Skip to main content

"இளம் பெண்ணுடன் எனது ஃபோட்டோவா?" - உயிரை மாய்த்துக் கொண்ட உ.பி மடாதிபதி.. சந்தேக வலையில் சீடர்கள்!

Published on 22/09/2021 | Edited on 23/09/2021

 

hisotry of narendra giri and his disciple anandh giri ABAP Monastery

 

அகில பாரதியா அகார பரிஷத்  மடத்தில் (ABAP), மடாதிபதி நரேந்திர கிரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்தரப் பிரதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இவரின் மரணத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் இந்நாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நரேந்திர கிரியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இவரின் மரணம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் மூவரின் பெயர் இருப்பதாக தெரிவித்த போலீசார், அவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


போலீசாரின்  முதற்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாக சாமியார் கிரி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்கொலைக் கடிதத்தில், தற்கொலைக்கான காரணமாக, அவருடைய சீடர்கள் ஆனந்த் கிரி, சந்தீப் திவாரி, அத்யா பிரசாத் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழ, நாமும் தீவிர விசாரணையில் இறங்கினோம். தோண்டத்தோண்ட பெரும்பூதங்கள் அகப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. யார் இந்த நரேந்திர கிரி? அவருடைய மிக முக்கியச் சீடரான ஆனந்த் கிரி யார்? அவருக்கும் இந்த தற்கொலைக்கும் என்ன சம்மந்தம்? அதிகாரப் பீடங்களுக்கு நெருக்கமாக இருக்கும் மடாதிபதி நரேந்திர கிரி தற்கொலை செய்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன? விரிவாகப் பார்க்கலாம். 

 

hisotry of narendra giri and his disciple anandh giri ABAP Monastery
       இடப்பக்கம் : 'சீடர்' ஆனந்த் கிரி         |     வலப்பக்கம் : 'மடாதிபதி' நரேந்திர கிரி

 

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ளது அகில பாரதியா அகார பரிஷத் மடம். இந்தியாவில் உள்ள பல லட்ச இந்து மத சாமியார்களின் புகழ்பெற்ற மடமாக இந்த மடம் விளங்கி வருகிறது. சுமார் 14 சாது சங்கங்கள் இந்த மடத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. ஆதிசங்கரரை முன்னோடியாகக் கொண்டு செயல்பட்டு வரும் அகார பரிஷத் மடம், இந்துக்களை பாதுகாப்பதற்காக 1565-ம் ஆண்டு ஆயுதம் தாங்கிய சாதுக்களின் அமைப்பை உருவாக்கியதன் மூலம் புத்துயிர்ப்புடன் இயங்கிவந்தது. இந்த மடம், சர்ச்சைக்குரிய 'ராமஜன்மபூமி' இயக்கத்தை ஊக்குவித்து ஆதரித்துள்ளது. பெரும்பாலும் வைணவம் மற்றும் சைவ மத சாதுக்களைக் கொண்டுள்ள இம்மடத்தின், பீடாதிபதியாக மஹந்த் நரேந்திர கிரி செயல்பட்டு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத், துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலருடன் நெருக்கம் பாராட்டி வந்தவர் மடாதிபதி நரேந்திர கிரி. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மதிய உணவை முடித்துக்கொண்டு தனது அறைக்குள் சென்றவர், நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால், பதறிப்போன அவரது பக்தர்கள் கதவைத் தட்டியுள்ளனர், அவரது செல்ஃபோன் எண்ணுக்கு தொடந்து அழைத்துள்ளனர். ஆனால், மடாதிபதி கிரியிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. 


விக்கித்துப் போன பக்தர்கள், கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார் நரேந்திர கிரி. இதனால், அதிர்ச்சியடைந்த மடத்தின் நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் சொல்லியுள்ளனர். முக்கியப் புள்ளியின் மரணம் என்பதால், வழக்கத்தை விட விரைந்துவந்தது போலீஸ். அவரின் அறைய சோதனையிட்டதில், தற்கொலைக் கடிதமும் ஒரு வீடியோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. வீடியோ குறித்தான விசாரணை நடைபெற்று வரும் வேளையில், கடிதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், "எனது ஃபோட்டோவை, ஒரு இளம்பெண்ணுடன் இருப்பது போல மார்ஃபிங் செய்து அதைச் சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். என்னால் அவமானத்துடன் வாழமுடியாது. அதனால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என நீளும் அந்தக் கடிதம், சுமார் 8 பக்கங்களைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

hisotry of narendra giri and his disciple anandh giri ABAP Monastery


ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள ஆனந்த் கிரி, "இது பெரிய சதி. நான் அவருடன் 25 ஆண்டுகள் இருந்துள்ளேன். அவர் ஒருபோதும் தற்கொலை முடிவுகளை எடுக்கக் கூடியவர் அல்ல. நரேந்திர கிரியின் மர்ம மரணத்தில் போலீஸ் அதிகாரிகள், நில மாஃபியாக்கள் ஏன் அவரது குடும்ப உறுப்பினர்களே சம்மந்தப்பட்டிருக்கக் கூடும். நான் அவரிடம் பேசும்போது அவர் நலமாக இருப்பதாகக் கூறினார். அவர் மன அழுத்தத்திற்கு உட்பட்டதாக போலீஸ் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் வலுக்கட்டாயமாக தற்கொலை செய்துகொள்ள தூண்டப்பட்டுள்ளார். தற்கொலை கடிதத்தில் என் பெயரை எழுத அவர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார். அல்லது, வேறு யாரோ என் பெயரை எழுதியுள்ளனர்" என்றார்.


அகில பாரதியா அகார பரிஷத் மீது, கடந்த 2004-ம் ஆண்டு முதல் பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வந்தன. நரேந்திர கிரிக்கும் அவரின் சீடரான ஆனந்த் கிரிக்கும் இடையே சில மோதல்கள் வெடித்தன. ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்ட இருவருக்குள்ளும் சில காலம் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது. ஆனால், கடந்த மே 26-ம் தேதி தன்னை மன்னித்துவிடும்படி சாமியார் நரேந்திர கிரியின் காலில் விழுந்துள்ளார் ஆனந்த் கிரி. மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் பிரச்னைகள் மட்டும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்துள்ளது. 

 

hisotry of narendra giri and his disciple anandh giri ABAP Monastery


ஹண்டியா தொகுதி எம்எல்ஏ மகேஷ் நாராயண் சிங்கிடம் இருந்து நிலம் வாங்கியது, பஞ்சாயத்து அகாரா ஸ்ரீநிரஞ்சனி செயலாளரான மஹந்த் ஆஷிஷின் மர்ம மரணம், பீர் கடை ஆபரேட்டரை மகாமண்டலேஸ்வரராக பட்டாபிஷேகம் செய்துவைத்தது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியவர்தான் மறைந்த பீடாதிபதியான நரேந்திர கிரி. குரு நரேந்திர கிரி வாழ்கையில் சில சர்ச்சைகள் இருந்தால், சிஷ்யர் ஆனந்த் கிரி வாழ்கையே சர்ச்சைகளால் நிரம்பி வழிகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இரண்டு ஆஸ்திரேலிய பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆஸ்திரேலிய போலீசாரால் கைது செய்யப்பட்டவர் ஆனந்த் கிரி. சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளா திருவிழாவில், இவர் வாளுடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் பெரும் சர்ச்சையானது. மடாதிபதி நரேந்திர கிரியுடன் ஏற்பட்ட மோதலால் சில காலம் மடத்திற்குள் நுழைய இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாபா ராம்தேவுடன் யோகாசனம் பயிற்சியை மேற்கொண்ட ஆனந்த் கிரி, பல பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார். இப்போது நரேந்திர கிரி மரணத்துடன் இணைத்துப் பேசப்படுகிறார்.


மாடாதிபதியின் மர்ம மரணத்தை தவிர, மற்ற அனைத்துச் சம்பவங்களுமே மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கும் நித்தியானந்தாவுக்கும் இடையில் நடந்த சச்சரவுகளைத்தான் நியாபகப்படுத்துகிறது. பாலியல் வழக்கு, கொலை வழக்கு, அதிகாரப் பீடங்களுடன் இருக்கும் நெருக்கம், மடத்தின் நிர்வாகம் குறித்த சர்ச்சைகள் உள்ளிட்ட சமாச்சாரங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஆனந்த் கிரி இன்னொரு கைலாசத்தை கட்டி எழுப்பிவிடுவாரோ எனும் அச்சம் மேலெழுவதை தவிர்க்க முடியவில்லை.
 

 

 

Next Story

'பாஜக நீடித்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது' - அகிலேஷ் பேச்சு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
'Youngsters will not get married if BJP rule continues' - akilesh yadav speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிய இருக்கிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது எனப் பேசி உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த நிலையில், சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் நடைபெற்ற ஹோலி விழாவில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அரசு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதால் உத்தரப் பிரதேசத்தில் அரசுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வயதாகிவிடும். அதனால் அவர்களுக்கு திருமணம் நடக்காத சூழல் கூட ஏற்படும்' எனக் கடுமையாக விமர்சித்தார்.

Next Story

“என்னைப் பற்றியும், எனது குணத்தைப் பற்றியும்...” - பிரியங்கா காந்தி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP MLA sensational allegation on Priyanka Gandhi

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு எதிராக பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி சதர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ அதிதி சிங். மறைந்த மூத்த அரசியல்வாதியான அகிலேஷ் சிங்கின் மகளான அதிதி சிங், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து, அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். அதன் பிறகு, ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், அதிதி சிங் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மக்களவைத் தேர்தலில் சீட் வேண்டுமென்றால், என்னை பற்றியும், எனது குணத்தை பற்றியும் தவறாகப் பேசும்படி என்னுடைய முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்” என்று கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.