தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்குக் கனமழை பொழியும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் சென்னை எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது..
"தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதத்திலிருந்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. அதனால் வந்த சேத விவரங்களை மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்பி நிவாரணம் கோரியுள்ளோம். நேற்றைய தினம் இதுவரை இல்லாத அளவிற்குத் தென் மாவட்டங்களில் மழை பொழிந்திருக்கிறது. இது ஒரு சில பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தாலும், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வழிவகை செய்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் நேற்று அதிகப்படியான மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவிற்குக் கனமழை பெய்துள்ளது. எனவே அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
மழை வரும் என்ற அறிவிப்பு வந்த உடனே நம்முடைய முதல்வர் விரைவாகச் செயல்பட்டுக் கடந்த 24ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் தொடர்பு கொண்டு மழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் விவாதித்தார்.
அதன் விளைவாக நேற்று பெய்த மழையில் எவ்வித உயிர்ச் சேதமும் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். நேற்று மட்டும் மாஞ்சோலை பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 செ.மீட்டர் மழை பொழிந்திருக்கிறது. அதன் காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆட்சியர் எடுத்து வருகிறார். மழை பாதிப்பிலிருந்து கரையோர மக்களைக் காக்கும் பொருட்டு அவர்களுக்கு உரிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, பெரம்பலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட 109 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, படுக்கை வசதிகளை நாங்கள் செய்திருக்கிறோம். மேலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதால் அவர்களின் வீடுகளை காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
சென்னையில் கடந்த மழையின் போது எங்கே தண்ணீர் தேங்கியது என்பது குறித்து ஆய்வு செய்து அங்கே மின் மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறது. மழை நீர் தேங்கியுள்ளது என்ற புகார் வந்தால் அதனை சில மணி நேரங்களில் வெளியேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. எனவே இந்த முறை கனமழை பெய்தால் கூட பாதிப்பு என்பது கடந்த மழை அளவுக்கு இருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதால் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். மத்திய அரசிடம் மழை நிவாரணத்தொகையை எட்டு தவணையாகக் கேட்டிருக்கிறோம். உடனடி சீரமைப்புக்காக 1200 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். அடுத்தடுத்த நிவாரணத்துக்காக இந்த தொகை கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நாம் கேட்ட தொகையை வழங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதற்கான அழுத்தத்தைத் தமிழக முதல்வர் கொடுப்பார். நமக்குக் கிடைக்க வேண்டிய உதவி நிச்சயம் கிடைக்கும்.
எனவே மழை பாதிப்புக்களைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. ஆண்டுதோறும் இத்தகைய பாதிப்புகளைச் சந்திக்கிறோம். எனவே தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் மக்கள் அச்சப்படத் தேவையில்ல. அரசாங்கம் சவாலைச் சந்திக்கத்தான் இருக்கிறது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.