Skip to main content

கொஞ்சம் புன்னகை, கொஞ்சம் பரவசம்! கொண்டாடப்பட்ட விளையாட்டு தருணங்கள் 2021!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

neeraj chopra

 

விளையாடாதே, விளையாட்டுத்தனமாக நடக்காதே என்பது நமது வாழ்வில் மிகச் சாதாரணமாகக் கேட்டிருக்கக்கூடிய ஒரு சிறு அதட்டல். சில தீவிரமான பிரச்சனைகளைக் கூட "இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்துவிட்டன" என மீம் போட்டு கலாய்க்கும் அளவு விளையாட்டு என்பது சாதாரணமானதாகக் கருதப்படுகிறது. உண்மையில் விளையாட்டு அவ்வளவு சாதாரணமானதா? நிச்சயம் இல்லை. விளையாட்டால் மக்களிடையே காலங்காலமாகப் பகைமையை உண்டாக்க முடியும். இனத்தால், மொழியால், மதத்தால் பிரிந்து கிடக்கும் மிகப்பெரிய துணைக் கண்டத்திற்கு ஒரு கடவுளை அளிக்க முடியும். விளையாட்டில் அங்கம் வகிக்கும் ஒரு வீரர், வணிகத்தின் ஆணிவேராக இருக்க முடியும். ஏன், ஒரு தண்ணீர் பாட்டிலை தூக்கிக் காட்டி குளிர்பான நிறுவனத்தின் பங்குகளை அதிர வைக்க முடியும்.

 

இப்படி பல்வேறு மாயாஜாலங்களை நடத்தும் விளையாட்டிற்கு 2020 என்பது மோசமானதாக இருந்தாலும், 2021-ல் மீண்டும் தனது மாயாஜாலங்களை நிகழ்த்தத் தொடங்கியது. இந்த 2021 ஆம் ஆண்டில், நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் பல, இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டன. அதில் சில முக்கிய தருணங்கள் ஒரு பார்வை;

 

120 ஆண்டு தாகத்தை தணித்த ஈட்டி...மீண்டெழுந்த இந்திய ஹாக்கி!

 

neeraj chopra

 

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவை, ஒலிம்பிக் பதக்க பட்டியலில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைதான் எப்போதும் நீடிக்கிறது. இருப்பினும் இந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாடு மெச்சத்தக்கதாகவே இருந்தது. பி.வி சிந்து, மீராபாய் சானு என இந்த ஒலிம்பிக்கில் பல இந்தியர்கள் சாதித்தாலும், அதிகம் பேசப்பட்டது நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டிதான். நீரஜ் சோப்ரா எறிந்த அந்த ஈட்டி 87.58 மீட்டர் தூரம் மட்டும் செல்லவில்லை. 120 ஆண்டு கால இந்தியர்களின் ஏக்கத்தைத் தீர்த்து, தடகளத்தின் இந்தியாவின் முதல் தங்கம் என்ற வரலாற்றை எழுதியது. "விக்கிறோம்...வித்தே திருறோம்" என்ற மோடில் இருக்கும் மத்திய அரசு, தன் வசம் இருக்கவேண்டிய பெருமைமிகு அந்த ஈட்டியை ஏலத்தில் விட்டதுதான் சோகம். இந்த ஒலிம்பிக் போட்டியில்,  இந்திய அணி ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று சாதித்தது. ஒருகாலத்தில் ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியின் இந்த மீளெழுச்சி ரசிகர்களைக் கொண்டாட வைத்ததுடன், அதிக அளவில் சிறுவர்களை ஹாக்கி மட்டையைத் தூக்கவும் வைத்திருக்கிறது. அதேபோல் காலிறுதிக்குக் கூட முன்னேறாது எனக் கூறப்பட்ட பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறி ரசிகர்களின் இதயங்களை வென்றது.

 

நம்ம லிஸ்ட்லயே இல்லையே - பாரா ஒலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்கள்!

இதற்கிடையே பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் இந்தியர்கள் இவ்வாண்டு முத்திரை பதித்தனர். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று சாதித்தனர். ஒலிம்பிக்கில் நீரஜ் கைகளில் இருந்து ஈட்டி பாயும்வரை ஒரு தங்கமாவது கிடைக்காதா என ஏங்கிய இந்திய மக்களுக்கு, ஐந்து தங்கங்களை வென்றளித்த பாரா ஒலிம்பிக்ஸ் வீரர்களின் வெற்றி, இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தோடு கொண்டாட வைத்தது. 

 

ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டாவது வெற்றி - இந்த முறை இன்னும் ஸ்பெஷல்!

 

2021 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இதற்கு முந்தைய தொடரில் பெற்ற வெற்றியை விட இந்தாண்டு தொடக்கத்தில் பெற்ற தொடர் வெற்றி சிறப்பானதாக அமைந்தது எனலாம். ஆஸ்திரேலியாவில் இந்தியா முதல்முறை டெஸ்ட் தொடரை வென்ற போது பரவலாக வைக்கப்பட்ட விமர்சனம், முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் இல்லை என்பது. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் இருக்கும்போதே தொடரை வென்று பதிலடி அளித்தது இந்திய அணி. ஸ்மித், வார்னர் யார் இருந்தாலும் இந்திய அணியால் வெல்லமுடியும் என்பதைச் செய்து காட்டினார்கள் நமது வீரர்கள்.  விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில்தான் ஆடுவார் என்பது தெரிந்ததுமே, இந்திய அணி தொடரை வெல்வது அல்ல சமன் செய்வதே பெரிய விஷயம் எனக் கருதப்பட்டது. முதல் டெஸ்டில் தோற்றதுமே இந்தியா 4-0 எனத் தோற்கும் என முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் அடித்துச் சொன்னார்கள். ஆனால் விராட் கோலி உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் இல்லாமலே தொடரை வென்று அவர்களின் வாயை அடைத்தது நமது இந்திய அணி.

 

team india

 

ஆஸ்திரேலியாவின் மைண்ட் கேம்களுக்கு நமது ஆட்டத்தின் மூலமாகவே பதில் அளித்தோம். இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர் இஷாந்த் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகல் என்ற பின்னடைவோடு, ஆஸ்திரேலியாவிற்கு வந்த இந்திய அணிக்கு ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் காயங்கள் அடுத்தடுத்த அதிர்ச்சியாக அமைந்தன. இருப்பினும் இந்தியா பின்வாங்கவில்லை. காயங்களுடன் போராடிக்கொண்டே ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். மூன்றாவது டெஸ்ட்டில் ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் காயத்தோடு ஆடி இந்திய அணியைக் கரை சேர்த்த விதம், அணியினுடைய, அணி வீரர்களுடைய போராட்ட குணத்திற்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டு. அந்த போராட்டக் குணம் இல்லை என்றால் ஆஸ்திரேலியாவினை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது என்றும் எட்டாக்கனிதான். இறுதி டெஸ்ட் போட்டியில் பும்ராவும் இல்லாமல், அனுபவமற்ற பந்து வீச்சாளர்களை வைத்தே போட்டியை வென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா ஒரு சாதனையை நிகழ்த்தியது. ஆனால் மிகவும் மோசமான சாதனை. 36/9 - இந்திய அணி ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ரன்கள். இந்த சாதனையோடுதான் இந்தியா தொடரை ஆரம்பித்தது. தொடருக்கு இப்படி ஒரு தொடக்கம் என்றால் அது எந்த வீரரையும், அணியையும் கலங்கடித்து விடும். அதனையும் தாண்டி வந்து நமது வீரர்கள் சரித்திரம் படைத்து இருக்கிறார்கள். 36 ரன்களில் இன்னிங்ஸ் முடிவடைந்தபோது, ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தை இழந்து விட்டதாக விராட்  கூறியிருந்தார். அதன்பிறகு மொத்த தொடரிலும், பெரும்பாலான நேரங்களில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலியாவில், இன்னொரு அணி தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்துவது என்பதே ஒரு சாதனைதான். இவற்றையெல்லாம் தாண்டி, இந்த தொடர்வெற்றியை கொண்டாட மிகமுக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அதனை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியிலேயே தெரிவித்திருந்தார். இந்த தொடரின் ஒவ்வொரு செஷனிலும் (session) ஒரு ஹீரோ கிடைத்ததாக சச்சின் குறிப்பிட்டிருந்தார். அது 100 சதவீதம் உண்மை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அணிக்கும், இந்த தொடரில் ஆடிய அணிக்கும் அதுதான் பெரும் வித்தியாசம். அதுதான் இந்த வெற்றியை இன்னும் ஸ்பெஷலாக மாற்றியிருக்கிறது. இந்த ஸ்பெஷல் வெற்றியை ரசிகர்கள் எப்படிக் கொண்டாடித் தீர்த்தார்கள் எனத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

 

மனசும் முக்கியம் பிகிலே...

உலகமெங்கும் தற்போது மனநலுனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் தேவை குறித்து புரிதல் வெகுவாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேக்ஸ்வெல் மனநலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில காலத்திற்கு கிரிக்கெட் களத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். அதன்தொடர்ச்சியாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸும் கிரிக்கெட்டை விட்டு விலகி ஓய்வெடுத்துவிட்டு களத்திற்குத் திரும்பினார். இவ்விரண்டு வீரர்களும் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிக்க விளையாட்டிலிருந்து விலகியிருந்தது பெரும் பேசுபொருளானது. பாராட்டையும் பெற்றது. ஆனால் இவர்களையே மிஞ்சி ஆச்சரியப்படுத்தினார் சிமோன் பைல்ஸ்.

 

simone biles

 

உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பை போட்டிகளில் 30 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற அவர், ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் (ஆண்/ பெண்) என்ற பெருமையைப் பெற டோக்கியோவில் நான்கு பதக்கங்களை வெல்லவேண்டும் என்ற நிலை இருந்தது. அவர் எளிதாக அந்த பெருமையைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மனநலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக டோக்கியோ ஒலிம்பிக்சின் இறுதிப்போட்டியில் இருந்து வெளியேறினார். சிமோன் பைல்ஸின் இந்த முடிவு உலகம் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியதோடு, அவரின் இந்த முடிவுக்காகப் பாராட்டுக்களும் குவிந்தன. 

 

அரணாய் மாறிய கால்பந்து ஆட்டக்காரர்கள்!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க்-பின்லாந்து அணிகள் மோதிய போட்டியில், முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்தபோது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார். இதனால் அணி வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து  எரிக்சனுக்கு சிகிச்சையை அளிக்க அணியின் மருத்துவக் குழு களத்திற்கு விரைய, சக வீரர்கள்  எரிக்சனையும்மருத்துவ குழுவினரையும் சூழ்ந்து நின்று கேமரா கண்களில் இருந்து,  எரிக்சனின் தனியுரிமையைக் காப்பாற்றினர். வீரர்களின் இந்த செயல் உலகமெங்கும் பெரும் பாராட்டைப் பெற்றது. 

 

"நான் ஜெய்சிட்டேனா" - 18 வயதில் வெற்றிக் கொடி நாட்டிய வீராங்கனை!

 

 

emma

 

2021ஆம் ஆண்டுக்கான மகளிர் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி தொடங்கும்போது,  எம்மா ரடுகானு பட்டம் வெல்வார் என நாஸ்ட்ராடாமஸே வந்து கூறியிருந்தாலும் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஏன் எம்மா ரடுகானுவே நம்பியிருக்க மாட்டார். ஆனாலும் தனது 18 வயதில், உலக தரவரிசையில் 150-வது இடத்தில் இருந்துவந்த எம்மா ரடுகானு மகளிர் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் சாம்பியனானார். சாம்பியன் பட்டம் வென்ற பிறகும், நான் எப்படி ஜெயித்தேன் என்பதுபோலவே அவரது ரீ-ஆக்சன் இருந்தது. ஆனால் அவர் வெற்றி உலக முழுவதுமுள்ள டென்னிஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

 

இந்திய மண்ணில் சுழலால் வரலாறு எழுதிய  அஜாஸ் படேல்!

கிரிக்கெட்டில் சில சாதனைகளை உடைக்கவே முடியாது. அதில் ஒன்றுதான் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுப்பது. இந்த சாதனையைச் சமன் செய்வதென்றால் செய்யலாம், அதுவுமே எப்போதாவது தான் நடைபெறும். அப்படி ஒரு சாதனையை நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் இந்தியாவிற்கு எதிராகச் செய்து வரலாறு படைத்தார். சுழற்பந்து வீச்சைச் சிறப்பாக எதிர்கொள்வார்கள் எனப் பெயரெடுத்த இந்தியர்களுக்கு எதிராக அவர் இந்த சாதனையைச் செய்தது இன்னும் ஸ்பெஷல் ஆனது. ஜே.சி. லேக்கர் என்ற இங்கிலாந்து வீரர் 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை இந்தியாவின் அனில் கும்ப்ளே, 1999இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சமன் செய்து அசத்தியிருந்தார். அந்த வரலாற்றுச் சாதனையை  அஜாஸ் படேல் சமன் செய்ய, பாகிஸ்தான் அணியை எழுந்து நின்று கை தட்டி பாராட்டிய, போட்டியில் தோற்றுவிட்டோம் எனத் தெரிந்தும் ராஸ் டெய்லர் சதம் அடிக்க வேண்டுமென "WE WANT SIXER" எனக் கோஷமிட்டு விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய இந்திய ரசிகர்கள், அஜாஸ் படேலின் சாதனையைப் பாராட்டவும் தவறவில்லை. 

 

பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நம்மை புன்னகைக்க வைக்க, பரவசப்படுத்த பல நினைவுகளைக் கொடுத்துள்ளது விளையாட்டு உலகம். கரோனா அனுமதித்தால் 2022 ஆண்டும் விளையாட்டு செய்யும் மாயாஜாலங்களை நாம் ரசிக்கலாம் என்பது மட்டும் உறுதி...

 

 

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

“விளையாட்டுத்துறையில் தலைசிறந்த  மாநிலமாக தமிழகம் உள்ளது”-  அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு  மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை  அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர்  நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய,  மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி  பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி  சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ  இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்” என்றார்.

 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற  உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர்   நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான  ராஜேந்திரகுமார், ஜானகிராமன்,  சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.