1997- ஆம் ஆண்டு, தனது 26- வது வயதில் போர்க்களத்தில் இறங்கிய அப்பெண்ணுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பிற்காலத்தில் நமது வாழ்வு ஒரு நித்திய சுடர் ஆகும் என்று. இன்று, அவரது 51 ஆவது வயதில் வீழ்ந்தாலும், அவரது போராட்ட குணத்தாலும், அநீதிக்கு எதிராக தனது குரலாலும் கம்பீரமாக நிற்கிறார், நிற்பார்.
'PRESS' என்ற வாக்கியத்தை, நீதிக்கான கடமையை ஏந்தும் அனைவரது இதயத்திலும், அவர்கள் சந்தித்த துயரங்கள் ஒரு வடுவாக வாழ்ந்து கொண்டிருக்கும். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், ஆபத்துகள் வீற்றிருக்கும் பாதையில் வீறுநடை போட்டு, குண்டு மழை பொழியும் போர்க்களத்தில் நின்று உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்கள் என்றுமே மடிவதில்லை.
தலிபான்களால் கொல்லப்பட்ட இந்திய புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திக் அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது, நாம் மற்றொரு மகத்தான பத்திரிகையாளரை இழந்திருக்கிறோம். 51 வயதான அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்ரேலிய படையால், பாலஸ்தீனத்தில், சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார். மே 3- ஆம் தேதி, தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிரீன் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என யார் தான் அறிந்திருந்தோம்? போராட்ட குணம் நிறைந்த இதயங்கள், பிறந்த நாளுக்கோ, இறந்த நாளுக்கோ எதற்கும் தயாராகத்தான் இருக்கின்றன.
இரண்டு தசாப்தங்களாக போர்க்களத்தில் வாழ்ந்த ஷிரீன், தன்னை எப்போதேனும் தோட்டாக்கள் தாக்கும் என நிச்சயமாக யூகித்திருப்பார். இருந்தும், தனது தோளில் சுமந்தப் பணியை, நீதிக்கான குரலை அவர் எப்போதும் இறக்கி வைத்ததில்லை. ஜெருசலேத்தில் பிறந்த ஷிரீன், பிற்காலத்தில், அரேபிய உலகில் மிகப் பிரபலமான பெண் பத்திரிகையாளராக உயர்ந்து நின்றார். 1997- ல் அல் ஜஸிராவில் பயணிக்க தொடங்கிய ஷிரீன், பாலஸ்தீன அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்கும் பொழுது, இஸ்ரேலிய படையின் தோட்டாக்களுக்கு இரையாகி இருக்கிறார்.
சிறிய உலகில் ஒரு நெடும் பயணமாக அது இருந்தாலும், ஆயுதங்களுக்கு எதிராக தனது வலிமையான குரலால், பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறையை சர்வதேச சமூகத்திற்கு பறைசாற்றினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனிய மக்களின் அவலநிலையைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார். இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் இறுதி ஊர்வலத்தை கா(சா)ட்சிப்படுத்தியவர், தற்போது அதே படைகளால் கொல்லப்பட்டது, அப்போர்க்களத்தின் தட்பவெப்ப நிலையை நமக்கு ஆவணப்படுத்தியிருக்கிறது.
பத்திரிக்கைத் துறையில் தான் செய்த அளப்பரிய பணி, பாலஸ்தீனிய அகதிகளுக்கு தான் ஆற்றிய சேவை, மற்றும் மற்ற அரேபியர்களும் பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க அவரின் உந்துதல் ஆகியவை மூலமாக ஷிரீன் அவரை வீழ்த்திய தோட்டாக்களை தோற்கடிப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பயங்கரவாதத்தால் பலியான சவுதியின் ஜமால் காஸோக்கி, இந்தியாவின் டேனிஷ் சித்திக், கவுரி லங்கேஷ் போன்றோரின் வரிசையில், ஷிரீனும் பலியாயிருக்கிறார்.
வீழ்வது நாமாயினும் வாழ்வது நாடாகட்டும் என்பதுபோல, தான் வீழ்ந்தாலும், தன் பங்களிப்பின்மூலம் மக்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பார். "அழிவின் அளவையோ அல்லது மரணம் சில சமயங்களில் நெருங்கிவிட்டது என்ற உணர்வையோ என்னால் மறக்கவே முடியாது." - ஷிரீன் 2002- ஆம் ஆண்டு உதிர்த்த வார்த்தைகள் இவை. இந்தாண்டு தொடக்கத்தில், அல் ஜசீரா, ஷிரீனின் 25- வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஒரு காணொளி வெளியிட்டது. அதில் ஷிரீனின் பேச்சு மறக்கமுடியாதவை, "கடினமான காலங்களில், நான் பயத்தை வென்றேன். யதார்த்தத்தை மாற்றுவது கடினமாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் அந்த குரலை உலகிற்கு கொண்டு வர முடிந்தது" என கூறினார்.
ஷிரீனின் குரல் எப்பொழுதும் மக்கள் படும் துன்பங்களின் குரலாகவே இருந்திருக்கிறது. அவர்களின் சுதந்திரத்திற்கான, விடுதலைக்கான நம்பிக்கையாய் இருந்தது. கண்ணீர் துடைத்த கைகளை, தற்போது தோட்டாக்கள் துளைத்துவிட்டது. ஆனால், தோட்டாக்கள் தோற்றுப்போகும், ஆயிரம் ஷிரீனின் எழுச்சியினால். பயங்கரவாதமும் தோற்கும். அது தோற்பதற்கு தாமதமாகும், ஆனால் இறுதியில் வீழும். அதற்கு நம் கண்முன் இருக்கும் தற்போதைய சாட்சி இலங்கை.
ஷிரீன் வீழ்த்தப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.
- அழகு முத்து ஈஸ்வரன்