Skip to main content

கரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை தரும் திட்டம்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

Lifetime relief allowance for the family of a worker who died of corona infection!

 

இஎஸ்ஐ திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. 

 

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக இரண்டு முக்கிய திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றன.

 

ஒன்று, பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான், இ.பி.எப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டம் (Employees' Provident Fund Organisation). 

 

இரண்டாவது, வேலையில் இருக்கும் ஒரு தொழிலாளருக்கு சமூகப்பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். அதுதான், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (Employee's State Insurance Corporation). சுருக்கமாக, இ.எஸ்.ஐ.சி. (ESIC) என்றால் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

 

இப்போது நாம் பேசுவது இ.எஸ்.ஐ. பற்றி மட்டும்தான்:

 

இதுபற்றி சேலம் இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக அதிகாரிகளிடம் பேசினோம். ''எந்த ஒரு காப்பீட்டுத் திட்டத்திலும் பொதுவாக மருத்துவ சிகிச்சைக்கான உதவி மட்டும்தான் கிடைக்கும். உதாரணமாக ஒருவர், ஒரு தனியார் அல்லது பொதுத்துறை மருத்துவக் காப்பீட்டுத் துறையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு காப்பீடு பெற்றிருந்தால், அந்த வரம்புக்குள் மட்டும்தான் பணமில்லாமல் சிகிச்சை பெற முடியும். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது எனில், அத்தொகையை காப்பீட்டாளர் தன் கையில் இருந்துதான் செலவழிக்க வேண்டும்.

 

ஆனால் இ.எஸ்.ஐ.யில் ஒருவர் காப்பீட்டாளராக பதிவு செய்துள்ளார் எனில், அவருக்கான மருத்துவச் செலவுகளுக்கு உச்சவரம்பு ஏதும் இல்லை. கோடி ரூபாய் செலவானாலும் மொத்தச் செலவுகளையும் இ.எஸ்.ஐ. அமைப்பே ஏற்றுக்கொள்ளும். அடுத்து, மற்ற காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு பெற்றவருக்கு மட்டுமே பலன் உண்டு. இ.எஸ்.ஐ.யில் சந்தாதாரராக உள்ள ஒருவருக்கு, அவர் மட்டுமின்றி,  அவரைச் சார்ந்திருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோரும் பணமில்லாமல் மருத்துவச் சிகிச்சைகளைப் பெற முடியும். 

 

மற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிகிச்சை பெற முடியாது. குறிப்பிட்ட நோய்கள் உள்ளவருக்கு மருத்துவக் காப்பீடும் கிடையாது. ஆனால் இ.எஸ்.ஐ.சி. சந்தாதாரர்கள் எந்த வித பாதிப்புக்கும் சிகிச்சை பெற முடியும். இ.எஸ்.ஐ.சி. அமைப்பிற்கு என சொந்தமாக மருந்தகங்கள், மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகளும் இருக்கின்றன.

 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேரும் இ.எஸ்.ஐ. சந்தாதாரரின் வாரிசுகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் உண்டு. இந்த இட ஒதுக்கீடு சலுகை, இ.எஸ்.ஐ.யில் பணியாற்றும் அதிகாரிகளின் வாரிசுகளுக்குக் கூட பொருந்தாது. இ.எஸ்.ஐ.க்குச் சொந்தமான மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இ.எஸ்.ஐ. சந்தாதாரர் பணமில்லாமல் சிகிச்சை பெறலாம்.

 

ஒருவேளை, இ.எஸ்.ஐ.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளாத தனியார் மருத்துவமனைகளில் சந்தாதாரர் ஒருவர் சிகிச்சை பெற நேர்ந்தால், அவர் செலுத்திய சிகிச்சைக்கான மொத்த செலவுகளையும் இ.எஸ்.ஐ. அமைப்பு, அவருக்கு திருப்பிக் கொடுத்துவிடும்.

 

இ.எஸ்.ஐ.சி. திட்டத்தில் தொழிலாளர் ஒருவர் காப்பீட்டாளராக சேர, அவருடைய சம்பளத்தில் இருந்து 0.75 சதவீதமும், அவருக்கு வேலை கொடுத்த தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து அத்தொழிலாளரின் ஊதிய மதிப்பில் இருந்து 3.25 சதவீதமும் மாதந்தோறும் செலுத்த வேண்டும். அதாவது, ஒரு தொழிலாளர் மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுகிறார் எனில், அவர் மாதந்தோறும் இ.எஸ்.ஐ.க்கு 75 ரூபாய் சந்தா செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள 325 ரூபாய் சந்தா தொகை, அவருக்கு வேலை அளித்த முதலாளியிடம் இருந்து பெறப்படும்.

 

ஆக, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் என்பது தொழிலாளர் மற்றும் அவருக்கு வேலை அளிப்போர் ஆகியோரின் பங்களிப்புடன் செயல்படக்கூடிய அமைப்பு என புரிந்து கொள்ளலாம். 

 

இந்த நேரத்தில் நான்கு முக்கியமான நிவாரண உதவித் திட்டங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

 

1. இ.எஸ்.ஐ. சந்தாதாரர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அவருடைய வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை வழங்கப்படும். அவர் வேலைக்குச் சென்றிருந்தால் என்ன ஊதியம் பெற்றிருப்பாரோ அதில் 70 சதவீதம் நிவாரணமாக வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகை 91 நாள்கள் வரை வழங்கப்படும். அதற்குப் பின்னிட்டும், அவர் உடல்நலம் தேறி வரவில்லை எனில், அந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாது என்பதால், அவருடைய ஊதியத்தில் 80 சதவீதத் தொகையை மாதந்தோறும் நிவாரணமாக வழங்கப்படும்.

 

2. வேலை செய்யும்போது ஏற்படக்கூடிய காயத்தால் தற்காலிக ஊனம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், அவர்களுக்கு ஊதியத்தில் 90 சதவீதம் வழங்கப்படும். உடல் ஊனம் சரியாகும் வரை இவ்வாறு வழங்கப்படும்.

 

ஒருவேளை, நிரந்தரமான ஊனமாக ஆகிவிட்டால், நிரந்தர உடல் ஊனமுற்றோருக்கான உதவியாக ஆயுள் முழுக்க நிதி உதவி வழங்கப்படும். அவர் கடைசியாக என்ன ஊதியம் பெற்றாரோ அதை வாழ்நாள் முழுவதும் பெற முடியும். இந்த உதவித்தொகை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயரும். இதற்காக அவர் வேறு எங்கும் வேலைக்குச் செல்லக்கூடாதா என்றால் தாராளமாக செல்லலாம். அப்படி வேறு வேலைக்குச் சென்றாலும் இ.எஸ்.ஐ.சி. வழங்கும் நிவாரண உதவி தொடரும்.

 

3. இன்னொரு முக்கிய திட்டம், பணிக்குச் செல்லும் பெண்களுக்கானது. அவர்களுக்கு பேறுகால உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை முதல் இரண்டு குழந்தைகளின் பிரசவத்திற்காக வழங்கப்படும். 6 மாத காலம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். மகப்பேறு காலத்தில் 6 மாத ஊதியத்தை அவர் பணியாற்றும் நிறுவனம் தர வேண்டியதில்லை. இ.எஸ்.ஐயே வழங்கும். அவர் வேலைக்குச் சென்ற காலத்தில் என்ன ஊதியம் பெற்றாரோ அத்தொகை வழங்கப்படும். 

 

4. அடுத்த திட்டம், சார்ந்திருப்போருக்கான உதவித்தொகை திட்டம் ஆகும். ஒருவர் வேலையில் இருக்கும்போதோ அல்லது வேலை நிமித்தமாகவோ இறந்துவிட்டால் வழங்கப்படும் உதவித்தொகை ஆகும். ஊழியர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 90 சதவீதம், சார்ந்திருப்போருக்கு வழங்கப்படும்.

 

அந்த ஊழியரின் மனைவி உயிருடன் இருக்கும் வரை இந்த உதவித்தொகையை பெற முடியும். ஒருவேளை, உயிரிழந்த தொழிலாளருக்கு மனைவி, மகன், மகள் ஆகியோர் இருந்தால், நிவாரணத் தொகை 7 பங்காக பிரித்து வழங்கப்படும். 

 

இதில், 3 பங்கு மனைவிக்கும், 2 பங்கு மகளுக்கும், 2 பங்கு மகனுக்கும் பிரித்து வழங்கப்படும். இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொண்டால் அந்த நிவாரண உதவித்தொகை நிறுத்தப்படும். அதேநேரம் மகன், மகளுக்கு கிடைக்கும். 

 

மகளைப் பொருத்தவரை, அவருக்கு திருமணம் ஆகும் வரை வழங்கப்படும். மகள் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றால் அவர் இறக்கும்வரை அந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மகனுக்கு 25 வயது வரை நிவாரண உதவித்தொகை கிடைக்கும். 

 

இதில் இன்னொரு வரவேற்புக்குரிய அம்சமும் இருக்கிறது. என்னவெனில், ஒருவர் வேலைக்குச் செல்லும்போது அடிபட்டு இறந்தாலோ அல்லது வேலை முடிந்து திரும்பி வரும்போது விபத்தில் இறந்தாலோ அவர் பணி நேரத்தில் இறந்ததாகவே கருதப்படும். 1.6.2010 முதல் இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது. 

 

அதுமட்டுமல்ல. வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே ஒருவர் அடிபட்டு இறந்துவிட்டாலும் கூட இந்த உதவித்தொகையைப் பெற முடியும் என்பது முக்கியமானது. அன்றைய தினம் அவர் இ.எஸ்.ஐ.யில் சந்தாதாரராகக்கூட இருந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி இருந்தாலும் அவருடைய குடும்பத்தாருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

 

ஒருவர் வேலைக்குச் சேர்ந்து பத்து நாள்களுக்குள் இ.எஸ்.ஐ.யில் காப்பீட்டாளராக பதிவு செய்ய வேண்டும். ஆனால் நடைமுறையில் பல தொழில் அதிபர்கள் அப்படி செய்வதில்லை. உண்மையான ஊழியர் ஒருவர் பாதிக்கப்படக்கூடாது என இ.எஸ்.ஐ. கருதுகிறது. 

 

Lifetime relief allowance for the family of a worker who died of corona infection!

 

கரோனா நிவாரண உதவித்தொகை திட்டம்: 


நாம் மேலே நான்காவதாகச் சொன்ன சார்ந்திருப்போர் உதவித்தொகை திட்டத்தைதான் மத்திய அரசு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, சி.ஆர்.எஸ். (Corona Relief Scheme) திட்டம் என்று மாற்றி இருக்கிறது. அதாவது, எந்த ஒரு தொழிலாளியும் கரோனா நோய்த்தொற்றால் இறந்திருந்தாலும் அதையும் பணிக்காலத்தில் இறந்ததாகக் கருதி, சார்ந்திருப்போருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

இத்திட்டத்தை, கடந்த 21.3.2020 முதலே முன்தேதியிட்டு அமல்படுத்தி உள்ளது. அதனால் கரோனா முதல் அலையின்போது உயிரிழந்த இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். கோவிட் தொற்றால் இறந்த ஒருவர், அவர் நோய் தொற்று கண்டறியப்பட்ட நாளில் இருந்து குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்பே இ.எஸ்.ஐ.யில் காப்பீட்டாளராக பதிவு செய்திருக்க வேண்டும்.

 

அவர், தொற்று கண்டறியப்பட்ட நாளன்று பணியில் இருந்திருக்க வேண்டும். மேலும், தொற்று கண்டறியப்பட்ட நாளில் இருந்து முந்தைய ஓராண்டு காலத்தில் குறைந்தபட்சம் 70 நாள்கள் இ.எஸ்.ஐ. சந்தா செலுத்தி இருப்பதும் அவசியம். சி.ஆர்.எஸ். திட்டத்தில் நிவாரணம் பெற, கரோனாவால் இறந்த நபரின் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் ரிப்போர்ட், இறப்புச்சான்றிதழ் ஆகிய இரு ஆவணங்களை சமர்ப்பித்தால் போதுமானது.

 

யாரெல்லாம் சந்தாதாரர் ஆகலாம்?:

 

ஒரு தொழிலகத்தில் 21 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்குக் குறைவாக சம்பளம் பெறக்கூடிய யார் ஒருவரும் இ.எஸ்.ஐ.சி.யில் சந்தாதாரர் ஆகலாம். அதேநேரம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. 

 

இதில் சந்தாதாரர் ஆகும் தொழிலகம், இ.எஸ்.ஐ. சட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் எந்த ஒரு தொழிலகமும் இ.எஸ்.ஐ.சி.யில் சந்தாதாரராக சேரலாம். 

 

ஒரு நிறுவனத்தில் 10 பேர் பணியாற்றுகிறார் எனில், அவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது 21 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவாக ஊதியம் பெறக்கூடியராக இருத்தல் அவசியம். அப்படி இருந்தால்தான் அந்த நிறுவனம் இ.எஸ்.ஐ. காப்பீட்டுக் கழகத்திற்குள் வர முடியும். இ.எஸ்.ஐ.யில் சந்தாதாரர் ஆன உடனேயே ஒருவர், ஏற்கனவே உள்ள பாதிப்புகளுக்கும் கட்டணமில்லா சிகிச்சை பெற முடியும்'' என்கிறார்கள் இ.எஸ்.ஐ.சி. அதிகாரிகள்.