Skip to main content

ஜெயலலிதாவுக்கும் எனக்கும் அடித்த பம்பர் பரிசு! - ஆட்டோ சங்கர் #12

Published on 14/07/2018 | Edited on 23/07/2018
auto sankar 12



ரெண்டு மூணு நாள் கழித்து மறுபடியும் "வீடு சௌகரியமாய் இருக்கிறதா' என   அவளிடம் விசாரிப்பதற்காக சென்றபோது எனக்கு அதிர்ச்சி. காரணம், அவள் கழுத்தில் தொங்கிய தாலி!

"கன்னிப் பெண்ணாயிருக்கிறதாலே ஏகப்பட்ட விடலைப் பசங்க தொந்திரவு பண்றாங்க! அவங்ககிட்டேயிருந்து தப்பிக்கத்தான்... அதுவும் தவிர கல்யாணமானவள்ங்றப்ப என் அம்மாவும் என்னைக் கூப்பிட வராம இருப்பா இல்லே... அந்த பாதுகாப்புக்காகத்தான் எனக்கு நானே தாலிகட்டிக்கிட்டேன்'' என்றாள்.

மலைத்துப் போனேன்.

"சரி, புருஷன் யாருன்னு கேட்பாங்களே?''

"நீங்கதான்னு சொல்லியிருக்கேன்''

முட்டை மீது இடி விழுந்தமாதிரி மொத்தமாய் நொறுங்கிப்போக வைத்தது சுமதி சொன்ன விஷயம்!

"எ..என்ன சுமதி? இப்படியொரு காரியம் செய்துட்டே... உதவி செய்கிற ஆளுக்கு இப்படித்தான் உபத்திரவம் செய்கிறதா?'' -கோபிக்க... சுமதிக்கு கண்கள் அலம்பிற்று.

 

auto sankar 12



"நான் அப்படிக் கட்டிக்கலைன்னாலும், ஊர் உங்க வைப்பாட்டின்னுதான்ங்க சொல்லும். தாலியிருக்கிறதாலே கொஞ்சம் மரியாதை மட்டுமாவது மிஞ்சும். எந்தப் பயலும் வாலாட்டவும் மாட்டான்... வேற யாரையாச்சும் நான் புருஷன்னு சொன்னா... புருஷனைக் காணோமே... இந்த ஆள் யாருன்னெல்லாம் அக்கம் பக்கம் கேள்வி வரும். முதுகிலே பேசும். நயாபைசா பார்வை பார்க்கும். விபச்சாரி பட்டம் கொடுக்கும். அதற்கு வைப்பாட்டி கொஞ்சம் கௌரவமான பதவி இல்லையா.... ஆனா, உங்களை இதிலே தேவையில்லாம களங்கப்படுத்தியிருக்கேன்.... என்னை மன்னிச்சுடுங்க''

 

 


பெருமூச்சு வந்தது. நல்லது செய்யணும்னு வந்தா சோதனைகளைச் சந்திச்சுதானே ஆகணும்... "உன் இஷ்டப்படி செய்... ஆனா ஒரு விஷயம். தாலியைப் பார்த்து என் வைப்பாட்டின்னு ஊர் நினைக்கட்டும் பரவாயில்லை. ஒரு நாளும் நீ நினைச்சுடக்கூடாது. என் மேலே தப்பான ஆசை எதுவும் வச்சுடக்கூடாது. ஒரு பிராயச்சித்தமாதான் உன்ன காப்பாத்திகிட்டிருக்கேன். நான் கூடுதலா ஒரு பாவம் பண்றதுக்கு நீ காரணமாயிடக்கூடாது. ஊர் என்னை உன் புருஷனா நினைக்கட்டும் பரவாயில்லை... ஆனா, நீ உன் சகோதரனாதான் நினைக்கணும், இந்த உத்தரவாதத்தை நீ கொடுத்தால் இனி நான் உன்னைப்பார்க்க வருவேன். இல்லையானா இதான் என் கடைசி வருகை. என்ன சொல்றே?'' சுமதி களங்கமில்லாமல் சிரித்தாள்.

"நீங்க எப்பவும் இங்க வரணும்...''

"அப்படியானா நீ...?''

"நான் உங்களை எப்பவுமே என் புருஷனா நினைக்கலியே... நான் எந்த விதத்திலேயாவது கற்போட இருக்கத்தான் இங்கே வந்திருக்கேனே தவிர, உங்களைக் கல்யாணம் செய்துக்கிறதுக்காக வரலை... நீங்களாக ஏன் எதை எதையோ கற்பனை செய்துக்குறீங்க?''

 

 


சில சமயங்களில் உண்மை கற்பனையைவிட வேடிக்கையாகவும், வியப்பாகவும் காட்சி தரக்கூடியது என்பது எவ்வளவு நிஜம்? தாலி கட்டிக்கொண்டு அண்ணன் தங்கையாய் இருந்தவர்களை உலகத்தில் எங்கேயாவது பார்க்க முடியுமா? யாராவது சொன்னால் நம்புவோமா? உண்மைக்கு  நம்புவார், நம்பாதவர் பற்றியெல்லாம் என்ன அக்கறை? சாகாததுதானே உண்மை! எனவே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதும் அதற்குத் தேவை இல்லைதான்.

சுமதிக்கு நான் தந்த உத்தரவாதத்தைக் காப்பாற்றவும் செய்தேன். அது முக்கியமில்லை, அந்த சுமதிதான் எனது தூக்குதண்டனைக்கே துருப்புச்சீட்டாக ஆனாளே... அதுதான் முக்கியம்!  சரி, அது பின்னால் நடந்தது.

 

 

 

money



இப்போது, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடந்த அதிமுக பிரிவுக்கு வருவோம்... 

எம்.ஜி.ஆரின் மரணம் இரண்டு பேருக்கு பம்பர் பரிசாக அமைந்துவிட்டது! ஒன்று ஜெயலலிதா; ஆட்சியைப் பிடித்தார்! இன்னொரு நபர் ஆ.சங்கராகிய நான்தான். இரண்டு பட்ட கோஷ்டிகளுக்கு பலான சங்கதிகளை சப்ளை செய்து ஒரு சில ராத்திரிகளுக்குள் முப்பது லட்சம் பணம் கொட்டியது. ரூபாயை எங்கே மறைத்து வைப்பது என்றே தெரியவில்லை. கறுப்புப் பணமாயிற்றே. வருமான வரி ஆபீசுக்கு தெரிந்தால் போச்சு.

 

 


தொகை அனைத்தையும் ஐநூறு ரூபாய் கட்டுகளாக மாற்றினேன். சுருக்கமான எண்ணிக்கையில் இருந்தால் மறைப்பது சுலபம் ஆயிற்றே!படுக்கை மெத்தையின் ஒரு முனை நூலை பிரித்து உள்ளேயிருந்த இலவம் பஞ்சு மறைவுக்குள் பணக்கட்டுகளை திணித்தேன். பழையபடி வாயைத் தைத்து மேலே போர்வை விரித்து மறைத்தாயிற்று. இதை கட்டின மனைவியிடம் கூட சொல்லக்கூடாது என தீர்மானித்தேன். பாபுவிடம் மட்டும் தெரிவித்தேன்!

தாம்பரம் தொகுதியில் எம்.எல்.ஏ. சீட்டுக்கு போட்டியிட திட்டமிட்டேன்! அப்போது தேர்தல் செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்த எண்ணம். ஆனால்  நடந்ததோ...

அடுத்த பகுதி:

முதல் பெண்... முதல் கொலை...  ஆட்டோ சங்கர் #13

முந்தைய பகுதி:

சுமதி... தஞ்சம் கேட்டு வந்த எமன்! - ஆட்டோ சங்கர்#11

 

   

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

 

 

Next Story

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23

Published on 07/12/2018 | Edited on 09/12/2018

தேவியுடன் சேர்ந்து கூத்தடித்தேன். என்னிடம் பெண் கேட்டு வரும் ஸ்திரிலோலர்களில் அதிக திடம் அதிக சக்திவாய்ந்த ஆசாமிகளை அனுப்பி வைத்தேன்! அவளுக்கும் பரம திருப்தி. அந்த வாட்டசாட்டன்களிடமிருந்து நமக்கும் வசூல்! ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். சென்னையிலிருந்த இளம் நீக்ரோக்கள் நெல்சன் மண்டேலாவை விட அதிகம் நேசித்தது அந்த பெண்மணியைத்தான்!

 

auto sankar



பெரியார் நகரில் புதுசாக வீடு கட்டி, கிரகப்பிரவேசத்துக்கு அத்தனை முக்கிய போலீஸ் அதிகாரிகளும் ஆஜர் ஆகியிருந்தனர். ரிப்பன் வெட்டி வீட்டைத் திறந்து வைத்தது டி.எஸ்.பி.தங்கய்யாதான்! நம்ப அம்மையார் குத்து விளக்கு ஏற்றி வைக்க ஏகதடபுடல்.   சங்கரது சாராய வியாபாரத்தை விளக்கேற்றி தொடங்கி வைத்தது போலவே கிரகப்பிரவேசத்துக்கும் தவறாமல் கலந்து கொண்டனர் போலீஸார்!

அவர்களைச் சொல்லி தவறே இல்லை. காவல்துறை என்று பெயரே தவிர, யாருக்குக் காவல் என்று சொல்லவில்லையே? சாராய வியாபாரிகளுக்கும், மாமாக்களுக்கும் நாம்தான் காவல் காக்க வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! நன்றி மறக்காத காவல் துறையினர்!

கிரகப்பிரவேச நிகழ்ச்சிகள் எல்லாமும் வீடியோவில் பதிவாயிற்று. எனக்கு ஒரு கலர் கனவு இருந்தது! என்றைக்காவது   சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைய வேண்டும் என்ற ராஜ கனவு! அதற்கான அவ்வளவு தகுதிகளும்(!) கைவசம் என்றாலும் நேரம்தான் வாய்க்கவில்லை.

 

auto sankar house celebration



எப்படியும் தேர்தல் சமயத்தில் உபயோகப்படும் என்றே எல்லா 'பெரிய மனிதர்களோடும்' பழகினேன்! பெரிய மனிதர்களின் அழுக்கு அந்தரங்கங்களுக்கு- கறுப்பு சிந்தனைகளுக்கு- பயன்பட்டது என் நீலப்பட்டறை! பிற்பாடு தேர்தல் சமயம் அரசியல் வட்டாரத்தில் என் செல்வாக்கைக் காட்டுவதற்காகவே பூரா வி.ஐ.பி.களையும் அதிகாரிகளையும் விழாவுக்குக்   கூப்பிட்டேன். வீடியோவில் அவர்களை விழ வைத்தேன். தேர்தல் வருமுன் நான் மட்டும் விழாமல் இருந்திருந்தால் தேர்தல் வெற்றி விழாவும் நடத்தியிருப்பேன்!

அம்மையாரிடம் விளையாடி விட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். வாசலில் ஜீப் ஒன்று டயர் தேய வந்து நின்றது.   கான்ஸ்டபிள்கள்  ரெண்டு பேர் இறங்கி வந்தனர். புருவத்தில் கேள்வி முடிச்சு! 'பெரிய அய்யா' உடனே அவனைக் கூட்டி வர   சொன்னாராம். தெரிவித்தார்கள்! எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! 

'பெரிய அய்யா' என்பது அந்த அம்மையாரின் கணவர்! இதுவரை அவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை; காவல்துறையில் அந்த ஒருவரை மட்டும் நெருங்கவேயில்லை நான்! அவர் மனைவியுடன் பழகி வரும்போது அவரை சிநேகிக்க சங்கடமாயிருந்தது. ஒரு விதமான இடைவெளியை அடைகாத்து வந்தேன், கூச்சம் காரணமாக. அவரிடம் ஆக வேண்டிய காரியங்களை அவள் மூலமாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது அவர் கூப்பிட்டார் என்றதும் அதிர்ச்சி! எதற்குக் கூப்பிட்டிருப்பார்! அவர் மனைவியிடம் உள்ள உறவு தெரிந்திருக்குமோ? அதை விசாரிக்கப் போகிறாரோ? மனசுள் பயமுயலொன்று குறுகுறுவென ஓடிற்று. முதுகுத் தண்டில் ஐஸ் நதி வருடினது மாதிரி ஜில்லிட்டது.

முந்தைய பகுதி :

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்... மறைக்கப்பட இருந்த  பெரும் உண்மைகளை சிறை வரை சென்று மீட்ட கதை... விறுவிறுப்பான முழு புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்... 

 

books.nakkheeran.in

 

 

 

Next Story

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

Published on 17/11/2018 | Edited on 09/12/2018
auto sankar 22



ஆட்டோவா, ஆகாய விமானமா என சந்தேகப்படும்படியான, நம்ப முடியாத வேகத்தில் வண்டி பறந்தது.

"கடைக்கு பலத்த சேதமா...?''

"ஆமாண்ணே...! யாரோ நாலு பேர் புகுந்து. இந்த மிஷின்லே ஏதோ ஃபிராடு இருக்குது... எப்பவுமே காசு விழறதில்லை... ஏமாத்தவா செய்யறீங்க'ன்னுஅடிச்சு நொறுக்கறாங்களாம்... நாமும் வேணா ஒரு நாலைந்து சேர்த்துப்போமா... சந்தடி சாக்கிலே கடையைத் தரை மட்டமாக்கிடலாம்!?''

"உளறாதே, பேசாம போ!''

சண்டையில் அமளி துமளிப்பட்டது கடை... அந்த நாலுவாட்ட சாட்டன்களும் பிரதேசத்தை உண்டு, இல்லை பண்ணிக்   கொண்டிருந்தனர். முதலாளியம்மா பதட்டமாகி ஃபோனுக்குப் பாய ஸ்டூல் ஒன்று பறந்து வந்து தொலைபேசியில் மோத சிதறித்   தெறித்தது. அம்மையார் அலறித் தீர்த்தார்.

இன்னொருவன் கல்லா பெட்டியில் கைவைக்க முயன்ற நிமிஷம், கடைமுன்னர் பெரிய சப்தத்துடன் போய் நின்றது அவசர ஆட்டோ., சரேலென வெளிப்பட்டேன். ஒரு நிமிடம் சண்டையை நிதானமாய் கவனித்தேன். வெறுப்புடன் காரித் துப்பினேன்! தம்பி மோகனிடம் "நான் மட்டும் உள்ளே போய் கவனிச்சுக்கறேன்... நீ ஆட்டோவிலேயே இரு!'' சொல்லிவிட்டு உள்ளே பாய்ந்து சண்டை ஜோதியில் சேர்ந்து கொண்டேன். அவர்கள் நான்கு பேரோடும் ஒற்றை ஆளாகச் சமாளித்தேன்.

வாசகர்களே, நீங்கள் யாருடைய ரசிகர்? ரஜினி? கமல்? விஜயகாந்த்? சத்யராஜ்? அல்லது வாத்தியார்? உங்கள் அபிமான நடிகர்   யாரோ அவரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்! திரையில் அவர் எப்படி எதிரிகளை சமாüப்பாரோ அப்படி ஒரு ஸ்டைல்! சாகஸம்! கெட்டிக்காரத்தனம்!

ஒரு ஆளாக நின்று கொண்டு எதிரிகளைப் பந்தாடினேன். ரௌடிகள் நான்கு பேரும் உதட்டில் எட்டிப் பார்த்த ரத்தத்துடன் துடித்தனர். வலி தாங்காமல் பெற்றவளைக் கூப்பிட்டுக் கொண்டே கீழே சாய்ந்தனர். கடையை விட்டு வெளியே பாய்ந்து மறைந்தனர். அம்மையார் கண்களில் ஆச்சரியம் பிரகாசம் காட்டிற்று. என்னை பரவசம் பொங்கப் பார்த்தார்.

 

auto sankar 22-1



'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் திருடனை விரட்டின எம்.ஜி.யாரின் பலம் பார்த்து பிரமித்த சரோஜாதேவி கூட அப்படித்தானே   பார்த்தார்?!' அது சரோஜாதேவி, இவர்... ஏதோ ஒரு தேவி! அம்மணி என்னைப் பார்த்து தோழமையுடன் சிரித்தார்.

"ரொம்ப நன்றி...! நல்ல நேரத்தில் வந்து கை கொடுத்தீங்க!''

உதட்டில் புன்னகை உருவாக்கிக் காட்டினேன்.

"அதனால என்னங்க... உங்களுக்கு எப்ப, என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்குப் ஃபோன் பண்ணுங்க'' -விசிட்டிங் கார்டை அவர் கையில் திணித்தேன். என் உதவி அவருக்கும் அவர் உதவி எனக்கும், அப்புறம் அடிக்கடித் தேவைப்பட்டது. அந்த பெண்மணிக்கு அடிக்கடி ஃபோன் செய்து என்னைக் கூப்பிடத் தெரிந்தது. பரஸ்பரம் தொழிலுதவி செய்யத் தெரிந்தது; போலீஸ் வட்டாரத்தில் என்னை மேலும் நெருக்கமாக்க தெரிந்தது.

வீடியோ கடையில் நடந்த மோத-ல் சண்டை போட்டவர்கள் என்னுடைய ஆட்கள்... அந்த சண்டையே ஒரு "செட்அப்' என்பது மட்டும் தெரியாது! 

 

bookstore ad



சூரியனும், சந்திரனும் கூட அப்போதெல்லாம் நான் சொன்னபடி கேட்டது என்றே சொல்லலாம்! சூரிய, சந்திரர் மட்டுமா? ஒரு சில   நட்சத்திரங்களும் கூட! சினிமா நட்சத்திரங்கள்! நடிகைகள்! என் ஓட்டு எப்போதும் சூரியனுக்குத்தான்! கட்சி உறுப்பினராகவும் அந்த வட்டாரத்தில் ஒரு பொறுப்போடும் இருந்தேன். ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது அந்தக் கட்சியில்லை!

அதனாலென்ன... அந்தக் கட்சியில் அரசியல்வாதிகளுடன் நெருக்கமென்றால், ஆளும் கட்சியில் அதிகாரிகளிடம் செல்வாக்கு!அதுவும் அந்த உயர் அதிகாரி! 'ஐயா'வின் மனைவியின் நட்பு என்னை அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக்கிற்று! செருப்புக்கு பாட்டாவும் இரும்புக்கு டாட்டாவும் இருந்தது மாதிரி சாராயத்துக்கு சங்கர் என பேரெடுக்க முடிந்தது, தேவியின் தயவால்!

எனக்கு இதில் இன்னொரு சந்தோஷம் கூட உண்டு! சட்டத்தின் நீள அகலமான கதவுகள் எனக்காக திறந்துவிடப்பட்டதே... இதற்கு எந்தக் கமிஷனும் கேட்கவில்லை தேவி! ஆனால் வேறு ஒன்று கேட்டார்... எனக்கு அது சம்மதமானது; சந்தோஷமானதும்!  

முந்தைய பகுதி:

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

அடுத்த பகுதி :

ஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்! ஆட்டோ சங்கர் #23