Skip to main content

பணபலத்தால் வெற்றியைத் தடுக்க முடியாது! தீர்ப்பை மக்கள் எழுதிவிட்டார்கள்! - மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி!

Published on 31/03/2021 | Edited on 01/04/2021
ddd

 

"ஸ்டாலின்தான் வாராரு... விடியல்தரப் போறாரு...' என்ற பாடலுடன் முதல்வர் வேட்பாளராக தமிழகம் முழுவதும் பயணித்து பரப்புரை செய்துவருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். சவாலான இந்த தேர்தல் களத்தில் அவரிடம் நக்கீரன் முன்வைத்த கேள்விகள்...

 

உங்கள் பரப்புரையில் மக்கள் கூட்டமும் எழுச்சியான ஆரவாரமும் புதிதல்ல. ஆனால் 2016-ல் தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய தேர்தல் களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

அ.தி.மு.க.வை நிராகரிக்க -முதலமைச்சர் பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப "நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா' என்பதுபோல் மக்கள் போகுமிட மெல்லாம் ஆர்ப்பரித்து அலை அலையாக வருகிறார்கள். பத்தாண்டுகள் தமிழகத்தைப் பாழ்படுத்தி -கடைசி நான்கு ஆண்டுகள் ஊழலில் மூழ்கி -பொய் ஒன்றையே மூலதனமாக வைத்துப் பிரச்சாரம் செய்துவந்த அ.தி.மு.க.வின் அமைச்சர்களுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் காட்சிகள் தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்கு வேட்டுவைத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. தமிழக மக்களின் உரிமைகளை மத்திய பா.ஜ.க.விடம் அடமானம் வைத்தது அ.தி.மு.க. ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எங்கும் எதிலும் ஊழல். எல்லாவற்றிலும் கமிஷன் என்பது மட்டுமே இந்த நான்கு வருடத்தில் பழனிச்சாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் செய்த காரியம். கொள்ளையடித்ததில் கொந்தளித்துப் போயிருக்கும் மக்கள், அ.தி.மு.க.விற்கு விடை கொடுக்கும் தீர்ப்பை எழுதிவிட்டார்கள். அதை தங்கள் வாக்குரிமை மூலம் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் ஆளுங்கட்சி மீது அதிருப்தி இல்லை -எதிர்ப்பலை வீசவில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கும் கருத்தை தி.மு.க. எப்படி எதிர்கொள்கிறது?

 

அது பொய்ப் பிரச்சாரம். "அதிருப்தி' எதிர்ப்பு அலையாக இல்லை, சுனாமியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க.-பா.ஜ.க. ஆகிய இரு கட்சி ஆட்சிகளுமே தமிழக மக்களை வஞ்சிக்கின்றன. அ.தி.மு.க.வின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் பா.ஜ.க. அரசு உள்நோக்கத்துடன் அமைதி காக்கிறது. தலைமைச் செயலகத்தில் நடத்திய ரெய்டு, அமைச்சர்கள் வீடுகளில் நடத்திய ரெய்டு உள்ளிட்ட பல்வேறு சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமானவரித்துறை நடவடிக்கைகளை மூட்டைகட்டி மூலையில் வைத்து -தங்களின் மதவெறி அஜெண்டாவை செயல்படுத்த, அண்ணாவின் பெயரில் உள்ள அ.தி.மு.க.வைப் பயன் படுத்துகிறது பா.ஜ.க. இப்போது ஏறக்குறைய அ.தி.மு.க.வும்- பா.ஜ.க.வும் ஒரே கட்சி -ஒரே மாதிரி ஆடைகளை உடுத்தியிருக்கும் கட்சிகள் என்று மக்கள் கருதுகிறார்கள். ஆகவே பாராளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் -அதாவது "234 அவுட் ஆப் 234' என்று தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றிபெறும்.

 

மத்திய ஆளுங்கட்சி -மாநில ஆளுங்கட்சி இரண்டும் சேர்ந்த கூட்டணி என்பது அதிகார பலம் மிக்கது. நீங்கள் ஏற்கனவே கூறியுள்ளதுபோல, "தி.மு.கவை எளிதாக வெற்றிபெற விடமாட்டார்கள்' என்ற நிலையில், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க.வின் கூட்டணியின் வெற்றியை எப்படி உறுதி செய்வீர்கள்?

 

சிங்கிள் டீ குடித்துவிட்டு பிரச்சாரம் செய்யும் தொண்டர்படை தி.மு.க.விடம் இருக்கிறது. தி.மு.க.வுடன் கொள்கைரீதியாக இணைந்துள்ள கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் இருக்கிறார்கள். எங்களை ஆதரிக்க தமிழக மக்கள் இருக்கிறார்கள். ஆகவே எந்த அதிகார பலத்தையும் சந்தித்து தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றிபெறும். அந்த வெற்றியைத் தடுக்க முடியாது. ஏனென்றால் இது தேர்தல் நடத்தை அமலில் உள்ள காலம். ஆகவே தேர்தல் ஆணையம் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை ஜனநாயக பேரியக்கமான தி.மு.க.விற்கு இருக்கிறது.

 

முந்தைய தேர்தல்களைவிட இப்போது பெண்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு அதிகரித்திருக்கிறது. அதனை வாக்குகளாக மாற்றும் வகையில் தி.மு.க.விடம் பெண்களுக்கான அமைப்புகள் பலமாக இருக்கின்றனவா?

 

தி.மு.க.விற்கு தாய்மார்களின் ஆதரவும் -அனைத்துத் தரப்பு வாக்காளர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது. அறுவடை செய்யும்போது சிந்தாமல் சிதறாமல், தேவையான பாதுகாப்புடன், நெல்மணிகளை வீடு கொண்டுவந்து சேர்ப்பதுபோல் -தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் வாக்குச்சாவடிக்கு கொண்டுவந்து சேர்க் கும் பலம் தி.மு.க.வின் மகளிர் அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் இருக்கிறது.

 

வாரிசு அரசியல், தி.மு.க. நிர்வாகிகளின் அத்துமீறிய செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆளுந்தரப்பு செய்யும் தேர்தல் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை எதிர்கொள்ள என்னசெய்யப் போகிறீர்கள்?

 

பத்து வருடம் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க. அப்போது நக்கீரன் தாக்கப்பட்டது, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசியது, இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷனை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே சென்று தாக்கியது, வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமிக்கு ஆபாச நடனம் போட்டு வரவேற்பு கொடுத்து அவரைத் தாக்க முயற்சித்தது, நேர்மையான உயர்நீதிமன்ற நீதியரசர் சீனிவாசன் வீட்டில் மின்சாரம், குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தது, வேளாண் கல்லூரியைச் சார்ந்த மூன்று மாணவிகளை தருமபுரியில் உயிரோடு கொளுத்தியது இவை எல்லாமே அ.தி.மு.க. ஆட்சியின் வன்முறை வெறியாட்டங்கள். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி... ""அண்ணா விட்டுருங்க'' என்று கதறினார்களே -அந்தக் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டது யார்? அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்தானே! ஆகவே தங்களின் வன்முறையை -அராஜகத்தை -கொடநாட்டுக் கொலை கொள்ளைகளை மறைக்க தி.மு.க. மீது ஒரு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள். வன்முறை வெறியாட்டங்களின் ஒட்டுமொத்த உருவம் அ.தி.மு.க. ஆட்சிதான். அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்பவில்லை. வெற்று விளம்பரங்களும் மக்களிடம் எடுபடாது.

 

ஆட்சியாளர்கள் கஜானாவைக் காலி செய்துவிட்டார்கள் -கடன் சுமையை ஏற்றிவிட்டார்கள் என்று நீங்கள் குற்றம்சாட்டும் நிலையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்?

 

"கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷனுக்கு' முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகள், படிப்படியாக -காலநிரல்படி நிறைவேற்றப்படும். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை ஒரு புனிதநூலாகப் பார்க்கிறது. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த நேரங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதியை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நிறைவேற்றி யிருக்கிறார்கள். அவர்களின் வழியில் வந்துள்ள நான், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

 

மேற்குவங்கத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடதுசாரிகளின் செல்வாக்குச் சரிவினால், அங்கே பா.ஜ.க. தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டது. தமிழகத்தில் அ.தி.மு.க. பலவீனமடைந்தால், அரசியலில் அதற்குரிய இடத்தை மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதே?

 

என்னைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க.- அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் ஒரே கட்சியாகத்தான் பார்க்கிறேன். ஓருயிர் ஈருடல் போல்தான் முதலமைச்சர் பழனிசாமி இந்த நான்காண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கிறார். ஆகவே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்பதே இப்போதுள்ள முதல் இலக்கு; தமிழக மக்கள் அதில் பேரார்வம் காட்டுகிறார்கள். ஆகவே அண்ணா பெயரில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த, அ.தி.மு.க.வைப் பற்றி அக்கட்சியின் தொண்டர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

 

எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றத்தை தி.மு.க. விரும்புகிறதா? அது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா?

 

சட்டமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ள கட்சி தி.மு.க. ""தன்னந்தனியாக சட்டமன்றத்தில் நின்று உரையாற்றினேன்'' என்று மறைந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களே பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு முழு சுதந்திரமும் வாய்ப்பும் வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் வந்துள்ள நான் நிச்சயமாக, எதிர்க்கட்சிகள் இருக்கவேண்டும்; அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் சொல்லவேண் டும் என்றுதான் விரும்புவேன். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல -ஆளுங்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி பொறுப்புள்ள அரசாக செயல்படுவதற்கும் ஏற்றவகையில் அமையும். சிறிய கட்சிகள் குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை கூறியதுபோல், ""எங்களை வழிநடத்திச் செல்ல அவர்களும் வந்திருக்கிறார்கள்'' என்று கருதி -அவர்களுக்கு முழு வாய்ப்பு கொடுத்து -அ.தி.மு.க. ஆட்சியில் "கடுகு'போல் சிறுத்துப்போன சட்டமன்ற ஜனநாயகத்தை மீட்டெடுப்பேன். அதனால்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிக நாட்கள் சட்டமன்றக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் -சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

 

200+தொகுதிகள் இலக்கு என்றால், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும் வகையில் தி.மு.க.வினரின் களப்பணிகளை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

 

தி.மு.க.வினரும், கூட்டணிக் கட்சியினரும் நகமும் சதையும்போல் தேர்தல் களத்தில் இணைந்து நிற்கிறார்கள். ஊழல் அ.தி.மு.க. ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதிலும், மதவெறி பா.ஜ.க., ஊழல் அ.தி.மு.க.வின் தோளில் அமர்ந்து தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்பதிலும் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் ஒருமுகமாக நின்று தீர்மானமாகப் போராடிவருகின்றன.

 

கருத்துக்கணிப்புகளைக் கடந்து, கடைசிநேர பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடியவை. அதனை எதிர்கொள்ள தி.மு.க.வின் திட்டம் என்ன?

 

தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் பண விநியோகத்தையும் உன்னிப்புடன் கவனிக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவிற்கு மாநில அரசு அதிகாரிகள் யாரும் துணை போகமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்போதே பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்னுடன் பேசி, "நாங்கள் நடுநிலையாகச் செயல்படுவோம்; அ.தி.மு.க.வின் பண விநியோகத்திற்கு துணை போகமாட்டோம்' என்று உறுதி கூறிவருகிறார்கள். அ.தி.மு.க.வின் பண விநியோகப் புகார்களை -தி.மு.க.வினர் களத்தில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவித்து வருகிறார்கள். இனிவரும் நாட் களில் இன்னும் அதிகமாக விழிப்புணர்வுடன் இருப்போம்; தேர்தல் களத்தில் மிகச்சிறப்பாக வெல்வோம்.

 

கலைஞர் இல்லாத தேர்தல் களத்தில் முதலமைச்சர் வேட்பாளராகப் பயணிப்பது சுமையா? சுகமா?

 

கலைஞர் இல்லாத தேர்தல் களம் எப்படி சுகமாக இருக்கமுடியும்? ஆனால் அனைத்து துறையிலும் அ.தி.மு.க.வால் சீரழிக்கப்பட்ட தமிழகத்தைக் காணும்போது, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து -சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்ற வெறியோடு மத்திய அரசு என்ற அதிகாரத்தை பா.ஜ.க. பயன் படுத்துவதைப் பார்க்கும்போது - என் கண்முன்னால் தமிழ்நாடும் -தமிழ்நாட்டு மக்களும்தான் தெரிகிறார்கள். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ்மொழியின் சிறப்பு, சமூக நீதி, தமிழ்நாட்டின் நலன் -ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் காப்பாற்றும் கடமையை நிறைவேற்ற எத்தகைய சவால்களையும் -சோதனைகளையும் -சுமையையும் நான் ஒரு தனிச் சுகமாகவே கருதுகிறேன். அதுதான் தந்தை பெரியாருக்கு, பேரறிஞர் அண்ணாவிற்கு, முத்தமிழறிஞர் கலைஞருக்கு நான் செலுத்தும் காணிக்கையாக இருக்கமுடியும். ஆகவே, தமிழக மக்களுக்காக தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நடைபெறும் இந்த சட்டமன்றத் தேர்தல்களத்தை நான் ஒரு சுமையாக அல்ல -சுகமான கடமையாக, பொறுப்பாகக் கருதுகிறேன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரை தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.