பாப்பா படிச்சிட்டு என்னவாகப்போற?
கலெக்டர்.
தம்பி உனக்கு என்னவாக ஆசை?
போலிஸ் அதிகாரி.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளியில் 12வது தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் பிள்ளைகளிடம் கேட்டால் மேற்கண்டதைத்தான் சொல்வார்கள். இப்படி சொல்லிய பிள்ளைகள் இனி கடினமாக படித்து தேர்வு எழுதினாலும் அவர்கள் கனவு கானும் அதிகாரியாக வரமுடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது.
ஒன்றியரசின் சிவில் சர்விஸ் அதாவது நிர்வாக பணிகளுக்கு செல்லவேண்டுமென்றால் குரூப் 1 தேர்வுகளை எழுதவேண்டும். இந்தத் தேர்வை UPSC (Union Public Service Commission) என்கிற அமைப்புதான் நடத்துகிறது. இந்த அமைப்பு தன்னிச்சையான அமைப்பு, அதாவது தேர்தல் ஆணையம் போல். இதற்கான தலைவரை ஒன்றியரசின் பரிந்துரைப்படி குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
இந்த அமைப்பு தொடங்கப்பட்டது 1926. அதாவது பிரட்டிஷார் இந்தியாவை ஆட்சி செய்தபோதே இந்த அமைப்பு உருவாகிவிட்டது. ஒன்றிய அரசுக்கு, மாநிலங்களுக்கு தேவையான சிவில் சர்விஸ் அதிகாரிகளை இந்த அமைப்பு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து பயிற்சி தந்து அனுப்பிவைக்கும். இந்தியாவை ஆள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எனச்சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அதிகாரம் கொண்டவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் இவர்கள்தான். இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் என்பதால் சிவில் சர்விஸ் தேர்வு என்பது மிக கடுமையான தேர்வாக இருக்கும். ஆண்டுதோறும் இரண்டாயிரம் சொச்சம் பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால் ஆண்டுதோறும் பல லட்சம் இளைஞர்கள் கனவுகளோடு இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி எழுதி தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றவர்களும் உண்டு.
கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி யூ.பி.எஸ்.சி சேர்மனாக மனோஜ்சோனி என்பவரை நியமித்துள்ளது ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த மனோஜ்சோனி?
மும்பையில் சுவாமி நாராயணன் என்கிற சாமியாரின் அனுபாம் மிஷன் என்கிற அமைப்பில் மனோஜ் தந்தை இணைந்து சேவை செய்துவந்துள்ளார். இவருக்கு 5 வயதாகும்போதே அவர் தந்தை இறந்துவிட்டதால் மனோஜ்கான கல்வி உதவியை அந்த அமைப்பே ஏற்றுக்கொண்டது. அதன் சேவகராக இணைந்துள்ளார். பட்டப்படிப்பு அரசியல் அறிவியல் படித்துள்ளார். படித்து முடித்தும் பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். வதோராவில் உள்ள மகாராஜா சயாஜீரோ பல்கலைக்கழகத்தில் 40 வயதில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு பணியாற்றி ஓய்வு பெற்றவர். சர்ச்சை அதுவல்ல.
ஆர்.எஸ்.எஸ் ஊழியர், சிறுவயது முதலே அந்த இயக்கத்தில் இணைந்து மதப்பணிகள் செய்துவந்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவராக இருந்துகொண்டு பாஜகவின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தாரே டாக்டர் சுப்பையா அவரைப்போலவே இவரும் பேராசிரியாக இருந்துக்கொண்டு பாஜகவுக்கு வெளிப்படையாக வேலை செய்துவந்துள்ளார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவர் என்ன பேசவேண்டும், எதைப் பேசவேண்டும் எனச்சொல்லி தந்தவர், எழுதி தந்தவர் சாட்சாத் மனோஜ்சோனி.
குஜராத் கலவரத்துக்கு ஆதரவாக பேசியும், எழுதியும் வந்தவர். குஜராத் விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் மோடியின் செயலை புகழ்ந்து புத்தகம் எழுதியுள்ளாராம். 2020ஆம் ஆண்டு நிஷ்கர்ம கர்மயோகி (தன்னலமற்ற துறவி) யாக மாறியதாக அறிவித்துள்ளார். அவர்தான் யூ.பி.எஸ்.சி அமைப்பின் 31வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஜூன் வரை அவரது பதவிக்காலம் உள்ளது.
பெரும்பாலும் அந்தப் பதவியில் சிவில் சர்விஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களையே நியமிப்பது வழக்கம். மோடி பதவியேற்று கடந்த 7 ஆண்டுகளில் 3 பேரை இந்த பதவியில் நியமித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் முன்னாள் சிவில் சர்விஸ் அதிகாரிகள். இந்நிலையில் இந்தியாவை வழிநடத்தப்போகும் சிவில் சர்விஸ் அதிகாரிகளை உருவாக்கும் அமைப்புக்கு தலைவர் மனோஜ்சோனி என்றால் எப்படி?
சங்கல்ப் 1986ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது. சங்கல்ப் டிரஸ்ட் என்கிற பெயரில் நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் சிவில் சர்விஸ்க்கான பயிற்சி மையங்களை இலவசமாக நடத்திவருகிறது. இந்த சங்கல்ப் டிரஸ்ட்க்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்விஸ் தேர்வு எழுதுபவர்கள், எழுத்து தேர்வில் தேவையான மதிப்பெண் எடுக்கவில்லையென்றாலும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ச்சி பெற்றதாக தேர்வு செய்யப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குற்றச்சாட்டை வைத்தார். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது தொண்டர்களுக்கு பயிற்சியளித்து அரசுத் துறைகளில் அவர்களை ஊடுருவச் செய்துள்ளது. இதுவரை 4000 தொண்டர்கள் அரசு அதிகாரியாக நாடு முழுவதும் பணியாற்றி வருகின்றனர். 2016ம் ஆண்டு மட்டும் 676 தொண்டர்களை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் இந்தப் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிகளவில் சிவில் சர்விஸ் தேர்வில் பெற்றி பெறுகிறார்கள். 2020 ஆம் ஆண்டு மட்டும் 466 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்தக் குற்றச்சாட்டு இதுவரை விசாரிக்கப்படவேயில்லை. அந்த சங்கல்ப் பயிற்சி மையத்தில் படித்து தேர்வு எழுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றியவருக்கு 30 வருட சர்விஸ் இருந்தநிலையில் 2020ஆம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆடு வளர்க்கப்போகிறேன் எனச்சொல்லிவிட்டு வந்தவர்தான் தற்போதைய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.
இந்த நியமனத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஜவஹர் சிரிகர் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பொதுத் தகவல் ஆணையாளர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி யசோவர்தன் ஆசாத், அரசு நிறுவனங்களை காவி மயமாக்கும் பணியின் தொடர்ச்சிதான் இது. பல்கலைக்கழகங்களில் மதவாதிகளை நியமித்தார்கள் இப்போது அரசு பணிகளுக்கான துறைகளிலும் நியமிக்க துவங்கிவிட்டார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். அதோடு முக்கிய கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீப ஆண்டு காலமாக தென்னிந்தியாவில் இருந்துதான் அதிகளவு சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். தமிழகம் அதில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆனால் மதரீதியாக செயல்படுபவரை அந்தப் பதவியில் நியமித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.