காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொடர்பாக சில கருத்துக்களை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறிய நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சித் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் கொதித்தனர். பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், அதை சரி செய்யும் பொருட்டு அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைவர் இல்லை என்று தொடர்ந்து பொதுவெளியில் சிலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்? தற்போது, சோனியா காந்தி தலைமை பொறுப்பை தொடர்வதாக தெரிவித்துள்ளார். இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை தான் தொடர்ந்து ஏற்றுக்கொள்வதாக சோனியா காந்தி அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அதைப்பற்றி நாம் பேச வேண்டிய தேவை இல்லை. தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற கேள்விகளே இங்கு எழவில்லை. அவர் தலைமையில் காங்கிரஸ் மிகச் சிறப்பாக செயல்படும் என்பது மட்டும் நிச்சயம். எனவே தேவையில்லாத விவாதங்களை எழுப்புபவர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும். சோனியா, ராகுலை தவிர வேறு யாராவது கட்சி பொறுப்பில் இருந்தால் அவர்கள் நிரந்தர தலைவரா அல்லது தற்காலிக தலைவரா என்று கேள்வி எழுப்பலாம். இன்றைக்கு கோடான கோடி காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த தலைவராக அவர் இருக்கிறார், எனவே காங்கிரஸ் கட்சி என்றால் அவர்தான், அவரின் விருப்பத்துக்கு ஏற்ப நாங்கள் செயல்படுவோம்.
கடந்த தேர்தலில் இந்தியா முழுவதும் ராகுல் தீவிர பிரச்சாரம் செய்தார், காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவர் தகுதியானவர் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. உ.பி விவசாயிகள் பிரச்சனையில் பிரியங்கா காந்தி காட்டிய உறுதியை பல்வேறு கட்சியினரும் பாராட்டினார்கள். ராகுல், பிரியங்கா போன்ற இளம் தலைமுறையினர் இருக்கையில் மீண்டும் சோனியா காந்தி தலைமை என்பதை, இளையவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு கருத்து கூறப்படுகிறதே?
உங்களுக்கு பஞ்ச தந்திர கதை தெரிந்திருக்கும். ஒரு முதியவர் ஒருவர் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாட்டுவண்டியை நடந்தபடியே அழைத்து செல்லுவார். அப்போது சாலையில் நடந்து செல்பவர்கள் சிலர் வயதான காலத்தில் அவராவது வண்டியில் அமர்ந்து கொண்டு செல்லலாம் என்று கூறுவார்கள், அவர் அப்படி அமர்ந்து சென்றால், சிலர் குழந்தைகள் நடந்து வரும் போது இவர் வண்டியில் அமர்ந்து செல்கிறாரே என்று குறை கூறுவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவர் என்பதை வேறு ஒருவர் முடிவு செய்ய முடியாது. எங்களுக்கு தலைவர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் அடுத்தவர்கள் கருத்து தெரிவிப்பது என்பது ஆச்சரியமாக கூட இருக்கிறது.
இன்றைக்கு பலர் எங்களை குறை கூறுகிறார்கள். ஆனால் யாரும் உண்மையாக நியாயத்தின் அடிப்படையில் அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. இலங்கை விவகாரத்தில் கூட இன்றைக்கு எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற சீமான் போன்றவர்கள், ஜெயலலிதா போர் என்று வந்தால் சிலர் சாகத்தான் செய்வார்கள், அதை எப்படி கொலை என்று கூறுவீர்கள் என்றார். அவரை எதிர்த்து இவர் வாய் திறக்கவில்லை, கைக்கட்டி வாய்பொத்தி மவுனமாக இருந்தார். தற்போது துடிதுடித்து பேசுகிறார். சீமான் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று ஏன் கூறுகிறோம் என்றால் பொருள் இல்லாமல் பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது, குறிப்பாக வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுவது என இருப்பவர்களை வேறு என்ன செய்ய சொல்ல முடியும். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவதூறாக பேசுவதை இந்திய அரசியல் அமைப்பு சட்டமே அனுமதிக்கவில்லையே, அதனால் தான் அப்படி கூறினோம்.
பல்வேறு வழக்குகளில் சிக்கி இருக்கும் ஹெச்.ராஜா போன்றவர்களே வெளியில் இருக்கும் போது, எதற்காக துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்புகிறாரே?
தகாத கருத்துக்களை யார் பேசினாலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். அப்படி என்றால் நாங்களும் ஹெச்.ராஜா போல அவதூறாக பேசுவோம், நீங்களே கேட்கக்கூடாது என்கிறாரா? அவதூறு கருத்து தெரிவிக்கும் ஹெச்.ராஜா போன்றவர்களையும் தான் நாங்கள் கைது செய்ய சொல்கிறோம். எனவே தவறாக பேசுபவர்கள் அனைவருக்கும் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்துதான் வருகிறோம். எனவே ஆளாளுக்கு ஒன்று என மாற்றி பேசும் பழக்கம் எங்களுக்கு இல்லை. கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்போம்.