"நான் சிறுவனாக இருந்தபோது பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் மட்டுமே சமையல் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். அவர்களெல்லாம் எங்களைப் போன்ற ஏழைகளிடம் உங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்றனர். பிறகு ஏன் உங்கள் வீடுகளில் மட்டும் சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை". இவ்வாறு உஜ்வாலா திட்டத்தால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பற்றி பயனாளிகளிடம் பேசியபோது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும், உஜ்வாலா திட்டத்தால் பல்வேறு பட்டியல் இன மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தோர் வகுப்பை சார்ந்தவர்கள் உட்பட பலரும் பயனடைந்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு வரை வறுமை கோட்டுக்குக்கீழ் உள்ள 13 கோடி மக்களே சமையல் எரிவாயு திட்டத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளில் இவ்வளவு மக்களுக்குதான் இந்த சமையல் எரிவாயு திட்டம் சென்றிருக்கிறது. ஆனால், 2014 ஆம் ஆண்டு எங்களது ஆட்சிக்கு பின்னர் உஜ்வாலா திட்டத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பத்து கோடி மக்களுக்கு புதிய எரிவாயு இணைப்பை அளித்துள்ளோம். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். சமுதாயம் அதிகாரம் பெறச் செய்வதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது, என்றார்.
பின்னர், இந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஏழு மாநிலங்களை தேர்ந்தெடுத்து, அதில் ஏதேனும் ஒரு மாவட்டத்தை தேர்தெடுத்து உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு திட்டத்தை பயன்படுத்தும் பெண்களிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸில் கலந்துரையாடினார். அந்த வீடியோ கான்பிரன்ஸில் ஏழு மாநிலங்களில் ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து, அதில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ருத்ராம்மா, ஈஸ்வரி மற்றும் சந்திரா ஆகிய பெண்களிடம் பேசினார்.
"இத்திட்டம் உங்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கிறது", என்றார் மோடி.
ருத்ரம்மா அதற்கு, " முன்பெல்லாம் விறகுகட்டைகளில் தான் சமைப்பேன். அதனால் என்னுடைய வாழ்நாளில் பாதி நேரங்கள் சமையல் வேலைபார்ப்பதிலேயே செலவழிந்தது. தற்போது எந்த சமையலாக இருந்தாலும் ஒரு மணிநேரங்களில் முடிந்துவிடுகிறது. என் குழந்தைகளுடனும் என் நேரங்களை செலவு செய்ய முடிகிறது", என்றார்.
அதனைத்தொடர்ந்து மோடி, " நான் அடுத்த முறை தமிழகம் வந்தால் எனக்கு தோசை சுட்டுத்தருவீர்களா", என்று கேட்டார்.
அதற்கு அந்த பெண்கள், "கண்டிப்பாக வாருங்கள்", என்றனர். பிறகு மோடிக்கு தமிழில் "வணக்கம்" என்று கலந்துரையாடலை முடித்துக்கொண்டார்.
தமிழக பெண்களிடம் பேசியவர், இதுவரை தமிழகத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனையால் இறந்த பதிமூன்று உயிர்களுக்கும், கலவரத்தில் காயமான மக்களுக்கும் ஆறுதலாக ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மற்ற மாநிலங்களை விட, இந்தியாவில் தமிழகம்தான் அடிப்படை தேவைகளான மின்வசதி, சமையல் எரிவாயு போன்ற வசதிகளில் முன்னேறி வந்திருக்கிறது. இந்த இலவச எரிவாயு திட்டம் என்பது தமிழகத்தில் முந்தைய ஆட்சிகளில் இருந்தே ஒரு திட்டமாக இருந்துள்ளது. தற்போது வந்து தமிழகத்தில் எரிவாயு அடுப்பில் தோசை சுட்டு தர முடியுமா? என்கிறீர்களே...