தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக கொடுத்திருந்த நிலையில், நான்கைந்து வாக்குறுதிகளை மட்டுமே தற்போதுவரை நிறைவேற்றியுள்ளது" என குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எல்லா பிரச்சாரங்களிலும் கூறிவருகிறார். இதுதொடர்பாக திமுக செய்தித்தொடர்பாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரது அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தற்போது தொடங்கியுள்ளது. அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரச்சாரத்தில் பேசும் அவர், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், தற்போது நான்கைந்து வாக்குறுதிகளை மட்டுமே அது நிறைவேற்றியுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை அனைத்து பிரச்சாரங்களிலும் தொடர்ந்து கூறிவருகிறாரே?
நியாயமான கேள்விகளை எழுப்பு வேண்டியது ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அதற்குப் பதில் சொல்ல ஆளும் கட்சியும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி எழுப்பும் கேள்வி முறையானதா என்று பார்க்க வேண்டும். பொய் கூறுவதே அவரின் தொடர் வேலையாக இருந்துவருகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி என்னை கொடநாடு வழக்கில் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்கான ஆதாரத்தைக் கேட்டபோது எதையும் கூற முடியாமல் அமைதியானார். ஒன்பது மாவட்டங்களில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிச்சயம் படுதோல்வி அடையப்போகிறது.
எனவே, அவ்வாறு நடைபெற்றால் அது அவரின் தலைமைக்கு மிகப் பெரிய பிரச்சனையாக முடியும் என்பதால் இத்தகைய பொய்களைக் கட்டவிழ்த்துவிடுகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொடுக்க முடியாத ஒரு ஆட்சியை தளபதி கொடுத்துவருகிறார். அதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவர்களால் முடிந்த அளவுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பது அவருக்குத் தெரியவில்லை என்றால், அவர் வாக்குறுதிகளை எண்ணத் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது எழுதப் படிக்க தெரியாதவராக இருக்க வேண்டும். இவர்கள் ஆட்சியில் இருந்ததைப் போல் வாக்குறுதிகளை நாங்கள் காற்றில் பறக்கவிட மாட்டோம்.
நீங்கள் ஆதாரப்பூர்வமாக பேச வேண்டும். திமுக இந்த வாக்குறுதி எல்லாம் தந்துள்ளது, ஆனால் நிறைவேற்றவில்லை. நாங்கள் கடந்த ஆட்சியில் இந்த வாக்குறுதிகளை தேர்தலின்போது கொடுத்தோம், இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளோம் என பேசுங்கள். அதை விட்டுவிட்டு வாயில் வரும் பொய்களை எல்லாம் அவிழ்த்துவிடுவது என்பது எந்த விதத்தில் நியாயம். வாட்சப் வதந்தி பரப்புபவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது. தன்னுடைய இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி முழித்துக்கொண்டிருக்கிறார். தான் ஒரு பொய்யர் என்பதை எடப்பாடி பழனிசாமி தற்போது நிரூபித்துவருகிறார் என்பது மட்டுமே உண்மை. கொடுத்த வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், இன்னும் 5 ஆண்டுகாலம் ஆட்சி இருக்கிறது, அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றால், இல்லை எங்களுக்கு மிச்சம் இருக்கிற வாக்குறுதிகள்தான் முக்கியம் என்று கேட்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நகைக்கடன் தள்ளுபடியில் நிறைய கண்டிஷன் போடுகிறார்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இப்படி கண்டிஷன் போடுவோம் என்று சொன்னார்களா? ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு மாற்றி பேசுவது ஏன் என்று அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்படுவதைப் பற்றி?
இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று ஆட்சிக்கு வந்த பிறகுதானே தெரியவந்துள்ளது. ஒரே நபர் 50 பேருக்கு கடன் வாங்குவது, கவரிங் நகைகளை வைத்துக் கடன் பெறுவது, குடும்பத்தில் அனைவருக்கும் கடன் வாங்குவது என பல்வேறு முறைகேடுகள் அங்கு நடைபெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்து ஆய்வு செய்ததில்தானே அதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகள் முறையான விசாரணை செய்துவருகிறார்கள். அதே நேரத்தில் சரியான முறையில் நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தை ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாக இவர்களின் பேச்சுக்கள் இருக்கிறது. இவர்களும் அதில் கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள்தானே? அதனால் அவர்களின் போக்கு அரசை ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இதில் வியப்பேதுமில்லை.
தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வம் அறிக்கைக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை பற்றி?
ஒரு ரவுடி நான்கு மாதங்களில் டெவலப் ஆகிவிட முடியுமா? திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கு மாதங்களில் இத்தனை ரவுடிகள் உருவாகிவிட்டார்களா? கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் யார், அவர்கள் ஆட்சியில் உருவானவர்கள்தானே இவர்கள் அனைவரும். அதிமுக ஆட்சியில் உருவான, உருவாக்கப்பட்ட ரவுடிகளை நாங்கள் கைது செய்துவருகிறோம். இதற்கு யாரும் காரணமில்லை. சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.