Skip to main content

'எம்ஜிஆர்' அது வெறும் பெயர் அல்ல... தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு!

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடக கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகளை கொண்ட அவர், அரசியலிலும், சினிமாவிலும் யாரும் தொடாத உச்சத்தை தொட்டார். கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களில் ஆட்சியை பிடித்த என்.டி ராமாராவ் தனக்கு குருநாதர் எம்ஜிஆர் தான் என்று கூறியதே அரசியலில் இந்திய அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சை புரிந்துகொள்ள போதுமானது. அத்தகைய ஆளுமையை அவர் ஒரே இரவிலோ அல்லது ஒரு படத்தின் வெற்றியிலோ அவருக்கு  கிடைத்துவிடவில்லை. அளவிட முடியாத கடினமான உழைப்பே அவர் சினிமாவில் சாதிக்க உதவியது என்றால், தமிழக மக்களின் கனிவான பார்வை அவர் அரசியலில் சாதிக்க ஏதுவாக  இருந்தது. 40-களின் ஆரம்பத்தில் திரையில் உதவி நடிகராக தலைகாட்டிய அவர், 50-களில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவர் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். 

 

mgrநடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் காட்டிய அந்த கடின உழைப்பை தன் உயிர் மூச்சு இருக்கும் வரையில் தொடர்ந்த காரணத்தால் தான், தமிழக மக்கள் அவரை மூன்று முறை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தனர். தனக்கு வாய்ப்பு தேடி அலைந்த அந்த நாட்களிலும், வாய்ப்புக்கள் வந்து குவிந்து கைநிறைய சம்பாதித்த அந்த நாட்களிலும் அவரிடம் மாறாதது, இல்லை என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்லாத அந்த கருணை உள்ளம்தான். சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்தத போதும், பிறகு முதல்வராக பதவி வகித்த போதும் அவரிடம் மாறாதது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்கள், நண்பர்கள் என யாரையும் அவர் மறக்காததும், அவர்களின் இன்ப துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வது என்று அதில் உறுதியாக இருந்தார். எதுகை மோனைகளில் அவருக்கு பேச தெரியாவிட்டாலும், நம்பியவர்களை நட்டாற்றில் விடும் பழக்கம் இல்லாதவர் அவர், என்பதை பல சமயங்களில் அவரே நிரூபித்து உள்ளார். 1977ம் ஆண்டு அவர் முதல்வர் ஆன சமயம், அவர் உதவியால் படித்து பட்டம்பெற்ற துரைமுருகன் அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் அரை மணிநேரத்திற்கு மேலாக மூச்சுவிடாமல் பேசுகிறார். அதிமுக உறுப்பினர்கள் எம்ஜிஆரின் கண்ணசைவுக்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் அவர், துரைமுருகனை பார்க்கிறார், ரசிக்கிறார். இதை துரைமுருகனும் கவனிக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுகிறார். 
 

mgrகீழே விழுந்த அவரை ஒருசில வினாடி இடைவெளியில் ஒரு கை தாங்கி பிடிக்கிறது. அந்த கை வேறு யாரும் அல்ல. யாரை தாக்கி பேசி அவர் மயக்கமடைந்தாரோ அந்த வார்த்தை தாக்குதலுக்கு உள்ளான எம்ஜிஆர் தான் அவரை தாங்கி பிடித்தார். தன்னால் வளர்க்கப்பட்டு வாழ்க்கை கொடுத்த ஒருவரின் தாக்குதலை தாயை சீண்டும் குழந்தையிடம் தாய் காட்டும் கோவத்தை கூட அவர் காட்டவில்லை என்பதே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் காட்டிய நேசத்துக்கு ஒரு சிறிய உதாரணம். தன்னை வாழ்நாள் எல்லாம் எதிர்ப்பதையே கடமையாக வைத்திருந்தவர்களை கூட முதலாளி என்று கூப்பிட்டு முதல் நபராக மதித்தார். தன்னை எதிர்த்தவர்கள் மீதே இந்த அளவு நேசம் காட்டினார் என்றால், தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மீது அவர் காட்டிய நேசம் என்றும் அளப்பறியது, யாராலும் அளவிட முடியாதது. முதல்வராக அவர் பதவி வகித்த நேரம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் சிவகாசிக்கு செல்கிறார். உச்சி வெயில் முகத்தில் அடித்த அந்த மதிய நேரத்தில் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய்மார்கள் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்ட அவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி குழந்தைகளிடம் உணவருந்தினீர்களா? என்று கேட்டுள்ளார். அவர்கள் தங்களின் அம்மாவை பார்க்கவே நிலைமையை புரிந்துகொண்ட எம்ஜிஆர்,  உடனடியாக தொடங்கியதே சத்துணவு திட்டம்.

 

mgrபள்ளிக் குழந்தைகளின் நலன்களில் அவர் காட்டிய அக்கறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்பொடி வழங்குவதில் தொடங்தி காலுக்கு காலணி வழங்கும் வரை அது தொடர்ந்தது. அவரின் இந்த மக்கள் நலத்திட்டங்களே அவரை பட்டிதொட்டி வரை கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல. கடவுளாக, கடவுளக்கும் மேலாக அவரை இன்றும் பொதுமக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கான விதை, அவர் போட்ட மக்கள் நலன் கொண்ட திட்டங்களே ஆகும். அதனால்தான் என்னவோ மண்ணில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் தோன்றி மறைவது இயற்கை என்றாலும், மக்களுக்காக வாழ்ந்த அவரின் இறப்பை அதனால்தான் என்னவோ இன்றும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். உயிர் வேண்டுமானால் அவரை விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரின் புகழை கூட இதுவரை யாரும் நெருங்கவில்லை, நெருங்கப்போவதுமில்லை. ஏனென்றால் அவர் எம்ஜிஆர்!!