மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த சில முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை, கொள்ளை வழக்கில் மனோஜ், சயான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், கொடநாடு வழக்கு விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தை ஊட்டியில் சந்தித்தோம்...
கொடநாடு வழக்கில் 2019ல் சயான் மற்றும் மனோஜ், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மூலமாக புதிய ரத்தத்தை பாய்ச்சுகிறார்கள். அன்று இருந்த சூழ்நிலைக்கும், இன்று இருக்கும் சூழ்நிலைக்கும் இடையில் நடந்த விஷயங்களை கூறுங்கள்...
வழக்கறிஞர் ஆனந்த்: இவர்கள் பேட்டி கொடுத்தனர். அதுவரை அமைதியாக இருந்த காவல்துறையும் ஆளுங்கட்சியும் உடனடியாக இந்த வழக்கை சீக்கிரம் முடிக்கணும். எடப்பாடி பெயரை சொல்லிட்டாங்க என்பதால் பலதரப்பட்ட வேலைகளை செய்தாங்க. அதாவது இந்த வழக்கை டே டூ டே போடுறது. இன்னைக்கு போட்டா நாளைக்கு போடுறது. அதற்காக இவங்க அத்தனை பேரும் தினமும் கேரளாவில் இருந்து வரணும். அந்த மாதிரி போட்டுக்கிட்டே இருந்தாங்க. அப்ப நாங்க தினமும் கேரளாவில் இருந்து வரமுடியாது என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தோம். அந்தசமயம் நீதியரசர் ஒத்துக்கொண்டாலும், இவர்கள் கலாட்டா பண்றது. தினமும் வரணும்னு சொல்லுங்க, கண்டிஷனல் ஆர்டர் போடுங்க, எல்லா வாய்தாவுக்கும் வரச்சொல்லுங்க என இவங்க நீதிபதிகிட்ட ரகளை பண்ணாங்க. அதனால அதையும் மீறித்தான் நாங்க வழக்கை நடத்தினோம். இதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மூலமாக ரகளையில் ஈடுபட்டார்கள். அதே போல் போலீஸும் இவர்களை தொடர்ந்து வாட்ச் பண்ணார்கள். அதன் பின்னர் இவர்கள் இரண்டு பேர் மேலும் பெயில் கேன்சலேஷன் பெட்டிசன் போட்டாங்க. அதற்கு நாங்களும் வாதாடினோம், சென்னையில் இருந்து வந்த வக்கீல்களும் வாதாடினார்கள்.
பெயில் கேன்சலேஷன் ஆர்டர் போட்டதற்கு அப்புறம் இவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்தார்கள். தனிப்படை வைத்து இவர்களை போய் பிடிச்சிட்டு வந்துட்டாங்க. அப்புறம் இவங்ககிட்ட இருந்த செல்போன், ஆதாரம் எல்லாத்தையும் போலீஸ் பிடுங்கி வச்சிருச்சி. இன்னிக்கு வரைக்கு அந்த செல்போன் கிடைக்கவில்லை. முதலில் சயான் ஆக்ஸிடெண்ட்ல இருந்தப்ப இருந்த செல்போனை எடுத்துட்டாங்க. அதன் பின்பு டெல்லியில் இருந்து சென்னை வரும்போது அரெஸ்ட் பண்ணப்ப... இரண்டு செல்போன்களை எடுத்துட்டாங்க. அப்றம் இப்ப கடைசியா கேன்சலேஷன் பெய்ல் ஆர்டர் வந்தப்ப அதுல இரண்டு செல்போன் எடுத்திருக்காங்க. அதாவது கனகராஜ் கூட எடுத்த போட்டோ இருக்கிற செல்பொனை விபத்து ஆகுறப்ப எடுத்து மறைச்சுட்டாங்க. அப்றம் இப்ப மேத்யூ சாமுவேல் கிட்ட பேசுனதுக்குப் பிறகு, சென்னையில் வச்சு இரண்டு செல்போனை எடுத்துட்டாங்க. மொத்த நான்கு செல்போன்களை எடுத்துட்டாங்க. நான்கு செல்போன்லயும் முக்கியமான சாட்சியங்கள் இருக்கிறதால அத இன்னைக்கு வரைக்கு தர மறுக்கிறாங்க. இதில் முக்கியமானது முதலில் எடுத்த செல்போன். அதில் தான் கனகராஜ் உடன் இருந்த போட்டோ, சயான் யார்கிட்டலாம் பேசினார் என்கிற விவரம்லா இருந்தது. அந்த போன் இன்னைக்கு வரைக்கும் கோர்ட் எவிடென்சாவே வரல. ஆனா அந்த ட்ரெயின்ல போனது அந்த வீடியோ எல்லாம் கொடுத்தார்களே தவிர இன்னைக்கு வரைக்கும் செல்போன் கொண்டு வந்து கொடுக்கல. அது மட்டுமில்லாமல் இவர்களை எந்த எந்த விதத்தில் துன்புறுத்தணுமோ துன்புறுத்துனாங்க.
எடப்பாடிக்கு எதிரா பேட்டி கொடுத்துட்டாங்க என்பதற்காக இவங்க எந்தெந்த வகையில் துன்புறுத்தப்பட்டாங்க?
வழக்கறிஞர் ஆனந்த்: இவர்களை தினசரி கோர்ட்டுக்கு வரவைத்தார்கள். அதே போலீஸ் இவர்களின் செல்போனை ஒட்டு கேட்பது. மேலும், இவர்களுக்கு பெயில் கேன்சலேஷன் ஆர்டர் வந்தபொழுது இவர்களை தனிமை சிறையில் வைத்தார்கள். அதுவும் மனிதர்கள் இருக்க முடியாத சிறை. சிறைக்கு உள்ளே வந்து ரகளையில் ஈடுபடுபவர்களை அடைத்து வைக்கக்கூடிய சிறை. இதை உள்ளே இருக்கும் சிறைக்கைதி ஒருவர் வேறுஆள் மூலமாக எனக்கு தெரியப்படுத்துனாங்க. அப்புறம் ஜெயில் சூப்பிரண்டுக்கு தொடர்புகொண்டு எப்படி இவ்வாறு செய்யலாம்? மனித உரிமை மீறல் என சொன்னோம். அதற்கு அவங்க அப்படி எல்லாம் இல்லைனு மறுத்தாங்க. பின்னர் நாங்க ஐகோர்ட் போய்ருவோம்னு சொன்ன பிறகு தான் சாதாரண சிறைக்கு கொண்டுவந்தார்கள்.
அங்கேயும் இவர்களை கண்காணிக்க ஒரு கும்பல் இருந்தது. அது மட்டுமில்லாமல் இவர்களை சிறையில் தீர்த்துக்கட்டுவதற்கு பல முயற்சிகள் நடந்தது என்று பலமுறை கேள்விப்பட்டுள்ளேன். சிறையில் மற்ற கைதிகளை வைத்து தீர்த்துக்கட்ட முயற்சி செய்திருக்காங்க. அதுலேயும் இவங்க தப்பிச்சிருக்காங்க. இதையெல்லாம் மற்ற சிறைக் கைதி சொன்னனாலதான் தெரியும். இவங்கள இந்த வழக்குல ஏண்டா சிக்குனோம் என்கிற அளவுக்கு பாடாப்படுத்திட்டாங்க.
இந்த மாதிரி பாடாபடுத்துறதுக்கு நோக்கம் யாரை தப்பிக்க வைப்பதற்காகன்னு நினைக்கிறீங்க?
வழக்கறிஞர் ஆனந்த்: அது அரசு தரப்பினருக்குத்தான் சார் தெரியும். முக்கியமா நீங்க பத்திரிகைகாரங்க கண்டு பிடிச்சுட்டீங்க. அதுதான் உண்மை. அதிலும் இவர்கள் நேரடியாக எடப்பாடி மீதுள்ள குற்றச்சாட்டுகளைச் சொல்லிட்டாங்க அதனால இவங்க வாய அடைக்கிறாங்க. இதற்காக எந்த எந்த வழியில் சித்ரவதை செய்ய வேண்டுமோ அவையெல்லாம் நடந்தது. சித்ரவதை செய்வது மூலமா அவர்கள் வாயை அடைக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். அது நம்ம இந்தியாவில் எந்த காலத்திலும் முடியாது. இவர்களை எங்க அடக்கினாலும் ஏதோ ஒரு விதத்தில் வெளியே வந்திடுவார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை. கேரளாவில் சக கைதிகள் மேலே வாரண்ட் விழுந்துடிச்சு. அதற்காக இவங்க பெரிய டீமையே அனுப்பிச்சுட்டாங்க. மற்ற எதுக்குமே போலீஸ் போகாது, ஆனால் இவர்களுக்கு வாரண்ட் போட்டதும் மூன்று டீமை அனுப்பினார்கள். தீபு, உதயன் இவர்களுடைய வங்கிக் கணக்கையும் முடக்கினார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டோடு சம்பந்தபட்ட எஸ்.பி. முரளிரம்பா இங்கிருந்து பதவி உயர்வோடு அங்கு சென்றார். அவர் இந்த வழக்கில் எந்த அளவிற்கு தீவிரமாக செயல்பட்டார்?
வழக்கறிஞர் ஆனந்த்: சார் அவங்க இந்த சம்பவம் கேள்விப்பட்டவுடனே 3:00 மணிக்கே போய்ட்டாங்கனு எவிடென்ஸ் இருக்குது. வி.ஏ.ஓ.வின் சாட்சியத்தின் மூலம் தெரியவருது. அதனால்தான் நாங்க கலெக்டரையும், முரளிரம்பாவையும் டிபென்ஸ் சாட்சியாக்க பெட்டிசன் கொடுத்தோம். அதை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. இப்ப அதற்கு அப்பீல் போயிருக்கோம்.
சயான் நீதிமன்றத்தில் மறுவிசாரணை கோரி பலமுறை தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் சரியாக கவனிக்கவில்லை என்று சொல்கிறார்களே?
வழக்கறிஞர் ஆனந்த்: அதாவது இவங்க போட்ட மனுக்களை நான்கு, ஐந்து முறை கொரி போட்டு ரிட்டெர்ன் போட்டாங்க. இது எதுக்கு வம்புனு அவர்கள் பெட்டிஷன்களை ரிட்டர்ன் போட்டாங்க. வேற வழியே இல்லாமதான் நாங்க வழக்கை நடத்தவேண்டியதாப் போச்சு. அந்த வழக்கு நடந்தப்பகூட கடுமையான கரோனா சமயம். மொத்த தமிழ்நாடும் கரோனா பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் பொழுதும் வழக்கு நடந்தது... நாங்களும் போனோம். வேறு வழியில்லாமல். அப்பவும் நாங்க நீதிபதிகிட்ட கேட்டோம், ஐயா வேண்டாங்கனு. அவங்க ஹைகோர்ட் ஆர்டர் இருக்குனு சொன்னாரு. இந்த வழக்குல விட்னஸா இருந்த சாந்தா என்கிற பெண்ணை மிரட்டினோம் என்று பொய் வழக்குக்கு அப்றம்தான் பெயில கேன்சல் செய்தாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்த வழக்குக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணவில்லை. ஆனால் அதற்காகவும் 2019-ல் இவர்களை கைது செய்தார்கள். கொலை வழக்கு என்றாலே அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் சென்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சீக்கிரம் முடிக்க கோருவார்கள். இதுல எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு அம்மாவை பகடைக்காயா பயன்படுத்தி ஒரு ஆர்டர் வாங்கிட்டு வந்து, அதை வைத்து நடத்தினார்கள். அதை வைத்து குண்டாசும் போட்டார்கள். அதை என்.ஆர்.இளங்கோ நீதிமன்றத்தில் உடைத்தார். அதன்பின் குண்டாஸில் இருந்து விடுதலையானார்கள்.
உங்கள் பார்வையில் மறுவிசாரணை நிச்சயம் வெற்றி பெறுமா?
வழக்கறிஞர் ஆனந்த்: கண்டிப்பாக! நீதிமன்ற தீர்ப்புகளே பல உதாரணங்கள் இருக்கிறது. கடைசி நிமிஷத்துல வழக்கு சம்மந்தப்பட்ட புதிய உண்மை வரும்போது குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவார். வேறு ஒருவரை குற்றவாளியாக கோர்ட்டுக்கு கொண்டுவருவார்கள். நீதியை நிலைநாட்டுவதற்கு இது ஒரு வழி. மறு விசாரணையை தடுப்பதற்காக கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.
மறு விசாரணையை தடுப்பதில் ஏன் அவசரம் காட்டுகிறார்கள்....?
வழக்கறிஞர் ஆனந்த்: இதில் என்ன உண்மை இருக்கிறது என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அந்த உண்மைகள் வெளியே வந்தால் சிலர் பாதிக்கப்படலாம். மறு விசாரணை தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளதா?
வழக்கறிஞர் ஆனந்த்: கண்டிப்பாக. காவலாளி, கனகராஜ் ஆகியோர் இறந்ததற்கான போட்டோக்கள் இல்லை. எங்கேயுமே கைரேகை பதிவு இல்லை. கேமரா எப்படி ஆஃப் ஆனது? மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி? இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்தே சரிவர கையாளவில்லை. புலன்விசாரணை செய்யவில்லை. ஏனோதானோ என்று செய்துள்ளனர். 103 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியது. ஆனால் அவசரம் அவசரமாக 42 சாட்சிகளைத்தான் விசாரித்துள்ளனர். மற்ற சாட்சிகளை ஏன் விசாரிக்கவில்லை என அந்த அளவுக்கு வழக்கில் நிறைய பாயிண்ட்டுகள் உள்ளது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.