Skip to main content

"'விக்கி விக்கி' அழுதிருக்கமாட்டார்கள், 'விஸ்கி விஸ்கி'யாக அழுதிருப்பார்கள்!" - கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்! #2  

Published on 09/08/2018 | Edited on 03/06/2020


 

kalaignar pressmeet

 

இன்றிருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரைவிடவும் செய்தியாளர்களிடம் மிகுந்த நெருக்கமும், அவர்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்தவர் கலைஞர். அவரது செய்தியாளர்கள் சந்திப்பு களைகட்டும். அவரை மடக்க வேண்டும் என்று வரும் கேள்விகளை மடக்கி திருப்பி அனுப்பும் திறனே தனி.
 


ஆட்சியில் இல்லாதிருப்பதே நல்லது...

சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு 7.9.06 அன்று நடைபெற்ற சமயம்.

நிருபர்: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருப்பேன் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே...!

கலைஞர்: அவர் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்குச் செய்கிற பெரிய நன்மைதானே. அதைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார் போலும்.

ஜான்சி ராணி அல்ல...

சென்னையில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது,

ஒருவர்: உலகத்தில் வேறு எந்தத் தலைவரோடும் எங்கள் தலைவியை ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஜான்சிராணி என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென்று, முன்னாள் அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே...  அப்படியென்ன அந்த அம்மையார் சாதித்து விட்டார்?

கலைஞர்: அந்த அமைச்சரைப் பற்றி நாவலர்தான் சொல்வார். அவர் பெயரையே அவரால் சரியாக எழுதித்தெரியாதவர் என்று. எனவேதான், டான்சிராணி என அழைப்பதைத்தான், தவறுதலாக ஜான்சிராணி எனச் சொல்லியிருப்பார்...

எனச் சொல்லி முடிப்பதற்குள், நிருபர்கள் கூட்டமே சிரிப்பில் சிக்கி கலகலத்துப் போனது.

இந்து-முஸ்லிம் ஒற்றுமை

நிருபர்கள் கூட்டமொன்றில், 

ஒருவர்: அண்மையில், தாங்கள் ரசித்த துணுக்கு ஒன்றைக் கூறமுடியுமா?

கலைஞர்: கபீர்தாசர், இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். ஆனால், அவரை இந்துக்களும் திட்டினார்கள், முஸ்லிம்களும் திட்டினார்கள். கபீர்தாசர் இதனைக் கண்டு சிரித்தாராம்."இந்துக்களும்-முஸ்லிம்களும் என நாங்கள் இருவருமே உங்களைத் திட்டுகிறோம். நீங்கள் சிரிக்கிறீர்களே ஏன்?" எனக் கேட்டார்களாம். அதற்கு அவர், "என்னைத் திட்டுவதிலாவது நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறீர்களே. அதனால்தான்" என்றாராம். நாகூர் லோகநாதன் என்பவர் எழுதிய இந்தத் துணுக்கு என்னை மிகவும் கவர்ந்தது என்றார்.

(நிருபர்களையும் இது கவரத்தானே செய்யும்).

 

 

 


விக்கி விக்கி அழவில்லை...!

1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டபின், அதே ஆண்டு மே திங்களில், சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு வந்த நேரம் ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர்களைத் தீவிரமாகத் தேர்வு செய்தபோது, எம்.ஜி.ஆர். தனது கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே, சட்டமன்ற உறுப்பினர்களாகவிருந்தவர்கள் பலர் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்து ஏமாற்றமடைந்திருந்தனர்.

மறுநாள், கலைஞரைச் சந்தித்த நிருபர்களில் ஒருவர், "நேற்றைய அ.தி.மு.க. பட்டியல் பலருக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்துவிட்டன. சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி முழுமைக்கும் ஒரே முனகல். போர்க்கொடி. இன்னும் சொல்லப்போனால், பலர் விக்கி விக்கி அழுது கொண்டே இருக்கிறார்கள் என முடிப்பதற்குள், கலைஞர் இடைமறித்து,"அன்புள்ள நிருபரே, நீங்கள் சொல்வதைக் கொஞ்சம் மாற்றிக்  கொள்ளுங்கள். அவர்கள் "விக்கி விக்கி" அழுதிருக்கமாட்டார்கள். 'விஸ்கி விஸ்கி'யாக அழுதிருப்பார்கள் என்றதும் ஒட்டுமொத்த நிருபர்களும் சிரிப்பில் மூழ்கிப் போனார்கள்.
 

http://onelink.to/nknapp


எந்தக் காலகட்டம்?

1998-ம் ஆண்டு ஜூன் மாதம் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களின் சந்திப்பு நடைபெற்ற சமயம்...

ஒரு நிருபர்: நான்கு முறை நீங்கள் முதல்வராக இருந்திருக்கிறீர்கள். இவற்றில் எந்தக் காலகட்டத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறீர்கள்?

கலைஞர்: ஒரு குறிப்பிட்ட காலத்தை மட்டும் நான் சொன்னால் மற்ற மூன்றுக்கும் கோபம் வராதா?

இது போன்ற கேள்விகளை இனி யாரிடம் கேட்போம், இது போன்ற பதில்களை இனி யார் தருவார் என்று நிருபர்கள் கலைஞரை மிஸ் பண்ணுகிறார்கள்.  


 

 

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.