15 ஆண்டுகளாக, மூன்று தேர்தல்களாக தொடர்ச்சியாக, அதிமுக வெற்றி பெற்று வந்த மயிலாப்பூர் தொகுதியில், இந்த முறை திமுகவில் பகுதிச் செயலாளராக, இருந்து மாவட்டச் செயலாளராக உயர்ந்து, வேட்பாளராக ஆன வேலு வெற்றி பெற்றுள்ளார். அதுவும் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மயிலை தொகுதி மக்கள் மத்தியில், ஒரு பெரிய அதிகாரியாக 2016 ல், அறிமுகமானவர் டி.ஜி.பி ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். அதிமுகவிற்கு வழக்கமாக விழக்கூடிய மீனவர் மற்றும் தலித், பார்ப்பனர், முதலியார், வன்னியர் மக்களது வாக்குகள் இந்த முறை திமுகவிற்கு விழுந்துள்ளது. அதற்கு பொதுவான காரணமாக, மாநகர் சென்னை முழுவதுமே திமுகவிற்கு ஆதரவான அலை வீசியது என்றாலும், மயிலாப்பூருக்கான, குறிப்பிட்ட சிறப்புக் காரணங்களும் உள்ளன.
அதில், முதலில், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் உழைக்கும் மக்களது வெறுப்பு, ஒரு முக்கியக் காரணமாகும். உதாரணமாக, கடற்கரையோரம், கலங்கரை விளக்கிலிருந்து, பட்டினப்பாக்கம் வரை உள்ள குப்பங்களில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் தலித் மக்கள் வாக்குகள் 20,000 இருக்கும். அவற்றில் கணிசமாக, திமுகவிற்கு போய்ச் சேர்ந்தன. அதற்கு முக்கியக் காரணமாக, அதிமுக அரசின் அதிகாரிகளது அணுகுமுறை எனலாம். மீன்வளத்துறை என்று இலாக்காவிற்குப் பெயரிட்டு, அதை வணிக ரீதியாக மீன் விற்பனைக்கே முக்கியத்துவம் கொடுத்து, காசு ஈட்டுவது, அதில் தங்கள் சொந்த லாபத்தை பார்ப்பது என்பது தொடர்ந்து பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின், நடைமுறையாக இருந்தது.
அதை மீன்வளத்துறை அமைச்சரும் மாற்ற முன்வரவில்லை. அதனாலேயே " மீன்வளத்துறை" யை, " மீன் வளம் மற்றும் மீனவர் நலன்" இலாக்காவாக மாற்றச் சொல்லிய மீனவர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இப்போது, ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளில், நொச்சிக்குப்பம், நொச்சி நகர் குடியிருப்புகள் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட பிறகு, டூமிங்குப்பம், முள்ளிமா நகர், ராஜிவ்காந்தி நகர், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் ஆகியவற்றில் உள்ள பழைய, சிதிலமடைந்த குடியிருப்பு வீடுகளை, இடித்து விட்டு 10 மாடிக்குடியிருப்பு கட்டப்போவதாக, கு.மா.வா. ஒரு தவறான முடிவை எடுத்தது. அதை மக்கள் மீது திணித்தது.
அதை அப்படியே அமுலாக்கப் போகிறோம் என எம்.எல்.ஏ. ஆர்.நடராஜ் கூறி வந்ததை அந்த மக்கள் தொடக்கத்திலிருந்தே ரசிக்கவில்லை. அத்தகைய தவறான முடிவை, அமைச்சரும் ஆதரித்தார் என்பதே அங்குள்ள மக்களின் குற்றச்சாட்டு. அதேபோல, லஸ் முனையில் உள்ள பல்லக்கு மாநகர் என்ற பல்லக்கு மானியக் குடியிருப்பு, கபாலி தோட்டம், ஆகிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில், சுமார் 20,000 வாக்குகள் உள்ளன. அந்த மக்களிடமும், அதிமுக எம்.எல்.ஏ. நடராஜ், " 10 மாடிக் குடியிருப்புதான் கட்டிக் கொடுப்போம்" என்று கு.மா.வா. அதிகாரிகளின் முடிவுகளை, கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு, எளிய மக்களின் உணர்வுகளை, கருத்துக்களை, மதிக்காத போக்கு கொண்டிருந்த்தை மக்கள் எதிர்த்தனர்.
முன்னாள் டி.ஜி.பி எம்.எல்.ஏ. நடராஜ், எளிய மக்களின் தேவைகளையோ, உணர்வுகளையோ புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவராக இருந்தார். என்பதே மக்கள் கூறும் விமர்சனம். உதாரணமாக, நொச்சிக்குப்பம் தொடங்கி, பட்டினப்பாக்கம் வரை, மீனவர் குப்பங்களுக்கு இடையே, மீனவர் நடமாட்டத்திற்காக, ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த "கடலோர உள்சாலை" திமுக ஆட்சியில், மீனவர்களுக்கான வாழ்விடத் தொடர்பில் இருந்த " பிரத்யேக" ச் சாலையாக அங்கீகரிக்கப்படிடிருந்தது. அதாவது 1996 ம் ஆண்டு தொடங்கிய திமுக ஆட்சி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர் தளபதி மு.க. ஸ்டாலின், மேற்கண்ட " மீனவர் வாழ்விட உள்சாலை" மூலம் வாகனப் பயணம் செய்வதற்காக, " மீனவர் குப்பங்களின் பஞ்சாயத்தாரை, போக்குவரத்து காவலர் மூலம் அணுகி, ஒரு மணி நேரத்திற்கு தனது பயணத்திற்காக அனுமதிக்க வேண்டுமாய்" கேட்டு, பெற்றுக் கொண்டார்.
அதேபோல, 2006 ம் ஆண்டு, துணை முதல்வராய் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், மீண்டும் நொச்சிக்குப்பம் மீனவர்களை, போக்குவரத்து காவலர் மூலம் அணுகி, இரண்டு மணி நேரத்திற்கு தனது பயணத்திற்காக, அந்த " மீனவர் வாழ்விட உள்சாலை" யைப் பயன்படுத்த பேசி, அனுமதி பெற்றார். இவை எல்லாமே, அந்த" மீனவர் வாழ்விட உள்சாலையை" பாரம்பரிய மீனவர்களுக்கான, "பிரத்யேகச் சாலை" என்று புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்ட மதிநுட்பச் செயல்கள். ஆனால், மதிநுட்பம் இல்லாத, அதிமுக அரசு, மீனவர்களது வாழ்விடம் பற்றியோ, அதில் மீனவக் குழந்தைகளின் உயிர் பற்றியோ, சிறிதும் அக்கறையில்லாமல் செயல்பட்டுள்ளது.
அந்த " மீனவர் வாழ்விட உள்சாலையை" அதிமுக அரசின், மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின், அராஜகமான, அடாவடித்தனமான, அணுகுமுறையால், " லூப் சாலை" எனப் பெயரிட்டு, மீனவர்களது முழுமையான எதிர்ப்பையும் மீறி, முக்கியப் போக்குவரத்துச் சாலையாக மாற்றியது. சாந்தோம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி, முக்கியப் போக்குவரத்தை நடத்துங்கள் என்ற அறிவுபூர்வமான, ஆலோசனையை அதிமுக அரசு புறந்தள்ளி விட்டு, பாரம்பரிய கடல்சார் மீனவர்களின், பாரம்பரியமாக வசிக்கும் பகுதிக்குள், மாநகரத்தின் முக்கிய போக்குவரத்து சாலையை புகுத்தி, ஆக்கிரமிப்பு செய்து, மீனவர் வாழ்விடத்தை, அலங்கோலப் படுத்தியுள்ளது. அதனால், ஓடி விளையாடும் குழந்தைகள் விபத்தில் உயிரிழக்க வழிவகுக்கும்.
அது மட்டுமின்றி, ஆண்டாண்டு காலமாக, நொச்சிக்குப்பம் மீனவப் பெண்கள், நடத்திவரும், "கடலோர மீன் விற்பனைக் கடைகளை" அவர்களது வாழ்விடத்தை விட்டு, அகற்றி, பட்டிணப்பாக்கத்தில் புதிதாகக் கட்டித் தருகிறோம் என மாநகராட்சி மூலம் " வம்பு" பண்ணி வந்தது. ஒரு முன்னாள், மீன்வளத்துறை அதிகாரி மூலம் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு போட வைத்து,, கடற்கரையிலுள்ள சிறு கடைகளை ஒழுங் குபடுத்தி, அழகுபடுத்தப் போகிறோம் என்று காரணம் கூறிய மாநகராட்சி அதிகாரிகள், அதன் நீட்சி எனக் கருதி, மீனவர் வாழும் நொச்சிக் குப்பத்திற்குள்ளும், உள்ள "மீனவப்பெண்களின் மீன் கடைகளை" அகற்ற முரண்டு பிடித்தது.
அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. மீனவளத்துறையோ, மீனவர் தலனுக்காக, மாநகராட்சியிடம் கறாராக, எதிர்த்து வாதாடவில்லை. அதை மீனவர் இயக்கங்கள் கண்டித்து வந்தன. மேற்கண்ட இரண்டு, முக்கிய விசயங்களிலும், அதிமுக MLA ஆர். நடராஜ் , மாநகராட்சி அதிகாரிகள் கூறுவதைக் "கண்ணை மூடிக்கொண்டு" ஏற்றுக் கொண்டார். "அதிகாரிகள் உங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறுகிறார்களே" என மீனவர்களிடமே பேசினார்.
வெகுண்டெழுந்த மீனவர்கள், "கடற்கரை எங்களது ஆயிரமாண்டு வசிப்பிடம் குடிசை மாற்று வாரியம் எங்களுக்கு இங்கேயே வீடு கட்டித் தருகிறோம் எனக் கேட்டதற்காக, நாங்கள் இலவசமாக 1970 லேயே, எங்கள் இடத்தைக் கொடுத்துள்ளோம். நாங்களா ஆக்கிரமிப்புக்காரர்கள்?. கு.மா.வா.தான் ஆக்கிரமிப்பாளர்கள்" என்று சீறி விழுந்தனர். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ. மக்கள் கூறுவதை செவி மடுக்கவேயில்லை. அவர் டி.ஜி.பி, கமிஷனர் என்று உயர் அதிகாரப் பதவிகள் வகித்து விட்டு வந்துள்ளதால், அதிகாரிகள் சொல்வதையே, தனது சிரமேற்றிக் கொண்டார். அவருக்கு, கடல்சார் மீனவர்களது, பாரம்பரிய பண்பாட்டுப் பழக்க, வழக்கங்கள் பற்றி, புரியவும் இல்லை. தெரியவும் இல்லை. விளங்கவும் இல்லை. கடலும், கடற்கரையும் மீனவருக்கே சொந்தம் என்ற முழக்கத்தை அவர் செறித்துக் கொள்ள முடியவில்லை.
அவர் சமூக நீதி பற்றி அடிச்சுவடே அறியாத நிலையிலிருந்தார் ஒரு அதிகாரியின் மனோ நிலையிலேயே இருந்து வந்தார். அது அரசியல்வாதிக்கு அழகில்லையே! "கடல் சார் உலகம் வேறு. நிலம் சார் உலகம் வேறு" என்பதை அவர் அறிந்திருக்க வில்லையே! ஆகவேதான், நொச்சிக்குப்பம் முதல் பட்டிணப்பாக்கம் வரையுள்ள மீனவர் மற்றும் தலித் மற்றும் கடலோர மக்கள் தாங்கள் அதிமுகவிற்கு ஒரு வாக்கு போட்டால், திமுகவிற்கு இரண்டு வாக்குகள் என இப்போது போட்டுள்ளார்கள். அதனாலேயே பதினைந்து ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டை் என்று அதிமுகவினர் கூறிவந்த மயிலாப்பூர் தொகுதியில் ஓட்டை விழுந்து விட்டது.
அதனால் மீண்டும், மீனவர் வாழ்விட கடலோர உள்சாலையை "மீனவர்களிடமே திருப்பித் தர வேண்டும் என்ற குரல் புதிய ஆட்சியாளர்களை நோக்கி எழுகிறது" லூப் சாலை" என்ற பெயரை அகற்ற வேண்டும் மாநகரப் போக்குவரத்தை, " மீனவர் வாழ்விடக் கடலோர உள்சாலை வழியாக" விடக்கூடாது. "வாழும் இடத்திலேயே மீன் சந்தை வைக்க அனுமதிக்க வேண்டும். கு.மா.வா. மக்களது தேவையை புரிந்து கொண்டு, மக்களது விருப்பத்திற்கேற்ப குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும்." என்பதே திமுகவிற்கு வாக்களித்த மக்களது கோரிக்கை.
அடுத்து, பக்தர்களது வாக்குகள் யாருக்குத் திரும்பின எனக் காண்போம். கபாலீஸ்வரர் கோவில், தக்கார், அப்பல்லோ மருத்துவமனை உரிமையாளரது மாப்பிள்ளை, விஜயகுமார் ரெட்டி. இவர் தக்கார் என அறிவிக்கப்பட்ட நாள் முதல் கோவில் நிர்வாகத்தில் சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. அறங்காவலர்களாக வேறு யாரையும் நியமிக்க அவர் அனுமதிக்க வில்லை. எங்குமே நடக்காத அதிசயமாக, தானே தக்காராக 8 ஆண்டுகளாக இருக்கிறார். அதிமுக ஆட்சியின் மேலிட ஆதரவு என்பது போல அது காட்டப்பட்டது. தக்கார் கபாலி கோவிலுக்கு சாமி கும்பிட வந்து விட்டால், பக்தர்கள் யாரும் சன்னதிக்குள் நிற்கக் கூடாது.
2016 ம் ஆண்டு இந்தத் தக்கார் தலைமையில், இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் காவேரி, மூலம் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்குப் பிறகு, மூன்று ஆண்டு முன்பு, கபாலி கோவிலுக்குள் உள்ள புன்னை வன நாதர் எனும் சாமி சிலை அருகே இருந்த "மயில் சிலை"யைக் காணவில்லை. இதனாலும் பக்தர்கள், வருத்தத்திலும், கோபத்திலும் இருந்தனர். தேர்தல் பரப்புரையில், திமுக வேட்பாளர் வேலு, "தான் வெற்றி பெற்றால், மயிலையை ஆன்மீகத் தலமாக மாற்றுவேன்" என்று பரப்புரை செய்தார்.
இதனால், பக்தர்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் வாக்குகள் உட்பட 15,000 க்கும் மேற்பட்ட, வாக்குகளும், திமுகவிற்கு விழுந்திருக்கிறது. அடுத்து கோவில் நிலங்களில் குடியிருப்போர்களது வாக்குகள். அறநிலையத்துறை கோவில் நிலத்தில் குடியிருப்போரது, வாடகையை, பயங்கரமாக ஏற்றியது. கோலவிழி அம்மன் கோவிலிலிருந்து, வல்லீஸ்வரர் கோவில் வரை குடியிருப்போரையும், கபாலி கோவில் நிர்வாகம், தங்களது வாடகைதாரிகள் எனக் கூறி, ஆயிரக்கணக்கான ரூபாயாக, வாடகையை உயர்த்தியது.
குடியிருப்போர் அதை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் அந்த நிலம், "அரசு புறம்போக்கு" என்றும், கோவில் நிலமில்லை எனவும் ஆவணங்களுடன் குடியிருப்போர் நலச்சங்கம், ஆறு மாதம் முன்பு, கண்டு பிடித்ததுக் காட்டிய பிறகு, கபாலி கோவில் நிர்வாகம் வாயடைத்து நின்றது. மயிலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே, ஒரு திருமண மண்டபத்தைக் கட்டி, கோவில் நிர்வாகம் செய்து வந்த வாடகைக் கொள்ளை அதிகம். ஒரு நாளைக்கு பத்து லட்சம் என வாடகையை உயர்த்தி, பக்தர்களது வெறுப்புக்கு உள்ளாகினர். இதுபோல, "ஆட்சிக்கு எதிரான வாக்குகள்" திமுக விற்கு விழுந்துள்ளன. மேற்கண்ட கோரிக்கைகளை புதிய ஆட்சி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில், மயிலாப்பூர் தொகுதி மக்கள் இருக்கிறார்கள்.