Skip to main content

நண்பருக்காக 65 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் காட்டிய கோபம்... அதிர்ந்த காமராஜர்!

Published on 02/06/2022 | Edited on 03/06/2022

 

ர

 

எழுத்தாளர், பேச்சாளர், படைப்பாளி, வசனகர்த்தா, பாடலாசிரியர், அரசியல் கட்சி தலைவர் என்று பல முகத்தினை உடைய திமுக  தலைவர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகம் அவரின் குரலைக் கேட்கவில்லை. அவரின் திரை வசனத்தை முகரவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவரின் கரகர குரலில் தொண்டர்களின் மூச்சோடு கலந்துள்ள 'உடன்பிறப்புகளே' என்ற வார்த்தையைக் கூடக் கேட்க முடியவில்லை. ஆனாலும், அவரின் திட்டங்களால், தத்துவங்களால் அவர் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் அனுதினமும்.

 

தோல்வியைத் தூர எறிந்தவன்

 

1957ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு முதன் முதலாக குளித்தலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவர். அப்பொழுது அவருக்கு வயது 33. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 95. அப்பொழுது அவர் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். கிட்டதட்ட 62 ஆண்டுகளாக அவர் சட்டப்பேரவை உறுப்பினர். தோல்வியே சந்திக்காத பேரவை உறுப்பினர் ஒருவர் 60 ஆண்டுகாலமாக இந்தியாவில் இருந்தார் என்றால், அவர் இவர் ஒருவர் மட்டுமே.

 

தமிழகத்தின் பொற்கால ஆட்சியைக் கொடுத்த காமராஜர் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். தமிழ்த்தாயின் தலைமகன் என்று சொல்லப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களும் 1962 ஆண்டு காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். ஜெயலலிதாவும் 1996ஆம் ஆண்டு பர்கூரில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் கடந்த 60 ஆண்டுகாலமாகத் தேர்தலில் பங்கெடுத்த கலைஞர், தோல்வி அடைந்ததில்லை. அவர் தலைமையிலான திமுக படுதோல்வி அடைந்த 1991ஆம் ஆண்டு தேர்தலிலேயே கூட அவர் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

 

நகைச்சுவையின் நாயகன்

 

கலைஞரின் நகைச்சுவை என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. ஒருமுறை சட்டமன்றத்தில் ஒரு காரசார விவாதம் நடைபெற்று வந்தது. ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர், "கும்பகோணம் கோயில் குளத்தில் முதலை உள்ளதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு ஏன் செய்தீர்கள்? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தார். உடனடியாக கலைஞர் எழுந்தார். அவர் முதல்வராக இருந்த சமயம் அது. மாண்புமிகு உறுப்பினர் முதலையை ஏன் போட்டீர்கள் என்று கேட்கின்றார். அவருக்கு நான் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அரசாங்கம் முதலைத்தான் போடமுடியுமே தவிர முதலையைப் போட முடியாது என்று கூறினார். கேள்வி கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினரும் அவரின் பதிலைக் கேட்டு அவர் சிரித்து விட்டார்.

 

ஒருமுறை கலைஞர் 'இந்து' என்றால் திருடன் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டுள்ளதாக பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சங்பரிவார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன. அப்பொழுது வட மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கலைஞரின் தலையைச் சீவி விடுவேன் என்று கூறினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் "உங்களின் தலையைச் சீவி விடுவதாக சாமியார் ஒருவர் கூறியுள்ளாரே அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு யாரும் எதிர்பாராத ஒரு பதில் கலைஞரிடம் இருந்து உடனடியாக வந்தது, "நானே என் தலையைச் சீவி 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. அவருக்குதான் ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போமே" என்று. இதைவிட ஒரு சுவாரசிய சம்பவம் நடிகர் விஜய் படத்தின் வெற்றி விழாவில் நடைபெற்றது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி விழாவில் பங்கெடுத்த அவர், வெற்றி விழாவில் பேசும் போது, "தம்பி விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் எஸ்டர் டே" என்று கூறினார். அவரின் இந்தப் பேச்சைக் கேட்ட விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது.

 

 

அடுக்கு மொழியின் காதலன்

 

கலைஞரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததில் ஒரு கவிதைக்கு முக்கிய பங்கு உண்டு. அண்ணா அவர்கள் மறைவையொட்டி அவர் எழுதிய அந்த கவிதைதான் அது.

 

மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு-அதில்

முத்தமிழ் மணமுண்டு

மூவேந்தர்,முக்கொடி,முக்கனி-என

மும்முரசு ஆர்த்தவர் தமிழர்

அவர் வாழ்ந்த -தமிழ்

வாழ்வுக்கு மூன்றெழுத்து-அந்த

வாழ்வுக்கு அடிப்படையாம்

அன்புக்கு மூன்றெழுத்து-அந்த

அன்புக்கு துணைநிற்கும்

அறிவுக்கு மூன்றெழுத்து

அறிவார்ந்தோர் இடையில்எழும்

காதலுக்கு மூன்றெழுத்து

காதலர்கள் போற்றி நின்ற கடும்

வீரமோ மூன்றெழுத்து

வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து

களம் சென்று காண்கின்ற

வெற்றிக்கு மூன்றெழுத்து-வெற்றிக்கு

ஊக்குவின்ற அமைதிமிகு

அண்ணா மூன்றெழுத்து என்று அந்த கவிதை முடியும்.

 

அதில், ஒருவரியில் "நீ கண்மூடி சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன், இன்று மண்மூடிக் கொண்டு உன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை" என்று எழுதியிருப்பார் அவர். தமிழ் சிலருக்கு வசமாகலாம். ஆனால் தமிழ், வாழ்க்கை ஆனது கலைஞருக்கு மட்டுமே.

 

தமிழகத்தின் முதல்வராக கலைஞர்

 

தமிழைத் தவிர எந்த பின்புலமும் இல்லாத அவர் தமிழகத்தின் முதல்வராக 19 ஆண்டுகாலம் இருந்துள்ளார். அதாவது தமிழகத்தின் நீண்டகால முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் நடந்தது அல்ல, அல்லது கூவத்தூர் பாணியில் வந்ததும் அல்ல. சோம்பலுக்கு விடுமுறை தந்துவிட்டு, சூரியனுக்கு முன் துயிலெழுந்த அவரது உழைப்பால் கிடைத்ததன்றே தவறி, வேறொன்றும் அல்ல. 45 வயதிலேயே தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர். 80 வயதுக்கும் மேலாக முதல்வர் பதவியில் இருந்தவர். 1971ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் 184 உறுப்பினர்களோடு மிகப்  பெரிய மெஜாரிட்டியில் பதவிக்கு வந்தவர். 20 ஆண்டுகள் கழித்து தான் ஒருவன் மட்டுமே வெற்றி பெற்ற போதும் தோல்வியில் கலங்காதவர். வெற்றியையும், தோல்வியையும் பெரிய வித்தியாசத்தோடு பார்க்காத பண்பாளன் என்றால் அது மிகையல்ல.பல சாதிகளாகப் பிரிந்திருந்த தமிழனைச் சமத்துவபுரத்தில் சமமாக ஆக்கியவர். சாதி மறுப்பு திருமணத்துக்காக கடைசி வரையில் போராடி வெற்றி பெற்றவர். பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கிய தாய் உள்ளம் கொண்டவர். இன்னும்  சொல்லலாம். 

 

தலைவர்களின் பார்வையில் கலைஞர்

 

கலைஞர் கருணாநிதி, இந்த ஒற்றை பெயர்தான் கடந்த 60 ஆண்டுகாலத் தமிழ் பத்திரிகை உலகின் தலைப்பு செய்தி என்று ஒருமுறை கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்திருப்பார். அது வெறும் வாய் சொல்லல்ல. 1996 ஆண்டு தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், பிரதமர் பதவிக்கு யாரைக் கொண்டு வரலாம் என்ற பேச்சு வட மாநில தலைவர்கள் மத்தியில் எழுந்தது. உடனே அவர்கள் அனைவரும் சொன்ன ஒரு பெயர் கலைஞருடையது. ஆனால் விஷயத்தை கேள்விப்பட்ட அவர் 'என் உயரம் எனக்குத் தெரியும்' என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தார். அதன் பிறகே கர்நாடகாவைச் சேர்ந்த தேவகவுடா பிரதமர் ஆனார் என்பது வரலாறு. ஒருமுறை ஜெயலலிதாவிடம் 'கலைஞரிடம் பிடித்தது எது?' என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அவர், அவரின் தமிழ் என்றும், கூடுதலாக அவரின் குடும்பப் பாசமும் கூட என்று கூறி ஒரே கேள்வியில் ரோஜா பூவையும் , அணுகுண்டையையும் சேர்ந்து வீசினார் ஜெயலலிதா. இந்த பதில் கூட கருணாநிதியின் வசனத்தின் தாக்கத்தால் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்குமோ என்று கூட அப்பொழுது பத்திரிகைகள் எழுதின.

 

 

அணுகுண்டை விடவும் ஆபத்தானது கலைஞரின் கோபம்

 

கலைஞரை அனைவரும் சிரித்துப் பார்த்திருப்போம், சிலர் அழுதும் பார்த்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் 1957 ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்ம வீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்ரமணியன் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்ரமணியன், ஆசைத்தம்பியிடம் உங்களுக்குச் சிறுநீர் வந்தால் தாரளமாக வெளியே செல்லாம், அதற்காகச் சபாநாயகரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று கூறி அமர்ந்தார்.

 

அமைச்சரின் இந்த பதிலைக் கேட்ட ஆசைத்தம்பி செய்வதறியாது திகைத்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுதுதான் அந்த குரல் வெளிப்பட்டது, வெளிப்படுத்தியவர் கலைஞர். அமைச்சரின் பேச்சால் கடும் கோபத்துக்கு உள்ளான அவர், சபாநாயகரைப் பார்த்துக் கூறியதுதான் உச்சகட்ட அணுகுண்டு தாக்குதல். "மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, ஆசைத்தம்பிக்கு சிறுநீர் வந்தால், அமைச்சர் சி.சுப்பரமணியன் ஏன் வாய் திறக்கின்றார்" என்று கூறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் கலைஞர். அவரின் இடிமுழக்கக்  கருத்தைக் கேட்ட சி.சுப்ரமணியன் அவமானத்தால் கூனிக்குறுகினார். கலைஞரின் பேச்சைக் கேட்ட காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.