1. மூன்று முடி அரசுகள்!
“குட்டிநாட்டில் அப்பன் மகன் அட்டகாசம்” என்று 1990களில் மாலை முரசு பத்திரிகை ஒரு கட்டுரைத் தொடர் வெளியிட்டது. அந்த நாடு வடகொரியா. அப்பா பெயர் கிம் இல் சுங். மகன் பெயர் கிம் ஜோங் இல்.
நிஜமாகவே அவர்கள் அட்டகாசம் செய்தார்களா? அப்படி செய்திருந்தால் 1948 தொடங்கி அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வடகொரியா இன்றுவரை போராடுகிறதே எப்படி?
வடகொரியாவை காணாமல் செய்துவிடுவோம் என்று அமெரிக்காவின் அதிபர்களாக பொறுப்பு வகித்த அனைவருமே மிரட்டியிருக்கிறார்கள். ரவுடி நாடு என்று முத்திரை குத்தி, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க காரணமாக இருந்தார்கள்.
அவ்வளவு மிரட்டல்களையும், தடைகளையும் தாண்டி, இதோ, கிம் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைத் தலைவரான கிம் ஜோங் உன் அமெரிக்காவை பாடாய் படுத்தி அதிபர் ட்ரம்ப்பை பேச்சுவார்த்தை டேபிளுக்கு அழைத்து வந்து ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
எல்லா தடைகளையும் மீறி, இரண்டு கொரியாக்களின் மக்களுடைய விருப்பம் நிறைவேறப் போகிறது. ஆம், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இரண்டாக பிரிக்கப்பட்ட கொரியா மீண்டும் இணையப் போகிறது. இதற்கான முடிவை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
கொரியாவின் பூர்வோத்திரத்தை தெரிந்துகொண்டால் இன்றைய அதன் நிலைமையை புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.
கொரியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். எரிமலைக் குழம்பில் சிக்கிய மனித உயிர்களின் படிமங்கள் இருப்பதாகவும், நவீன மதிப்பீடுகளின் அடிப்படையில் அந்த படிமங்களின் காலம் 3 லட்சம் ஆண்டுகளாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மண்பாண்டங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.
பொதுவாக புராணக் கதைகளின்படி டங்கன் என்பவரால் கி.மு.2333 ஆம் ஆண்டு கோஜோசியோன் என்ற பேரரசை நிறுவினார் என்று கூறப்படுகிறது. சீனாவை ஆண்ட ஹான் பேரரசு, கோஜோசியோன் பேரரசை கிமு 108 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கொரியாவின் வடக்குப் பகுதியில் நான்கு இடங்களில் அதிகார மையங்களை கட்டினார்கள். அவற்றில் லீலாங் என்ற இடத்தில் கட்டப்பட்ட அதிகார மையம் மட்டுமே இப்போதும் பாதுகாப்பாக இருக்கிறது.
கி.பி.313 ஆம் ஆண்டு சீன ஆளுகைக்கு உட்பட்ட கொரியாவின் பகுதிகளை கோகுரியோ பேரரசு கைப்பற்றியது. இந்தப் பேரரசு வடக்கு மற்றும் மத்திய கொரியாவை உள்ளடக்கியதாக இருந்தது. கோகுரியோவின் தென் பகுதியில் பயேக்ஜே, ஸில்லா, கயா என்ற முடியரசுகள் இருந்தன.
காலப்போக்கில் மஞ்சூரியாவின் தென்பகுதியும் கொரியாவின் வடக்குப்பகுதியும் இணைந்த பகுதிகளில் ஏராளமான குட்டி அரசுகள் தோன்றின. இந்தக் காலகட்டத்தில் தென்கொரியாவில் சம்ஹன் ஆட்சிக்காலம் உருவானது. சம்ஹன் என்பது மஹன், ஜின்ஹன், பையோன்ஹன் ஆகிய மூன்று கூட்டமைப்பும் இணைந்த அரசாகும். மஹன் கூட்டமைப்பில் மொத்தம் 54 குட்டி அரசுகள் இருந்தன. மூன்று கூட்டமைப்பிலும் மொத்தமாக 78 குட்டி அரசுகள் இடம்பெற்றிருந்தன.
இந்த மூன்று கூட்டமைப்பும்தான் பயேக்ஜே, ஸில்லா, கயா என்ற முடியரசுகளாக அமைந்தன. ஆனால், இந்த மூன்றும் தென்னிந்தியாவில் இருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகளைப் போல அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டு வந்தன. இந்த மூன்று முடியரசுகளில் ஸில்லா மிகச் சிறியது. ஆனால், அரசியல் ரீதியாக தந்திரமாக செயல்படும். அது சீனாவை ஆட்சி செய்த டாங் பேரரசுடனும் கொரியாவின் சக்திவாய்ந்த முடியரசுகளுடனும் சந்தர்ப்பவாத உடன்படிக்கைகளை வைத்துக்கொள்ளும்.
கொரியா தீபகற்பத்தின் வடபகுதியான கோகுரியோ அந்தக் காலத்திலேயே ராணுவ பலமிக்க நாடாக இருந்திருக்கிறது. கிழக்காசியாவில் சக்தி வாய்ந்த அரசாக இருந்திருக்கிறது. வடக்கே மஞ்சூரியாவின் பெரும்பகுதியையும், மங்கோலியாவின் உள்பகுதிகளையும், ரஷ்யாவின் பகுதிகளையும், தெற்கே சியோல் பிரதேசம்வரை கோகுரியோ கைப்பற்றியிருக்கிறது. க்வான்கயேட்டோ தி கிரேட் மற்றும் அவருடைய மகன் ஜாங்சு ஆகியோர் காலத்தில் பலம்பொருந்திய நாடாக கோகுரியோ இருந்திருக்கிறது.
சீனாவின் பல பேரரசுகளுடன் கோகுரியோ போர் புரிந்திருக்கிறது. கோகுரியோ – சூய் யுத்தம் இதில் குறிப்பிடத்தக்கது. 10 லட்சம்பேர் கொண்ட படையை கோகுரியோ தோற்கடித்தது. கி.பி.642 ஆம் ஆண்டு யியோன் கேயஸோமுன் என்ற ராணுவ தளபதி கோகுரியோவின் ஆட்சியை கைப்பற்றினார்.
இதையடுத்து, கோகுரியோ மீது சீனப்பேரரசர் டாங் டாய்ஸோங் யுத்தம் தொடுத்தார். ஆனால், சீனப் படைகளை கோகுரியோ மீண்டும் விரட்டியடித்தது. பேரரசர் டாங் மரணத்துக்கு பிறகு, அவருடைய மகன் டாங் கவோஸோங் கொரிய முடியரசுகளில் ஒன்றான ஸில்லாவுடன் கூட்டணி அமைத்து கோகுரியோவை தாக்கினார். அதுவும் தோல்வியில் முடிந்தது. சில காலம் கழித்து, தளபதி யியோன் காயேஸோமுன் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து பதவிப்போட்டிகள் அதிகரித்தன. கோகுரியோ தனது பலத்தை இழந்தது. தளபதியின் மகன்களுக்கும், அவருடைய இளைய தம்பிக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதில், தளபதியின் மூத்த மகன் சீனப் பேரரசர் டாங் உடன் சேர்ந்துகொண்டார். தளபதியின் தம்பியோ, ஸில்லா முடியரசுடன் சேர்ந்துகொண்டார்.
இந்த இருவரும் சேர்ந்து கோகுரியோவை தாக்கினர். அதில் கோகுரியோ வீழ்ந்தது. கோகுரியோவை கைப்பற்றியவுடன் சீனப் பேரரசுடன் உறவை முறித்தது ஸில்லா. பின்னர் கோகுரியோவை இயன்ற அளவுக்கு தன் வசம் கைப்பற்றியது. கொரியா தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஸில்லா தன்வசப்படுத்தியது.
சீனப் பேரரசர் டாங் கொரியா தீபகற்பத்தின் வட பகுதியை கைப்பற்றினார். ஸில்லா தென்பகுதியை கைப்பற்றியது.
கோகுரியோ வீழ்ச்சியடைந்தபிறகு 30 ஆண்டுகள் கழித்து டாயே ஜோயேங் என்பவர் பால்ஹே என்ற அரசை அமைத்து, கோகுரியோ பிரதேசங்களில் இருந்து டாங் ஆட்சியாளர்களை வெளியேற்றினார். அதன்பிறகு, கோகுரியோ பேரரசரின் மகன்களில் ஒருவர் இப்போதைய சியோல் நகரைச் சுற்றிலும் பயேக்ஜே என்ற முடியரசை நிறுவினார். பின்னர் அந்த பேரரசு கொரியாவின் மேற்குப் பகுதியில் இருந்த சிறு அரசுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. புதிய பயேக்ஜே முடியரசு விரிவடைந்த சமயத்தில் சீன கலாச்சாரத்தையும், அந்த தேசத்தின் தொழில்நுட்பத்தையும், கடல் கடந்த தொடர்புகளையும் பெற்றுக்கொண்டது. இதையடுத்து பயேக்ஜே முடியரசு கடல்கடந்து தனது ஆதிக்கத்தை வளர்த்தது. புத்தமதத்தை ஜப்பான் வரை கொண்டு சென்றது. ஜப்பானிய கலாச்சாரத்தையும், கலை, மொழியையும் கொரியாவுக்கு கொண்டுவந்து சேர்த்தது.
கொரியா தீபகற்பத்தில் மிகப்பெரிய ராணவபலத்துடன் இருந்த பயேக்ஜே முடியரசு, கோகுரியோ பேரரசர் மகா க்வாங்கேடோவால் தோற்கடிக்பட்டது.
அதன்பிறகு, ஸில்லா முடியரசு மிகச்சிறியதாக இருந்தாலும், பக்கத்தில் இருந்த சக்திவாய்ந்த முடியரசுகளுடனும், சீனாவின் டாங் பேரரசுடனும் தந்திரமான ஒப்பந்தங்களைப் போட்டு, ஆட்சிக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருந்தது. கி.பி.660ல் ஸில்லா அரசர் முயேயோல் கோகுரியோவையே தாக்கத் திட்டமிட்டார். அவருடைய தளபதி கிம் யு ஷின், சீனப் பேரரசின் படையின் உதவியோடு கோகுரியோவை தாக்கினார். ஆனால், கைப்பற்ற முடியவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற சண்டைகளில் கோகுரியோவை ஸில்லா தனது கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவந்தது.
ஆனாலும் கொரியா தீபகற்பம் முழுமையாக ஒரு குடையின் கீழ் வரவே இல்லை. பிறகு எப்போதுதான் வந்தது? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…
(இன்னும் வரும்…)
அடுத்த பகுதி: