கவிஞரும் தமிழ்நாடு சட்டமேலவையின் முன்னாள் துணைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கடந்த 28ஆம் தேதி, திடீர் உடல்நலக் கோளாறால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தன், இன்று (08.09.2021) காலை 9.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ்பெற்ற கவிஞர் புலமைப்பித்தன், சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை 4 முறை பெற்றுள்ளார்.
1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கோவையில் உள்ள பள்ளப்பாளையத்தில், கருப்பண்ணனுக்கும் தெய்வானை அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் புலமைப்பித்தன். இயற்பெயர், ராமசாமி. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார். பள்ளிக் காலத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயல்பட்டுவந்தார். அதன் பிறகு, 12 ஆண்டுகள் தமிழாசிரியராக கோவை, நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார்.
1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அப்போது சில காலம், அவர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பிறகு எம்.ஜி.ஆர். உதவியால், சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதன்முதலில், 1968ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், 'நான் யார் நான் யார்...' என்ற பாடலை எழுதியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றார். அதன்பிறகு ‘அடிமைப் பெண்’ படத்தில் எழுதிய 'ஆயிரம் நிலவே...' பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போதும் அதிமுக மேடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும், 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...', 'ஓடி ஓடி உழைக்கணும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கணும்...' போன்ற பாடல்களை எழுதியுள்ளார். மேலும், 'சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே', புஞ்சை உண்டு நஞ்சை உண்டு...' போன்ற பல புகழ்பெற்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.
திமுகவில் இருந்து அதிமுக பிரிந்தபோது, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் புலமைப்பித்தனும் ஒருவர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது, அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் புலமைப்பித்தன். மேலும், அதிமுகவின் அவைத்தலைவர், தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞர், சட்ட மேலவையின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை அலங்கரித்தவர் புலமைப்பித்தன். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்று நடந்துவந்த புலமைப்பித்தன், இப்போதைய அதிமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்துவந்தார். மதவாதக் கட்சிக்கு இணையாக அதிமுகவை மாற்றிவிட்டனர் என வேதனைக் குரல் எழுப்பினார். அதேபோல், சசிகலாவுடன் யாரும் பேசக்கூடாது எனக் கட்சித் தலைமை கட்டளை போட்டபோது, அலட்டிக்கொள்ளாமல் சசிகலாவுடன் நட்பு பாராட்டிவந்தவர். அதன் வெளிப்பாடாகத்தான் நேற்று மருத்துவமனைக்கு வந்து நேரில் நலம் விசரித்துச் சென்றார் சசிகலா.
பாடலாசிரியர், மூத்த அரசியல்வாதி என்பது மட்டுமல்லாமல், தீவிர விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவும் அறியப்பட்டவர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், புலமைப்பித்தன் வீட்டில் தங்கிச்சென்று இயக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் புலமைப்பித்தன். எந்த அளவுக்கு என்றால், "புலமைப்பித்தனின் வீடு தங்களது இரண்டாவது தாயகம்" என்று விடுதலைப் புலிகளே சொல்லும் அளவுக்கு நெருக்கத்தில் இருந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றவர் புலமைப்பித்தன்.
எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோவி’லில் தொடங்கிய புலமைப்பித்தனின் திரைப் பயணம், நடிகர் விஜய்யின் 'தெறி' படத்தில் 'வாழ்கென தூய செந்தமிழ்...' பாடல்வரை தொடர்ந்தது. எதிர்க் கூடாரத்தில் இருந்தாலும், கடைசிவரை கலைஞரிடம் நட்புடன் இருந்தவர் புலமைப்பித்தன். சமீபத்தில், புலவர் புலமைப்பித்தன் எழுதிய, 'நாயகன்’ எனும் அனுபவத் தொடர், நமது நக்கீரன் இதழில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.