கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வர் ராஜாவை அவதூறாகப் பேசியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இது தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பலரும் அன்வர் ராஜாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி மின்னல் ரவி என்கிற மின்னல் வசந்த் அவர்களிடம் இதுதொடர்பாக கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
அதிமுகவில் முன்னாள் நிர்வாகியாக இருந்திருக்கிறீர்கள், தற்போது அதிமுகவில் நடப்பவற்றைப் பார்த்துவருகிறீர்கள். நேற்றைய அதிமுக கூட்டத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள், நேற்று என்னதான் நடைபெற்றது?
கட்சியில் வலுவான தலைமை இல்லை, அதனால்தான் இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுகிறது. சென்னையில் 16 தொகுதிகளையும் இழந்திருக்கிறோம். அங்கு அதிமுக சார்பாக இருக்கிற 8 மாவட்டச் செயலாளர்களையும் இந்நேரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எடுத்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் ஒரு பயம் இருக்கும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கட்சிக்காக உழைப்பவர்களை வைத்து கட்சி நடத்தாமல், கட்சியில் தன் ஆதரவாளர் என்ற அடிப்படையில் கட்சி நடத்தினால் தோல்விதான் நமக்கு வரும். என்னை எல்லாம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன். சகிகலாவிடம் ஃபோனில் பேசினேன். அவர்களைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது யார், நீங்கள்தானே? சசிகலா மாதிரி கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்திருக்கிறார்கள், இவர்கள் ஹாயாக இருக்கிறார்கள்.
பொதுக்குழுவில் பிரச்சனை என்கிறார்கள், அங்கே யார் யாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உங்களுக்கு வந்த தகவல் என்ன?
வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் சசிகலாவை சேர்க்கலாமா இல்லையா என்பது பற்றி பேச அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா எழுந்து பேச ஆரம்பித்திருக்கிறார். அப்போது பழைய பகையை ஞாபகம் வைத்துக்கொண்டு முன்னாள் அமைச்சர் சண்முகம் அவரிடம் பிரச்சனை செய்துள்ளார். கட்சியில் அனைவரும் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களைத் தவிர நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தால் அனைவரும் பார்க்க தயாராக இருக்கிறார்கள்.
வெளியே வந்தால் சசிகலாவைப் பார்க்க தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வந்துவிட்டார்களே, மழை நிவாரண உதவிகளை எல்லாம் வழங்கிவருகிறார்களே, ஆனால் பெரிய அளவில் நிர்வாகிகள் யாரும் அவரை சந்திக்கவில்லையே?
தற்போது மழை, கரோனா பாதிப்புகள் காரணமாக அவர்களால் பெரிய அளவில் சசிகலாவை சந்திக்க முடியவில்லை. இப்போதுதான் அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள். கட்சியில் அவர்கள் இணைந்தால் இந்த ஆதரவு பெரிய அளவில் இருக்கும். இது விரைவில் நடக்கும். கட்சி அவர்கள் தலைமையை விரைவில் அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒரு பிறந்தநாளில் ஜெயலலிதா கூட சொன்னார்கள். "எங்கள் குடும்பத்தில் இதுவரை 60 வயதை தாண்டி யாரும் வாழ்ந்ததில்லை. ஆனால் நான் இன்றைக்கு அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன் என்றால் அதற்குக் காரணம் சசிகலாதான். இனி நான் வாழ்கின்ற ஒவ்வொரு வினாடியும் கட்சிக்கும், மக்களும் கடுமையாக உழைப்பேன்" என்ற உறுதிமொழியைக் கொடுத்தார். அப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அவர் இருந்தார்.
இனி இந்தக் கட்சியைத் தோல்வி பாதையிலிருந்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடியும். அந்த நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. சசிகலா நினைத்திருந்தால் சிறைச்சாலையிலிருந்து 10 நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால் சசிகலா அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால் இது ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சி என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அதனால்தான் இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவுசெய்தது. எனவே யாரையும் கெடுக்கும் எண்ணம் அவருக்கு இல்லை.
அதிமுகவில் இன்னும் எடப்பாடி பழனிசாமி கைகள்தானே ஓங்கியுள்ளது. அப்படியான நிலைமை இருக்கும்போது, சசிகலா வருவார் என்று எப்படி கூறுகிறீர்கள், சசிகலா இணைப்பு பற்றிய கேள்விக்கு சூரியனைப் பார்த்து.. என்று கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவர், இதற்கு எப்படி சம்மதிப்பார்?
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான் ஆதரவு தருகிறார்கள். தொண்டர்கள் அனைவரும் சசிகலா பக்கம்தான் இருப்பார்கள். சூரியனைப் பார்த்து என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆமாம், அவர்கள் சூரியனை பார்த்துதானே கத்தினார்கள், இரட்டை இலையைப் பார்த்து கத்தவில்லையே! தலைவருக்குப் பிடிக்காத சூரியனைத்தானே எதிர்த்தார்கள். இவர்கள் பேசுவதை எல்லாம் பொருட்படுத்த தேவையில்லை. சூரியனைப் பார்த்துத்தான் அவர்கள் குரைத்துள்ளார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி பேசியது சரிதான். அவர் தான் வாழும் காலம்வரை சூரியனை எதிர்ப்பார்.