மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டிருந்த அந்தப் பொண்ணு, தயங்கி தயங்கி தன் புருஷன்கிட்ட நடந்த சம்பவத்தைச் சொல்லிருக்கு. அதன்பிறகுதான், அந்தப் பொண்ணோட கணவன், இதுபத்தி ஜெகநாதன்கிட்ட போன் போட்டு நியாயம் கேட்டிருக்கிறார்,'' என்கிறார்கள் உள்ளூர் ர.ர.க்கள். 


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஜெகநாதனிடம் நியாயம் கேட்கும் குரல் பதிவும் வாட்ஸ்ஆப்பில் வேகமாக பரவியது. அந்த ஆடியோவில், அந்தப் பெண்ணின் கணவர், மரியாதையாக அப்பா என்றே அழைக்கிறார். ஜெகநாதனோ, எடுத்த மாத்திரத்திலேயே, 'தெரியாம தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சுடு...,' என்று திரும்பப் திரும்பத் ஒரே பதிலைச் சொல்லி பேச்சைத் துண்டித்தார்.

 

2.36 நிமிடங்கள் கொண்ட அந்தக் குரல் பதிவில் உள்ள உரையாடல் விவரம்...


பாதிக்கப்பட்டவர்: அப்பா... காமாட்சி காட்டுலருந்து பேசறேன்பா... அன்னிக்கு எங்கூட்டுக்காரம்மா கிட்ட ஏதோ கேட்டீங்களாமே...

 

ஜெகநாதன்: சொல்லுப்பா

 

பாதிக்கப்பட்டவர்: அன்னிக்கு எங்கூட்டுக்காரிக்கிட்ட என்னமோ கேட்டீங்களாமே

 

ஜெகநாதன்: என்ன..?

 

பாதிக்கப்பட்டவர்: நீங்கதான் சொன்னீங்களாம்... 'என்கூட ஒரு நாள் இருனு' சத்தியம்லாம் வாங்கிட்டுப் போனீங்களாமே...

 

ஜெகநாதன்: டேய் டேய் டேய் இல்லட இல்லடா இல்லடா... சத்தியம்லாம் ஒண்ணுமில்லடா டேய் டேய் டேய் டேய்... தப்புடா தப்புடா

 

பாதிக்கப்பட்டவர்: நான் உங்க மேல தனி மரியாதை வெச்சிருக்கேன். இந்த மாதிரிலாம் இருந்தா எப்படி... உங்கள நம்பிதானே கட்சில இருக்கோம்...

 

ஜெகநாதன்: டேய் டேய் டேய்... நூத்துக்கு நூறு உண்ம. நேரடியா வந்து பேசறேன்... நானே வந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்டா

 

பாதிக்கப்பட்டவர்: என்னப்பா நேரடியா வந்து பேசறீங்க...? எனக்கு எப்படிப்பா இருக்கும் ரெண்டு நாளா?

 

ஜெகநாதன்: இல்லடா இல்லடா... தவறுடா தவறுடா... வரேன்டா வரேன்டா... இருடா

 

பாதிக்கப்பட்டவர்: என்னப்பா வரேன்னு...

 

ஜெகநாதன்: டேய்... தப்புன்னுட்டேன் ஒரே வார்த்தைல... ஆங்... தப்பு. ஏதோ தெரியாம ஒரு வார்த்த வந்திருக்கலாம். தவறு. செஞ்சது தப்புதான். நானே சொல்லலாம்னு பார்த்தேன். டைம் கிடைக்கல. 

 

பாதிக்கப்பட்டவர்: இல்லப்பா. நீங்க பெரிய இதுல இருக்கீங்க. நாங்க இல்லாதவைங்கதான். இந்த மாதிரி கேவலமா.. எனக்கு ழுவாச்சி ஆத்திரம் தாங்க முடியல. அதுக்கு நாங்க செத்தே போயிடலாம்பா... இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு... (நா தளுதளுக்கப் பேசினார்)

 

ஜெகநாதன்: டேய் டேய் டேய் ... அழுவாதடா... 

 

பாதிக்கப்பட்டவர்: அதுக்கு நாங்க செத்தே போயிடலாம்...

 

ஜெகநாதன்: அட சொல்ற வரைக்கும் கேளுடா... 'டிரிங்க்ஸ்' ஆயிப்போச்சுடா... ஆண்டவன் பொதுவா தவறுதான்...

 

பாதிக்கப்பட்டவர்: நான் அந்த மாதிரி தண்ணீ போட்டுட்டு உங்க வீட்டுக்கிட்ட வந்து கேட்டா என்ன நினைப்பீங்க சொல்லுங்க...?

 

ஜெகநாதன்: அதான் முன்னாடியே சொல்லிப்புட்டேன். தவறுனுபுட்டேன். இனிமே நடக்காது. எம்புள்ள அது. ரொம்ப பீல் பண்ணுனேன்...

 

பாதிக்கப்பட்டவர்: புள்ளைங்கிறீங்க...

 

ஜெகநாதன்: ப்ச்... தப்புனுட்டேன். சொல்றேன்லடா... வுட்ரா... வுடு. மன்னிப்பு கேட்டுக்கறேன் வுடு. இதுக்குமேல எந்த ஒரு வார்த்தையும் வராது. அது எம்புள்ள. அது ரொம்ப பீல் பண்றது எனக்குத்தான் தெரியும். உனக்கு ஒண்ணும் தெரியாது.

 

பாதிக்கப்பட்டவர்: எனக்கு எதுவுமே செய்ய வேண்டாம். கையும் காலும் ஆண்டவன் கொடுத்தது இருக்குது. திறமையா சம்பாதிச்சு பொழச்சுக்கறேன்...

 

ஜெகநாதன்: சரி...

 

இவ்வாறு அந்த உரையாடலில் பதிவாகி உள்ளது.


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை நேரில் சந்தித்துப் பேசினோம். 


அவரோ, ''சார்... ஜெகநாதன், தப்பு செய்துவிட்டதாகச் சொல்லி எங்கள் இருதரப்பிலும் மத்தியஸ்தம் பேசிய ஒருவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டார். அதனால நானும் மேல் நடவடிக்கை எதுவும் வேணாம்னு போலீஸ்கிட்ட எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன். நான்லாம் சாதாரண மூட்டை தூக்குற கூலிக்காரன். அன்னாடு வேலைக்குப் போனாதான் வீட்டுல அடுப்பெரியும். அ.தி.மு.க.வுல அவர் பெரிய ஆளு. நான் பாட்டுக்கு ஒண்டியா போய்க்கிட்டு வந்துட்டு இருக்கேன். எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுனா என்ன பண்றதுனு என் மனைவியும் பயப்படுறாங்க. இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல விரும்பலைங்க. எதுவாக இருந்தாலும் நீங்க மல்லூர் போலீஸ்ல கேட்டுக்கங்க,'' என்றார் விரக்தியாக.


ஜெகநாதனைப் பற்றி உள்ளூரில் விசாரித்தபோது, அவர் 'பிளே பாய்' ரகம்தான் என்கிறார்கள். அவருக்கு பிடித்த பெண்களை உடனடியாக கட்சியில் சேர்த்துக் கொள்வதும், ஏதாவது ஒரு பொறுப்பில் நியமித்து விடுவதும் உண்டாம். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஜெகநாதனின் மகனும் கூட்டாளிகளும் சேர்ந்து தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட தரப்பு சாலை மறியல் வரை போக, ஒருவழியாக சமரசம் பேசி முடித்திருக்கிறார் ஜெகநாதன். அதனால், ஜெகநாதன் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் அப்போது எடுக்க முடியாமல் போய்விட்டது என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.


மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய இரு காவல்நிலையங்களும் கிட்டத்தட்ட ஜெகநாதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஜெகநாதன் மீதோ, அவரின் தொடர்பில் இருப்பவர்கள் மீதோ புகார் கொடுக்கவே பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர். வரை போகாமல் சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி சமாளித்து விடுவார் என்கிறார்கள். 


காமாட்சி காட்டைச் சேர்ந்த பெண் மீதான பலாத்கார முயற்சி குறித்த புகாரும் அப்படித்தான். ஜூலை 20ஆம் தேதி புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மறுநாள், (ஜூலை 21) ஜெகநாதன் மன்னிப்பு கேட்ட குரல் பதிவு வாட்ஸ்ஆப்பில் கசிந்து விட, அன்றைக்கே பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதபடி காம்ப்ரமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் புகார்தாரர் தரப்பை சரிக்கட்ட, ஜெகநாதன் தரப்பில் இருந்து 6 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு யூகமான தகவலும் உலா வருகிறது. எனினும், இத்தகவலை பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்டார். 


இந்த விவகாரம் தொடர்பாக ஜெகநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டோம்.


''அது ஒண்ணுமில்ல சார்... நான் வில்லேஜ்ல எப்பவுமே மாமா மச்சானுதான் விசாரிச்சிட்டு இருப்பேன். இவன் கேட்பாரு பேச்ச கேட்டுக்கிட்டு என் பேச்சை ரிக்கார்டு பண்ணிட்டான். சம்பவம் நடந்த அன்னிக்கு போர்வெல் போட்டுக்கிட்டு இருந்தோம். முப்பது நாற்பது பேரு இருந்தாங்க. அங்க சும்மா கைய புடிச்சி பேசிட்டு இருந்தேங்க. எல்லா பொம்பளைங்ககிட்டயும் தமாசு பேசிட்டு இருந்தேன். எல்லாத்துக்கும் தெரியும். அங்க இவனோட சேர்ந்தவனுங்க தி.மு.க.காரங்க மூணு பேரு இருக்காங்க. என்னை மாட்டி விடணும்னு எதிர்க்கட்சிக்காரங்க பண்ணின சதிங்க சார். ஊருக்குள்ள 70 வயசு கிழவில இருந்து 15 வயசு பொண்ணுங்ககிட்ட கூட கேட்டுப்பாருங்க... மாமன் இப்படித்தான் பேசும்னு சொல்வாங்க. ஆண்டவன் பொதுவா நான் தப்பான நினைப்புல பேசலைங்க. 

 

http://onelink.to/nknapp

 

அவங்க பேமிலில பிரச்னை வரக்கூடாது பாருங்க. அதனாலதான் நான் பேசுனதுகூட தப்புனு ஒத்துக்கிட்டேன். நான் யார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கல. நான்லாம் மல்லூர் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போகலீங்க. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவரின் கணவரைக்கூட நேரில் பார்க்கலீங்க. இதுல நூத்துக்கு நூறு அரசியல் உள்குத்து இருக்கு. எல்லா பெண்களையும் நான் தாய்க்குலமாகத்தான் பார்க்கிறேன். 


என்னுடைய வில்லேஜ்ல எல்லா பொம்பளைங்ககிட்டயும் கையப் புடிச்சும், தோள் மேல கையப் போட்டும்தான் பேசறேன். அவங்க வூட்டுக்காரனுங்க பாத்தாலும்கூட, 'அண்ணா நீ கூட்டிட்டு போண்ணா'னுதான் சொல்வானுங்க. அந்தளவுக்கு மக்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. அ.தி.மு.க.வில் ஆரம்பக்காலத்துல இருந்து இருக்கிறேன். மக்களோடு மக்களாக பழகிட்டு இருக்கேன். இது எதிர்க்கட்சிக்காரங்களுக்கு பிடிக்கல. அவங்க எனக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். நான் மூகாம்பிகையை கும்பிடறவன். தப்பு பண்ணியிருந்தா கடவுள் பார்த்துக்கும்,'' என்றார் ஜெகநாதன்.


மல்லூர் காவல்நிலையம் பக்கமே போகவில்லை என்ற ஜெகநாதன், இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் முன்னிலையில் ஜூலை 21ஆம் தேதி, ஒரு விளக்கக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.


அந்தக் கடிதத்தில், ''என் மீது புகார் கூறிய நபருக்கும், அவருடைய மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் நான் எந்தத் தொந்தரவும் இடைஞ்சலும் ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். அப்படி ஏதாவது தொந்தரவு ஏற்பட்டு, சாட்சியுடன் நிரூபித்தால் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று என் மனசாட்சிப்படி உறுதி கூறுகிறேன்,'' எனக் குறிப்பிட்டு, கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார், ஜெகநாதன்.


அவர் ஏற்கனவே சொன்ன விளக்கத்தில் கடித விவகாரம் குறித்து எதுவும் சொல்லாததால், நாம் மீண்டும் ஜெகநாதனிடம் இதுபற்றி கேட்டபோது, ''சார்... சொல்றவரைக்கும் நல்லா கேளுங்க. அவன் பயந்துக்கிட்டு நான் அடிச்சிடுப்புடுவேன்னு போலீஸ்ல சொல்லியிருக்கான். அதனால ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தேன். வேற எவனாவது அவனை ஏதாவது செஞ்சிப்புட்டான்னு வைங்க... சார்... ஓப்பனாவே சொல்றேன்... 'எல்லாரையும் இப்போ நான் கையெடுத்து கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். யாரும் எதுவும் பேசினாலும் என் மேலதான் வரும்டா... அமைதியா இருங்கடா சாமின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்,'' என்றார்.


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''புகார்தாரரே ஜெகநாதன் என்பவர் ஊருக்குள் எல்லா லேடீஸையும் தொட்டுதான் பேசுவார் என்றும், எல்லார்கிட்டயும் பாசமாக பேசுவார் என்றும் சொல்கிறார். அவர் கொடுத்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று அவரே திடீரென்று வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது அவர்தான் சொல்ல வேண்டும். அவருக்கு நியாயம் வேண்டும் என்றால் அவர்தான் நிற்க வேண்டும்,'' என்றனர்.

 

Ervadi

 

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, ''ஜெகநாதன் எப்பவும் கேஷூவலாக பேசுவார். எல்லாரும் அங்கே சொந்தக்காரர்கள்தான். அவர் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோவை நான் இன்னும் கேட்கவில்லை. அவர் மீது புகார்கள் வருகிறது எனில், ஊராட்சி மன்றத் தலைவராக தொடர்ந்து நாலஞ்சு முறை அவர்தான் வெற்றி பெற்று வருகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஜெகநாதன் விவகாரம் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு 100 பர்சன்ட் கொண்டு செல்லப்படும்,'' என்றார்.


வேலியே பயிரை மேய்ந்த கதையாக அ.தி.மு.க. தொண்டரின் மனைவியையே பெண்டாளத் துடித்த கட்சி நிர்வாகியைக் கண்டிக்க முடியாத நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரா என்ற கேள்வியும் உள்ளூர் ர.ர.க்களிடம் எழுந்துள்ளது. சாமானியனுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடங்கித்தான் போக வேண்டும் என்பதற்கு இச்சம்பவமும் மேலும் ஒரு சான்று. சொந்த மாவட்டத்தில், சொந்தக் கட்சியில் உள்ள பெண்ணின் மானத்தையே காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி, மூச்சுக்கு முந்நூறு தடவை 'இது அம்மா வழியில் நடைபெறும் ஆட்சி' என முழங்குவது ஆகப்பெரும் நகைமுரண்.