Skip to main content

கெட்டப்பய சார் இந்த நிக் வொய்ச்சிக்... இரண்டு கை, இரண்டு கால் இல்லைனாலும்...

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
Nicholas James Vujicic



நிக்கோலஸ் ஜேம்ஸ் வொய்ச்சிக் உலகின் தலைசிறந்த ஊக்கமளிக்கும் பேச்சாளர் (motivational speaker). பேச்சாளர் மட்டுமல்ல அவர் வாழும் உதாரணம். எட்டு வயதில் மரணத்தை நோக்கி சென்று, பத்து வயதில் அதை வென்று, இன்று 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இதுவரை 5 கண்டங்களிலுள்ள, 24 நாடுகளில் சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமானவர்களின் மத்தியில் உரையாற்றியுள்ளார். 2020ன் முற்பகுதி வரை இவரிடம் தேதி இல்லை, அவ்வளவு பரபரப்பான பேச்சாளர் என்பதும், இன்று நீங்கள் இவரை பேச அழைத்தாலும் அது 2020ன் பிற்பகுதியிலேயே சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

டிசம்பர் 4 1982 பிறந்த இவர் டெட்ரா- அமெலியா சின்ட்ரோம் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பிறவிலேயே இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் இழந்தார். இதன்மூலம் பல்வேறு இன்னல்களை அவர் அனுபவித்த அவருக்கு கல்விகூட அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இவரது இயலாமையை காரணம்காட்டி கல்வி நிறுவனங்கள் இவரை அனுமதிக்கவில்லை. பின் இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படித்தார். இதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக தனது எட்டாவது வயதில் தற்கொலைக்கு முயன்றார். பின் அவரின் பெற்றோரின் அன்பால் அதை கைவிட்டார். மேலும் அவரது பெற்றோர் வாழ்க்கையில் வென்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை அவருக்கு செய்தித்தாள்களின் வாயிலாக காட்டினர். இதுதான் அவரது வாழ்வை முற்றிலுமாக மாற்றியது.
 

அதன்பின் தன்னுடைய அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்ள பழகினார், வேறு ஒருவரின் உதவியின்றி. எழுதுவது, கணினி பயன்படுத்துவது, நீர் குடிக்க, சாப்பிட, பல் துலக்க, முகசவரம் செய்ய, ட்ரம்ஸ் இசைப்பது என பல பணிகளை கற்றுக்கொண்டார். தனது 17வது வயதில் “லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்” என்ற இலாப நோக்கமற்ற நிறுவனத்தை துவங்கினார். இதன்மூலம் பல சேவைகளை செய்தார். இதன்மூலம் தன்னுடைய வாழ்க்கை, உத்வேகம் குறித்த பல்வேறு புத்தகங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். இது உலக அளவில் பிரசித்திபெற்றது. 2012ம் ஆண்டு கானே மியாகரா என்பவரை திருமணம் செய்துகொண்டார், வொய்ச்சிக். இப்படியாக தன் வாழ்க்கையை வெற்றிகரமாக, முன்னுதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் வொய்ச்சிக் பலருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.