Skip to main content

'நடிகையர் திலகம்' - எம்.ஜி.ஆர், சிவாஜி, சந்திரபாபு... சொல்லப்படாத கிளைக் கதைகள்!

Published on 09/06/2018 | Edited on 09/06/2018

'நடிகையர் திலகம்' - சென்ற மாதம் வெளிவந்த இந்தத் திரைப்படம் 'காலா' புயலைத் தாண்டியும் வேரறுந்துவிடாமல் இன்னும் கூட சில திரையரங்குகளில் தொடர்கிறது. சாவித்திரியின் வாழ்க்கையை சொல்லிய இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காகவும் படத்தின் அழகியலுக்காகவும் மிகவும் பாராட்டப்படுகிறது. அதே நேரம் சாவித்திரியின் கதையில் சில விஷயங்கள் விடுபட்டுவிட்டதாகவும் ஜெமினி கணேசன் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாகவும் ஜெமினியின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தில்  பெரும்பாலும் தெலுங்கு சினிமா சார்ந்த சாவித்திரியின் பயணமே காட்டப்பட்டது (தெலுங்கில் தான் படம் உருவாக்கப்பட்டது). அவரது தமிழ் சினிமா பயணத்தில் முக்கியமான மூவரின் பங்கு குறித்து பெரிதாகப் படம் பேசவில்லை. நடிகையர் திலகத்தின் பெருமை எவ்வளவு உயரமோ, அவரது சரிவு அவ்வளவு ஆழம் என்பது மறுக்க முடியாதது, கேட்பவர் மனதை சுமையாக்குவது.   

 

savithiri

 

நடிகர் திலகமே வியந்த நடிகையர் திலகம்!

 

தெலுங்குப் பெண்ணான சாவித்திரியின் தமிழ் உச்சரிப்பு அலாதியானது. 1953-ல் சிவாஜியின் நடிப்பில் 'பெம்புடு கொடுகு' என்ற  தெலுங்குப்படம் வெளியானது. அவர் பேசிய தெலுங்கை ‘பயங்கரம்’ என்று கிண்டலடித்தது ஒரு பத்திரிகை. பின்னாளில், நடிகர் திலகமே, நடிகையர் திலகம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். “சகோதரி சாவித்திரியுடன் நடிக்கும்போது, நான் சற்று எச்சரிக்கையாகத்தான் நடிப்பேன். நாங்கள் இருவரும் நடிக்கும் காட்சிகளில் நிச்சயமாக நடிப்புப் போட்டி இருக்கும்” என்றிருக்கிறார். சரஸ்வதி சபதத்தில் சாவித்திரிதான் சரஸ்வதி. அப்போது கர்ப்பமாக இருந்தார். மேக்-அப் முடித்து, ஆடை அலங்காரத்துடன் ஸ்டுடியோவுக்குள் சாவித்திரி வரும்போது, தீபாராதனை காட்டினார்கள். அவரை கலைமகளாகவே பாவித்தார் அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். ஏனென்றால், தோற்றத்திலும் நடிப்பிலும் அப்படி ஒரு தெய்வாம்சம்! வறுமை வறுத்தெடுத்த நிலையிலும்கூட,  தன் ரசிகர் ஒருவரின் அவசரத் தேவைக்காக, தான் பெற்ற ஷீல்டுகளையெல்லாம் சேட்டு கடையில்  விற்று ரூ.10000 தந்ததாகட்டும், விலை உயர்ந்த பட்டுச்சேலையை விற்று, டிரைவரின் மகள் திருமணத்துக்கு உதவியதாகட்டும், அத்தனை தயாள குணம்! இடதுகைப் பழக்கம் உள்ள சாவித்திரியை வள்ளல் என்று சொன்னால் மிகையாகாது.  

 

savithiri

 

 

சரிவுக்குக் காரணம் சந்திரபாபுவும்தான்!


தான் தேடிக்கொண்ட வாழ்க்கைத்துணை சரியில்லாதபோது,  சாவித்திரி என்ன செய்வார் பாவம்! ஒருமுறை இந்தோனேசியா சென்றார் சாவித்திரி. அங்கே விருந்தளித்த அந்நாட்டு அதிபர் சுகர்தோ, மது அருந்தும்படி வற்புறுத்தினார். அதிபரின் விருப்பம் ஆயிற்றே! மது அருந்தினார் சாவித்திரி. ஜெமினியைப் பிரிந்திருந்த காலகட்டத்தில், சந்திரபாபுவின் தோழமை சாவித்திரிக்கு ஆறுதல் அளித்தது. சாவித்திரி ரூ.25000 கொடுத்து உதவியதால்தான், மாடி வீட்டு ஏழை திரைப்படத்தில் நடிப்பதற்காக, எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் தர சந்திரபாபுவால் முடிந்தது. ‘உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்ட’ எனச் சொல்வது, சாவித்திரி – சந்திரபாபு விஷயத்தில் மிகச்சரியாக இருந்தது. மாலை நேரத்தில், சாவித்திரி மது அருந்துவதற்கு ‘கம்பெனி’ கொடுப்பவராக இருந்தார் சந்திரபாபு. இப்படித்தான் மதுவுக்கு அடிமையாகிப் போனார் சாவித்திரி. இருவருமே படம் எடுத்து, நஷ்டப்பட்டு, குடித்து, வாழ்க்கையைத் தொலைத்தார்கள். 

 

savithiri

 

எம்.ஜி.ஆரின் அறிவுரையைக் கேட்கவில்லை!


எம்.ஜி.ஆர். ஒரு கொடைவள்ளல் அல்லவா! தன்னுடன் கதாநாயகியாக நடித்த சாவித்திரிக்கு உரிய விதத்தில் ஏன் உதவவில்லை என்று கேட்கத் தோன்றும். குடிப்பழக்கம் உள்ளவர்களை அறவே வெறுப்பவர் எம்.ஜி.ஆர். ஆனாலும், ஒரு கட்டத்தில் சாவித்திரிக்கு உதவினார். சொந்தப் படம் எடுத்து தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த நிலையில், எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகத்துக்கு வந்து அவரை சந்தித்தார் சாவித்திரி. “உடம்பை கவனித்துக்கொள்” என்று அட்வைஸ் செய்து, ரூபாய் 1 லட்சத்தை ஒரு குட்டிச்சாக்கில் கட்டிக் கொடுத்தார். வசிப்பதற்கு வீடு ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.  அந்தப் பணத்தை சாவித்திரி எதற்காகச் செலவழிப்பார் என்பதை எம்.ஜி.ஆர். அறியாதவர் அல்ல. சாவித்திரியும் எம்.ஜி.ஆர். செய்த உதவியை நல்லவிதத்தில் பயன்படுத்தவில்லை.

 
அஞ்சலி செலுத்துவதற்கு அனைவரும் வந்தார்கள்!


அன்றும், இன்றும், என்றும் ரசிக மனங்களை ஆக்கிரமிக்கும் அசாத்திய நடிப்புத் திறமையைத் தன்னகத்தே கொண்டவராக இருந்த சாவித்திரி, 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். 1981, டிசம்பர் 25-ஆம் நாள், சென்னை லேடி வெலிங்டன் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. எந்த வீட்டுக்கு அடைக்கலம் கேட்டு நள்ளிரவில் ஓடி வந்தாரோ, அந்த நுங்கம்பாக்கம் வீட்டிலிருந்துதான் சாவித்திரியின் இறுதிப் பயணம் தொடங்க வேண்டும் என்பதில் உறுதி காட்டினார் ஜெமினி. அவருடைய மனைவிகள் பாப்ஜியும், புஷ்பவள்ளியும் சாவித்திரியின் உடலைப் பார்த்து அழுதனர். அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., நடிகர்கள் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், ராஜ்குமார், சிரஞ்சீவி, சிவகுமார், மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, கே.பாலாஜி மற்றும் நடிகைகள் ராஜசுலோசனா, மனோரமா, சுகுமார், குட்டி பத்மினி என திரைஉலகமே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது. 


ஆயிரத்தில் அல்ல,  ‘கோடானுகோடிகளில் ஒருத்தி’ என சாவித்திரியை,  வரலாறு மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

Next Story

எம்.ஆர்.ராதா பேரனிடமிருந்து ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு...

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

'பயோபிக்' என்று சொல்லப்படுகிற ஒருவருடைய வாழ்வை சித்தரிக்கும் படங்கள்தான் தற்போது இந்தியா முழுக்க ட்ரெண்டிங். இந்தியில்தான் இது தொடங்கியது. மில்கா சிங், மேரி கோம்,தோனி இவற்றை தொடர்ந்து பேட்மேன், சூர்மா இப்படி பல பயோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சமீபகாலமாக தெற்கிலும் இந்தக் கலாச்சாரம் தொடங்கியிருக்கிறது.

 

m.r.radha



நடிகையர் திலகம், ட்ராஃபிக் ராமசாமி என்று இரண்டு பயோபிக் படங்களை தொடர்ந்து இன்னும் நிறைய பயோபிக் திரைப்படங்கள் வரப்போகிறதென்று தமிழ் சினிமா வட்டாரங்கள் முணுமுணுக்கிறது. அதை உறுதிப்படுத்துற மாதிரி இப்பொழுது ஒரு சூப்பரான செய்தி வந்திருக்கிறது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுடைய வாழ்க்கை திரைப்படமாகப் போகிறது. சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் தனஞ்செயன் தன்னோட சமூக வலைத்தளத்தில் அடுத்து யாருடைய கதையை படமா பண்ணலாம்னு கேட்டு இருந்தார். அதுக்கு வந்த பதில்கள்லயே கூட நிறைய பேர் குறிப்பிட்டிருந்தது எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையைதான்.

அத்தனை ரசிகர்களுடைய ஆசையையும் நிறைவேற்றுவது மாதிரி எம்.ஆர்.ராதாவுடைய வாழ்க்கை திரைப்படமாகப் போகிறது. இது பற்றிய ஒரு தகவலை எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்குனர் ஐக் ராதா தன்னோட ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இயக்கியவர்.

 

 


‘எம்.ஆர்.ராதாவை பார்த்ததில்லையென்றாலும் எப்பொழுதும் அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்தச் செய்தி. என்னோட தாத்தா, மேதை, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் சொல்லப்படாத கதையை திரைப்படமாக சொல்லப் போறோம். ஒரு பேரனா, அதை விட முக்கியமா ஒரு ரசிகனா அவருக்கு நியாயம் செய்வேன்னு நம்புறேன். வேலைகள் போய்ட்டு இருக்கு’ னு ஐக் ராதா தெரிவித்திருக்கிறார்.

 

 

jiiva ike radha



மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் எம்.ஆர்.ராதா 1907ஆம்  ஆண்டு பிறந்தவர். நடிப்பு, அரசியலென்று பல தளங்களில் பயணித்தவர். சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தன்னோட நடிப்புத் திறமையால் பெரியாரால் நடிகவேள்னு பட்டம் சூட்டப் பெற்றவர். நாடக நடிகனாக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கி, திரைப்பட நடிகனாகி, மீண்டும் நாடக மேடைக்கே திரும்பிய கலைஞர் எம்.ஆர்.ராதா.

எத்தனையோ புகழ் கிரீடங்கள் கிடைத்திருந்தாலும் நிறைய சர்ச்சைகளும் எம்.ஆர்.ராதாவை தொடர்ந்துகொண்டே  இருந்தன. அதில் மிக முக்கியமானது 1967ல் நடந்த எம்.ஜி.ஆர் துப்பாக்கிச் சூடு வழக்கு. இப்போது வரை இந்த வழக்கை பல பேர் பல விதத்தில் விவரித்துக் கொண்டுதான் இருக்காங்க. ஆனாலும் என்ன நடந்ததென்ற குழப்பமும் தொடர்கிறது. ஐக் ராதாவின் ட்வீட்டில், எம்.ஆர்.ராதாவின் சொல்லப்படாத கதை சொல்லப்படுமென்று குறிப்பிட்டிருக்கிறார். நக்கீரன் இதழில் எம்.ஆர்.ராதாவின் மகன் நடிகர் ராதாரவி எழுதும் 'கர்ஜனை' தொடரில் பல சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்தார். அதையும் தாண்டி எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையில் இன்னும் பல பேசப்படாத பக்கங்கள் இருக்கின்றன. இந்த வழக்கு பற்றிய சொல்லப்படாத உண்மைகளும், எம்.ஆர்.ராதா வாழ்க்கை குறித்த வெளியே தெரியாத தகவல்களும் அதில் இருக்குமா என்று பார்க்கலாம். 

 

 


எம்.ஆர்.ராதாவின் பல வசனங்கள் இப்போது வரைக்கும் பல மீம்ஸ்களிலும், வீடியோக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.அவர் வாழ்க்கையை படமாகப் பார்க்க இப்பொழுதே ஆர்வமாகத்தான் இருக்கிறது. சீக்கிரம் படமாக்கி கண்ல காட்டுங்கப்பா... வீ ஆர் வெயிட்டிங்...  

 


 


 

Next Story

கீர்த்தி சுரேஷால் ஒரு மணி நேரம் டிராஃபிக் ஜாம்!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

 

ker


சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண ரசிகர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில், பிரபல நகைக்கடை ஒன்றின் புதுப்பொலிவூட்டப்பட்ட ஷோரூம் திறப்பு விழா இன்று (மே 31, 2018) நடந்தது. இந்த கடையின் பிராண்டு அம்பாசிடரும் பிரபல நடிகையுமான கீர்த்தி சுரேஷ், ஷோரூமை திறந்து வைத்தார். மேலும், அவருடைய பெயரிலான டிசைன்கள் அடங்கிய நகைக்கூடத்தையும் துவக்கி வைத்தார்.

 

ke s


பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''என் பெயரிலான டிசைனில் நகைகள் விற்பனைக்கு வந்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சிதான். என் காலத்திற்குப் பிறகும் அந்த மாடல் நகைகள் இருக்கும் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது,'' என்றார்.

அப்போது அவரிடம், விஜயுடன் நடித்து விட்டீர்கள். அஜித்துடன் எப்போது ஜோடி சேருவீர்கள்? எனக் கேட்டதற்கு, ''அஜித்குமாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்,'' என்றார்.


திறப்பு விழாவையொட்டி, நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கீர்த்தி சுரேஷூடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் அவரைக் காணவும், நகைகள் வாங்கவும் கடை முன்பு குவிந்தனர்.

 

kee tr


நகைகள் வாங்கிய வாடிக்கையாளர்களுடன் கீர்த்தி சுரேஷ் செல்ஃபி எடுத்துக் கொண்டார். 'ரஜினி முருகன்' படத்தில், 'உன் மேல ஒரு கண்ணு...' பாடலில் அவர் விரல்களால் கண்களை லேசாக மறைப்பது போன்ற காட்சியை நடித்துக் காட்டி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் ஆரவாரமாக விசில் அடித்து தெறிக்கவிட்டனர்.

 

 


ரசிகர்கள் திரண்டதால், ஓமலூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே மேம்பாலம் கட்டுமானப் பணிகளால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

 

k tt


இந்நிலையில், நடிகையைக் காண வந்த ரசிகர்களால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ், பேருந்துகள், ஆட்டோக்கள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.