Skip to main content

“சமாதியை மூடி வைத்துக்கொண்டு சின்னம்மா ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்று கேட்பது முட்டாள்தனம் இல்லையா..?“ - தேனி கர்ணன் கேள்வி!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

ுரப

 

அதிமுகவின் 50வது ஆண்டு விழா வருகிற 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை செய்துவருகிறது. இதற்கிடையே அன்றைய தினம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதா சமாதிக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்து வந்ததிலிருந்து வெளியே அதிகம் செல்லாத சசிகலா, தற்போது முதல்முறையாக ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருக்கிறார். இந்நிலையில், சசிகலாவின் திட்டம் என்ன, இதற்குப் பிறகு அவர் தீவிர அரசியலில் களம் இறங்குவாரா உள்ளிட்ட பல கேள்விகளை சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுகவின் பொன்விழா வரும் 17ஆம் தேதி சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்த சசிகலா, தற்போது ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

எங்களைப் பொறுத்தவரையில் சின்னம்மாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அதை தனிப்பட்ட யாரும் முடிவு செய்ய முடியாது. இந்தக் கட்சியை வழிநடத்த வேண்டிய அனைத்து தகுதிகளும் அவர் ஒருவருக்குத்தான் இருக்கிறது. எனவே சின்னம்மா 16 மற்றும் 17ஆம் தேதிகளில் அம்மா சமாதிக்குச் செல்ல இருக்கிறார். அவர் அதிமுக தொடக்க தினத்தில் அம்மா சமாதிக்குச் செல்லலாம். ஆனால் அன்றைக்கு கூட்டத்தோடு கூட்டமாக மாறிவிடும். அதனால் அவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் அவர் முதல்நாளே அங்கு செல்ல இருக்கிறார். அவரின் வருகைக்குத் தொண்டர்களை அவர் அழைக்கவில்லை. ஆனால் சின்னம்மாவின் கரங்களை வலுப்படுத்த தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.

 

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபோதே ஏன் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தவில்லை, தற்போது வேண்டுமென்றே அவர் அரசியல் செய்கிறார் என்று ஜெயக்குமார் குற்றம்சாட்டுகிறாரே? 

அவர் சிறையில் இருந்து வெளியே வரும்போதே பெங்களூருவிலிருந்து சென்னை வரை அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை பார்த்திருப்பீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுகூடி அவருக்கு வரவேற்பு அளித்தார்கள். அவர்கள் எல்லாம் திமுக தொண்டர்களா? அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தானே! அன்றைய தினம் காவல்துறையை வைத்து இவர்கள் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்கினார்கள். காரில் கொடி கட்டக்கூடாது என்று கூறினார்கள், வழிநெடுக இருந்த கடைகளை மூடச் சொன்னார்கள். அவர்களால் முடிந்த அளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள். அதையும் தாண்டி உலக வரலாற்றில் இடம்பெறும் வகையில் ஒரு வரவேற்பை அவருக்கு தொண்டர்கள் வழங்கினார்கள். ஏற்கனவே திறந்த சமாதியை இவரின் வருகையை முன்னிட்டு மூடிவைத்துக்கொண்டு இன்னும் வேலை ஆகவில்லை என்று கதை விட்டார்கள். வேலை ஆகாத சமாதியை எதற்காக முன்கூட்டியே திறந்தார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் எந்த ஒரு பெரிய வேலையும் அங்கே நடைபெற்றதாக தெரியவில்லை. 

 

உண்மையான அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் சசிகலாவை நம்பி போகமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கூறிவருவது பற்றி? 

நாங்கள் எல்லாம் யார்? அம்மாவின் தொண்டர்கள், சின்னம்மாவின் விஸ்வாசிகள். ரோட்டில் 23 மணி நேரம் நின்ற தொண்டர்கள் அடுத்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களா? இல்லை மதிமுக தொண்டகளா? அனைத்தும் முட்டாள்தனமான பேச்சு. அதிமுக தொண்டர்கள் அனைவரும் சின்னம்மாவின் தொண்டர்கள்தான். தலைவர்களாக இன்றைக்குத் தங்களை நினைத்துக்கொள்ளும் அனைவரும் சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான். எனவே இவர்களுக்கு எல்லாம் பழைய சம்பவங்கள் மறந்துபோகலாம்.